Friday, December 12, 2014

அட்சயம்




எத்தனை இட்டாலும் 
நிறையாத பாத்திரமொன்றில் 
உன் அன்பையெல்லாம்
சேமித்துக்கொண்டிருக்கிறேன்... 
பாத்திரத்தில் இட்ட 
நுண்துளையாய் 
நின் கோபதாபங்கள்...
ததும்பி விடாமலிப்பதொரு தவம்...

Saturday, June 21, 2014

The Past or Le passe





சில நாட்களுக்கு முன் ”THE PAST" என்ற ஃப்ரென்ச் திரைப்படம் பார்த்தேன். நுணுக்கமான உணர்வுகளையும், அதிர்வுகளையும் வெளிப்படுத்தியதோடல்லாமல், பார்ப்பவர்களையும் உணரச் செய்யும்படியான காட்சியமைப்பும், திரைக்கதையும், மீண்டும் ஒரு ரெவ்யூ எழுத செய்து விட்டது... நான் சில நாட்களுக்கு முன் என்று சொன்னாலும், படத்தைப் பார்த்து கிட்டத்தட்ட இரு மாதங்களிருக்கும். இன்று மதியம் சாப்பிட்டதே மறந்து போய் விடும் எனக்கு, இத்தனை நாட்களாகியும் ஒவ்வொரு காட்சியும் அவ்வப்போது நினைவுக்கு வந்துக் கொண்டே இருப்பதால் இந்த பதிவை எழுதுகிறேன்.

கதை:
எப்போதோ மனம் ஒத்துப்போகாமல் பிரிந்துப்போன கணவன் மனைவி இருவர், இப்போது மனம் ஒத்து பிரிந்து விட வேண்டிசந்திக்கின்றனர். அதாவது, மனைவி இன்னொரு மணம் செய்து கொள்ள வேண்டி விவாகரத்து பெற்றுக்கொள்ள முன்னாள் கணவரை அழைக்கிறார். வந்த இடத்தில் மனைவியின் தற்போதைய காதலரின் முந்தைய திருமணத்திற்கு பிறந்த மகனும், இவரை மணப்பதற்கு முன் பிறந்த மூத்த மகளும், இவருக்கு பிறந்த மகளும் என மூன்று குழந்தைகளுடன் தன் மனைவியின் ஜீவனத்தை பார்த்து பச்சாதாபமும் வருகிறது. மனைவி தன் மூத்த மகளைப் பற்றியும், சமீப காலமாக ஒழுங்கற்று போன அவளது நடவடிக்கைகளைப் பற்றியும் இவரிடம் கூறி, “அவ உங்க செல்லம்தானே! நீங்கதான் கொஞ்சம் என்னன்னு கேக்கணும்” என்று கேட்டுக்கொள்கிறார். இதே காரணத்திற்காக தங்களோடு அதே வீட்டில் தங்கவும் சொல்கிறார். கணவர் முதலில் அந்த வீட்டிற்கு வர ஒப்புக்கொண்டாலும், மனைவியின் தற்போதைய காதலன் அந்த வீட்டிற்கு தங்க வருவார் என்பது தெரிந்ததும் சங்கடமும், சிறிது கோபமும் கொள்கிறார்.



மூத்த மகளின் ஏனோதானோவென்ற நடவடிக்கையை அவரே கண்கூடாக பார்த்த பிறகு, அவளிடம் அன்பாக விசாரிக்கிறார். அவளோ, தன் தாயின் புதிய காதலனையும், இந்த திருமணத்தையும் தனக்கு அறவே பிடிக்கவில்லை எனவும், இரவானால் வீடு திரும்பவே தனக்கு விருப்பமில்லை என்றும் சோகமும், மறுதலிப்பும் நிறைந்த கண்களுடன் தெரிவிக்கிறாள். மேலும், தன் அம்மா அந்த மனிதனை விரும்ப காரணமே இந்த தந்தைதான் எனவும், அவன் இவரை போலவே இருப்பதும், அவனும் இரானியன் எனபதும்தான் என்று குற்றம் சாட்டுகிறாள். இரவு வேலை முடிந்து வீடு திரும்பும் மனைவியிடம் இதை அவர் கூறவும், அவளோ மகளது சொற்களில் நியாயம் இல்லை என்றும், மேலும் தனக்கு தற்போதைக்கு வேறு வழியில்லை எனவும் தான் தற்போது கர்ப்பம் எனவும் சொல்கிறாள். மகளோ ‘கர்ப்பம் பற்றிய செய்தி உண்மையில்லை; மணம் புரிந்துக்கொள்ள தாய் சொல்லும் பொய்யாக இது இருக்கலாம்’ என்றும், அந்த மனிதன் அத்தனை நல்லவனில்லை, 6 வயது மகனின் தந்தையான அவன், தகாத காதலால் தன் மனைவியை தற்கொலைக்கு தூண்டியவன் என்றும் மனம் பொருமிக் கொண்டே சொல்கிறாள். தந்தை அதிர்ந்து போய் விவரம் கேட்க, மகள் அந்த மனிதன் ஒரு சலவைக்கடை வைத்திருப்பவன் என்றும், அவனது கள்ளக்காதலை பற்றித் தெரிந்ததும் மனைவி சலவைத்திரவத்தை குடித்து தற்கொலை செய்ய முயன்று ஆறு மாதமாக கோமாவில் இருப்பதாகவும் கூறுகிறாள்.




தந்தையிடம் இவற்றை சொல்கையில், மகள் மிகவும் மனமுடைந்து அழுகிறாள். பின் தன் தாயும் அவளது காதலனும் பரிமாறிக்கொண்ட கடிதங்களை தான் தான் அந்த காதலனின் மனைவிக்கு கடை எண் மூலம் தொடர்புக்கொண்டு மின்னஞ்சல் முகவரி வாங்கி அவற்றை அனுப்பியதாகவும், அந்த நாளன்றுதான் அவள் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் கூறுகிறாள். அந்த பெண் இப்போது மீளாத கோமாவில் இருப்பதற்கும், அந்த 6 வயது குழந்தை தாயின்றி போனதற்கும் தானே காரணம் என்று அழுகிறாள். எல்லாவற்றையும் கேட்டு அதிர்ச்சியில் உறைகிறார் இந்த கணவர். இந்த நிகழ்வுகளின் சங்கிலித்தொடரில் தானும் ஒரு கண்ணிதானோ என யோசிக்க தோன்றுகிறது அவருக்கு. ஒருவேளை தான் விலகாமல் இருந்திருந்தால் இத்தனையும் நிகழ்ந்திருக்காதோ என்றும் தோன்றுகிறது. முடிந்தவரை இந்த பிரச்சினையை முடித்து வைக்க பார்ப்போம் என எண்ணி மனைவியிடம் மகள் சொன்னவை அனைத்தையும் சொல்கிறார். அவள் உடனே மகளை கண்டபடி திட்டி வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறாள்.




வீட்டை விட்டு கிளம்பும் மகளை சமாதானப்படுத்தி அழைத்து வரும் அவர், இதற்கெல்லாம் அவள் காரணமில்லை என்றும், உண்மைகள் எப்போதுமே தெரிய வேண்டியவைதான் என்றும் சொல்கிறார். மீண்டும் வீட்டிற்கு வரும் மகள் தன் அறைக்கு சென்று உறங்குகிறாள். அவளிடம் சன்னமான குரலில் தாய் உரையாடும் காட்சிகள் அழகு.



தன் மகள் செய்ததை காதலனிடம் தெரிவிக்க அவனது வீட்டிற்கு செல்கிறாள் அந்த மனைவி. அவன் அங்கு அவனது மனைவி பயன்படுத்திய வாசனை திரவியங்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறான். கோமாவில் இருந்து அவள் மீள்வாளா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள கடைசி அஸ்திரமாக, அவளது நுகர்வு திறனை மருத்துவர் பரிசோதிக்க போவதாக தெரிவிக்கிறான். கூடவே அவன் பயன்படுத்திய வாசனைத்திரவியம் ஒன்றையும் வைக்கிறான். அது அவளுக்கு விருப்பமான ஒன்று எனவும் சொல்கிறான். ”மனைவியிடம் உனக்கு அவ்வளவு பாசமிருக்கிறதா?” என்று கேட்டு விட்டு, இவள் தன் மகள் செய்ததை முழுவதும் அவனிடம் விவரிக்கிறாள். அவனோ அந்த நாளன்று தன்னிடம் சண்டை போட்ட மனைவி, தங்களது சலவைக்கடைக்கு போகவே இல்லை என்றும்,  கடைத்தொலைப்பேசியில் அவள் பேசியிருக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறுகிறான்.

உடனே அவனது கடைக்கு சென்று, அங்கிருக்கும் பணிப்பெண்ணை அன்று என்ன நடந்தது என்று விசாரிக்கிறான். அவளோ, போனில் தொடர்பு கொண்டவர் மின்னஞ்சல் முகவரி கேட்டதற்கு தானே அதை கொடுத்ததாக கூறுகிறாள். கோபமடைந்து இத்தனைக்கும் நீதான் காரணம் என்று இரையும் இவன், உடனே அவளை வேலையை விட்டு போகுமாறு கூறுகிறான். அவள் தன் பொருட்கள் அனைத்தையும் வேகவேகமாக எடுத்து கொண்டு, அவனிடம் வந்து, “உன் மனைவி நானும் ஒரு ஈரானியள் என்பதால் எப்போதும் என்னையும் உன்னையும் இணைத்து சந்தேகப்பட்டுக்கொண்டு இருந்தாள். நான் இங்கு போதிய சான்றுகள் இல்லாமல் வேலை செய்வதால் எப்படியாவது என்னை வேலையை விட்டு துரத்திவிட துடித்தாள். வாடிக்கையாளருடன் வேண்டுமென்றே ஒரு பிரச்சினையை உருவாக்கி, அதை தீர்த்து வைக்க போலீஸ் வந்தே ஆக வேண்டும் என்று வேண்டுமென்றே பிடிவாதம் பிடித்தாள். வரும் போலீஸ் என் சான்றுகளை பரிசோதிக்கும்; என்னை சிறையில் அடைக்கும் என்ற திட்டத்தோடுதான் அவள் அதை செய்தாள். அவள் அந்த மின்னஞ்சல் மூலம் உண்மைகளை தெரிந்து கொண்டால் குறைந்தபட்சம் என் மேல் உள்ள வன்மத்தையேனும் மாற்றிக்கொள்வாள் என்பதால்தான் அப்படி செய்தேன். நான் அந்த மின்னஞ்சல் முகவரியை கொடுத்தன்னவோ உண்மைதான். ஆனால் அவள் அவற்றை திறந்தும் கூட பார்க்கவில்லை, பார்த்திருந்தால் என் முன்னால் வந்து சலவைத்திரவத்தை குடித்திருக்க மாட்டாள்; உன் காதலி முன்னால் போய் அதை செய்திருப்பாள்” என்றுக் கூறிவிட்டு விடுவிடுவென நடந்து சென்றுவிடுகிறாள். யாரைத்தான் தப்பு சொல்வது என நொந்துக்கொள்ளும் அவன் மருத்துவமனைக்கு கிளம்பி செல்கிறான்.

அவன் கொடுத்த வாசனைத்திரவியங்களை சோதித்து விட்டதாகவும், அவன் மனைவியிடம் ஒரு அசைவும் இல்லை எனவும் தாதி கூறுகிறாள். “எல்லா திரவியங்களை பயன்படுத்தினீர்களா?” என்று இவன் கேட்க “இல்லை; ஒன்றிரண்டுதான் பயன்படுத்தினோம்” என்று கூறி விட்டு நகர்கிறாள் தாதி. மனைவியின் அறைக்குள் செல்லும் அவன், அவளது விருப்பத்திற்குரிய, அவன் பயன்படுத்திய வாசனைத்திரவத்தை மெல்லிய தன் சட்டையில் சற்று தெளித்துக்கொண்டு பின் ஏதோ யோசித்து தன் கழுத்திலும் சிறிதளவு தெளித்துக் கொண்டு, அவள் கட்டிலை விசையால் உயர்த்தி அவளை உட்கார்ந்த நிலையில் வைக்கிறான். பின் அவளது கைகளின் மேல் தன் கையை வைத்து, அவளருகில் ”இந்த மணத்தை நீ கண்டு கொண்டாயானால் என் விரல்களில் மெலிதாகவேனும் ஒருஅழுத்தம் கொடு” என்று கேட்கிறான். அதை மீண்டும் மீண்டும் சொல்கிறான். நீண்ட நாள் கோமாவில் பயங்கரமாக மெலிந்தும், களையிழந்தும் போயிருக்கும் அந்த உருவத்தில் கண்களிலிருந்து கண்ணீர் வழிவது இடப்பக்கத்திலிருக்கும் நமக்கு தெரிகிறது; வலப்பக்கத்திலிருக்கும் கணவன் அதை கவனிக்காமல் எழ முற்படும் போது, அவளது கைகள் மெலிதாய் அசைந்து அவன் கரங்களை பற்றிக்கொள்கிறது. அந்த காட்சி படம் பார்க்கும் எவருக்கும் எப்போதுமே மறக்காது என்றே தோன்றுகிறது. பல சமயங்களில் நம் உடனிருப்பவர்களின் பிரியத்தை நாம் கவனத்தில் கொள்வதேயில்லையோ என ஒரு நிமிடம் நம்மை யோசிக்க வைக்கும் திரைப்படம்.

இந்த வாழ்வு அப்படி ஒன்றும் நிலையானத்தன்மை உடையதல்ல. நம் கூடவே இருப்பவர்கள் எப்போதும் தம் செய்கைகளினால் அவர்களது அன்பை உணர்த்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். பல சமயங்களில் நாம்தான் அதை உணர தவறி விடுகிறோம். பெற்றவர்களின் அன்பு நமக்கு திருமணமாகும்வரை புரிவதேயில்லை. நான் குளிக்கும் நேரத்திற்கேற்ப சரியான இடைவெளியில் ஹீட்டர் போட்டு சுடுநீர் தயாராய் வைத்திருந்த அப்பாவின் அக்கறையும் அன்பும், அவர் இறந்துப்போன சில நாட்களுக்கு பின், கணவருக்கும் குழந்தைக்கும் வேண்டியவற்றை தயார் செய்து விட்டு, எனக்கென்று சுடுதண்ணீர் வைக்கக்கூட நேரமில்லாமல் மார்கழிக்குளிரில் கோவையின் சில்தண்ணீரில் குளிக்கும்போதுதான் புரிந்தது. இன்னும் கூட என் சித்தி பெண்ணோ மாமா பெண்ணோ இந்த சீராடல்களை அனுவைப்பதை பார்க்கும்போது ‘எல்லாம் அம்மா வீட்ல இருக்கறவரைக்கும்தானே! பாவம்’ என்று ஒரு எண்ணமும், நான் சீராடிய நினைவுகளும் மாறி மாறி வருவது தவிர்க்கவே இயலாததாகி விட்டது.

எத்தனை உருகி உருகி கிடைத்த பொருளாய் இருந்தாலும், நமக்கே உரியதாக அந்தப் பொருள் ஆகி விட்ட பின்னர், சில நாட்களில் அது முக்கியத்துவம் அற்றதாகி போய் விடுகிறது. ஃபேஸ்புக்கோ வாட்ஸ்-அப்போ ட்விட்டரோ எப்போதும் இனிப்பாய் இருப்பவர்களுக்கு உடனிருக்கும் மனிதர்கள் மட்டும் உடனுக்குடன் அலுத்துப்போய் விடுவதை என்னவென்று சொல்வது? ஹ்ம்ம்ம்.... இப்படத்தின் ஒரு காட்சியில் நாயகன் சொல்வான், “அவ என்னை இந்தளவுக்கு விரும்பியிருப்பான்னு எனக்கு தெரிஞ்சுருந்தா இதெல்லாம் நடந்தே இருக்காது” என்று. எல்லாம் அர்த்தமற்று போன் பின் அந்த அன்பு புரிந்தால் என்ன, புரியாவிடில்தான் என்ன? இருக்கும்போது கொடுத்தால் தான் எதற்குமே மதிப்பு!!!

நேரம்  கிடைக்கும் போது பார்க்க வேண்டிய படங்களின் வரிசையில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்... :)

Tuesday, October 15, 2013

Monsoon Wedding - மை டக்கு!

ரொம்ப நாள் கழிச்சு ப்ளாக் எழுதணும்னு ஆசை வந்துடுச்சு... கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டு மூணு தடவை இது எழுதணும் அது எழுதணும்னு யோசிச்சாலும் ஏனோ எழுதவே இல்லை. திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையில் அத்தனை மாற்றங்கள்..... அய்யோடா. வாழ்க்கையில் கற்பனை கூட முடியாத யு டர்ன்கள். எல்லாத்தையும் தாண்டி லைஃப் போயிக்கிட்டு இருக்கு. ஒரு குட்டி பாப்பா வந்தாச்சு :). ஆதிரைன்னு பேர் வெச்சுருக்கோம். அவளோட செலவழிக்க நேரம் சரியாயிருக்கு.

ப்ரொஃபைல் நேம் மாத்தியிருக்கேன். காரணம், இந்த ப்ளாகர் ஐடி காலேஜ் எண்ட்ல நானும் என் ஃப்ரெண்டும் சேர்ந்து ஆரம்பிச்சது. REENA = Revathy + Aruna.
என் ஃப்ரெண்டுக்கு இப்போல்லாம் ப்ளாக்கிங்க்கு டைம் கிடைக்கறதில்லை. நானும் ப்ளாக் பக்கமே வர்றதில்லை. ஒரு ப்ரொஃபஷனல் டச் + நாங்க வளர்ந்துட்டோங்கிறதுனால இந்த நேம் சேஞ்ச்.

இந்த மூணு வருஷத்துல சில நல்ல புக்ஸ் படிச்சப்போதும் , நல்ல படங்கள் பார்த்தப்போதும், சில முக்கிய நிகழ்ச்சிகள் நடந்தப்போதும் இங்க பகிர்ந்துக்கணும்னு நெனச்சிருக்கேன். ஏனோ முடியலை. கணவரோட சேர்ந்து நல்ல திரைப்படங்கள் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். அதுல, சமீபத்தில் பார்த்த ஒரு படம்தான் MONSOON WEDDING.

ஒரு சராசரி இந்திய கல்யாணமும், அதில் பின்னப்பட்டிருக்கும் கதாமாந்தர்களும், சம்பவங்களும்தான் கதை. அதை இப்படி கவிதை மாதிரி சொல்ல முடியுமான்னு ஆச்சரியப்ப்டுத்தியிருக்காங்க இயக்குனர் மீரா நாயர். பெண்களை மையப்படுத்தாமல், பல பிரச்சினைகளை அழகா கையாண்டிருக்காங்க. பழமைக்கும், நவீனமயமாக்கலும் நடுவில் சிக்கி தவிப்பது டீன் ஏஜர்ஸ் மட்டுமல்ல, பெரியவர்களும் தான் என பல காட்சிகளில் உணர முடிகிறது.

கதையை ஐந்து இழைகளாக பிரிக்கலாம்.

1. மணமகள் வசுந்தரா தாஸ்
           பிரபலமான ஒரு டிவி சேனலில் பணிபுரிபவர். அங்கு அவரது சீனியரான ஒருவரை, அவர் மணமானவர் என்று தெரிந்தும் சில பொய்யான வாக்குறுதிகளை நம்பியோ என்னமோ, காதலிக்கிறார். வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் செய்யும் போது, மறுக்க முடியாமல் ஒத்துக் கொண்டாலும் காதலனை மறக்க முடியவில்லை. மணநாளுக்கு முந்தைய இரவு காதலனை சந்திக்க முற்பட, காருக்குள் காதல் செய்யும் இருவரையும், ரோந்து போலீஸ் பிடித்து கொள்கிறது. போலீஸ்காரர்கள் வசுந்தராவை அசிங்கமான வார்த்தைகளால் துன்புறுத்த, காதலனோ தள்ளி நின்று போனில் மனைவியை சமாதானப்படுத்துகிறான். அவனது காதலின் ஆழத்தை கண்டு கொண்டவள் காரை எடுத்துக்கொண்டு தப்பி வீடு போய் சேர்கிறாள். அவனது கயமைத்தனம் வெளிப்படும் இடம், நச். பின் நேர்மையாக மணமகனிடம் நடந்ததை சொல்வதும், சந்தோஷமாக மணமுடிப்பதும் அழகு.

2. மணமகளின் தந்தை, நஸ்ருதீன் ஷா/ அம்மா பிம்மி வர்மா

             அப்பர் மிடில் கிளாஸ் வகுப்பை சேர்ந்தவர். மகளின் திருமணம், மகனின் படிப்பு பற்றி சராசரி கனவுகள் கொண்டவர். சேமிப்புகளை மகள் திருமணத்துக்காக மகிழ்ச்சியாக கரைத்தாலும், எல்லாம் நல்லபடி நடக்க வேண்டுமே என கவலைப்படுவதும், தன் அண்ணன் மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை தான் அறியாமல் இருந்தது குறித்து மறுகும் போதும், பெண் இத்தனை சீக்கிரம் ஏன் பெரியவளாகி தன்னை பிரிகிறால் என்று ஏங்கும் போதும், ஒரு அழகான தந்தையை நாம் பார்க்க முடியும். ஐம்பது வயதுகளில் பல இந்திய தம்பதிகளுக்கு தாம்பத்ய வாழ்க்கை என்பது பல புற காரணிகளால் வாய்க்காமல் போய்விடும் சாத்தியக்கூறுகள் தான் அதிகம். ஆரம்ப காட்சி ஒன்றில் அதிகாலையில் நெருங்கி கொஞ்சும் மனைவியை உணராமல் கூட உறங்குபவர், மனம் குழம்பி தவிக்கையில் மனைவி மடியில் ஆறுதலடையும் காட்சி, வாழ்க்கைத்துணையின் அவசியம் எப்போதுமே தேவை என்பதை கூறும். கடைசிக்காட்சியை இவர் எடுக்கும் தைரியமான முடிவு, பலே,

3. மணமகளின் அக்கா(கஸின்), ரியா வர்மா/ மோஹன் ராய்

             சிறுவயதிலேயே தந்தையை இழந்த  ரியாவின் கனவு எழுத்தாளராக ஆவது. யு எஸ்ஸில் அதற்காக படிக்க விரும்புகிறாள். அவர்களது குடும்ப நண்பர் மோஹன் ராய் தானே செலவுகளை ஏற்பதாக அறிவிக்கிறார். குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ந்தாலும் ரியா ஏனோ அழுகிறாள். மோஹன் ராய் அடிக்கடி அவர்கள் குடும்பத்தை சேர்ந்த பென் குழந்தை அலியாவிடம் நெருக்கம் காட்டுவதை கண்காணித்துக்கொண்டே இருக்கிறாள். அலியா, ஒரு நாள் பெரியவர்கள் முத்தத்தை பற்றி விளையாட்டாக பேசி கொண்டிருக்கையில், அநாயாசமாக அளிக்கும் ஒரு பதிலை கண்டு ரியா அதிர்ச்சியடைகிறாள்/ எப்போதும் துறுதுறு குழந்தையாக இருக்கும் அலியா சமீப நாட்களாக சோர்ந்து போய் இருப்பதையும் அவள் உணர்கிறாள். தூக்க கலக்கத்தில் இருக்கும் அலியாவை, மோகன் ராய் காரில் ஏற்றி வெளியே கூட்டி செல்ல யத்தனிக்கும் வேளையில் வழி மறித்து அவரை பார்த்து கத்துகிறாள். கூட்டம் கூடி விடுகிறது. “எனக்கு நீ சின்ன வயதில் செய்த அநியாயம் போதாதா? இதில் உனக்கு என்ன கிடைக்கிறது” என அவள் கூச்சலிட அதை மோஹன் மறுக்கிறார். ரியா இனி இந்த இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்று கூறி வெளியேறுகிறாள். ரோட்டில் யாரோ ஒருவன் அவளை அசிங்கமாக கேலி பேசுகையில், விரலை உயர்த்தி ‘fuck you' என்பவள், குடும்ப நண்பரின் முகத்திரையை கிழிக்க முடியாமல் தவிக்கும் முரண், அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். ரியாவின் கண்கள் உயிர்ப்புடன் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் அசாத்தியமானவை.

4.அலிஸ் - பணிப்பெண்/ வெட்டிங் ப்ளானர் பி. கே. தூபே

      மணமகள் வீட்டில் வேலை செய்யும் பெண். அவளுக்கு கல்யாண ஏற்பாட்டாளர் தூபேயை பார்த்ததும் மையல். தூபேக்கும் அவளை மிகவும் பிடிக்கிறது. மணமகளின் அறையை சுத்தம் செய்ய போகும் அலிஸ், அங்கிருக்கும் அவளது நகைகளை பயமும் ஆசையுமாக எடுத்து அணிந்து அழகு பார்க்கிறாள். கண்ணாடியில் ஒரு இளவரசியின் ஒய்யார மிடுக்குடன் அவள் பார்க்கும் அழகு, கவிதை. அதை வெளி ஜன்னல் வழி தூபேயும் ரசிக்கிறான். அவன் என்ன பார்க்கிறான் என தெரிந்து கொள்ல ஆவலுடன் எட்டி பார்க்கும் அவன் உதவியாளர்கள் அலிஸை பார்த்து திருடி திருடி என கத்த, பயத்தில் உறைந்து போகிறாள் அலிஸ். தூபே “அவள் திருடி இல்லை” என அவர்களை திட்டி துரத்துகிறான். எனினும் அவள் அந்நிகழ்ச்சிக்கு பிறகு தூபேயை நிமிர்ந்தும் பார்ப்பதில்லை. மிகவும் வருந்தும் தூபே, அந்த வீட்டின் மணநாளன்று, ஒரு அழகான செவ்வந்திப்பூ பொக்கேயை கொடுத்து தன்னை மணக்க சொல்கிறான் அலிஸிடம். ஆடம்பரமான அந்த திருமண களேபரத்தின் ஓரத்தில், எளிமையாக இவர்கள் மணக்கிறார்கள். இவர்கள் சந்திக்கும் காட்சிகள் செவ்வந்திப்பூக்களால் நிறைக்கப்பட்டு ஒளிரும்

5. அயிஷா/ராகுல்

 மணவீட்டின் இளசுகள். சாடாரண காதல் கதை. . ஃபாரின் ரிட்டர்ன் ராகுலை நஸ்ருதீன் ‘இடியட். யூஸ்லெஸ்’ என திட்டிக் கொண்டே இருக்க, ஆயிஷா அவனுக்கு ஒரு நாள் உதவி செய்து நட்பாகிறாள். இளவயதுகளின் பட்டாம்பூச்சிகள் பறக்கும் காதல், உடல் உரசல்களுடன் தொடர்கிறது. ராகுலின் வெளிநாட்டு வளர்ப்பு இந்திய கலாச்சாரத்தில் ஒட்ட மறுப்பதை ஆய்ஷா காட்டமாக கூறி விட, கடைசியில் தேஸி நடனத்தில் பங்கேற்கிறான்.


திரைக்கதை தொய்வில்லாமல், நகைச்சுவை, திருப்பம் என அனைத்தும் கொண்டு கையாளப்பட்டிருப்பதும், மனிதர்களை எந்த மேல்பூச்சுமில்லாமல் வெளிப்படுத்தியிருப்பதும் மிகவும் அருமை. MONSOON WEDDING இந்திய சினிமா வரலாற்றில்  மிக முக்கியமான படம்என்றே எண்ணத் தோன்றுகிறது.

Tuesday, March 15, 2011

என் தங்கை கல்யாணி 2




போனில் பேசிய அப்பாவின் குரல் அவனை வெகுவாய் கலவரப்படுத்தி இருந்தது.... “பிரகாஷ் உன்னால இப்போ இந்தியா கிளம்பி வர முடியுமாப்பா?”

“ஏம்ப்பா... அம்மாக்கு ஏதாவது?”

“அம்மாக்கு ஒண்ணுமில்லப்பா.. உன் தங்கச்சிக்குதான்... ஏதோ கட்டி மாதிரி வந்திருக்குன்னு மாப்பிள்ளை ஆஸ்பத்திரி கூட்டிட்டு போனாராம்ப்பா... அங்கே கேன்சர்னு சொல்லிட்டாங்களாம். அவர் இப்ப நம்ம வீட்டுக்கு வந்து சொல்லிட்டு போனாரு” என்பத்ற்கு மேல் அப்பாவின் குரல் மிகவும் குழைந்து போனது.... “எனக்கு ரொம்ப பயமா இருக்கு பிரகாஷ்... என்ன பண்ரதுன்னு தெரியல. அம்மா அழுதுட்டே இருக்கா. தங்கச்சியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம். லீவு சொல்லிட்டு வாயேன்ப்பா”

இடி விழுந்தது போலிருந்தது அவனுக்கு. ‘என் வாழ்க்கைதான் போச்சு... பரவால்ல கல்யாணியாவது சந்தோஷமா இருப்பாளே’ன்னு ஆசைஆசையாய் கல்யாணம் பண்ணி கொடுத்த பெண். மசக்கையோடு பிறந்த வீடு வரவேண்டியவள், கேன்சரோடுதான் வர வேண்டுமா??? என்று ஒரு மனம் புலம்ப தொடங்க, ‘இங்க இப்போ உடனே லீவு கிடைக்குமான்னு தெரியலயே’ என இன்னொரு பக்கம் சிந்தனை. ‘சரி வரேன்ப்பா...’
‘ என்ன கேன்சர்னு சொன்னாங்க’ என்று கேட்க நினைத்தவனுக்கு, மனதுள் ஏதேதோ தோன்ற அந்த கேள்வியை கேட்கவே முடியவில்லை.

போனை வைத்தவனுக்கு எல்லாமே இருண்டது போல் இருந்தது. தங்கையை மனதுக்குள் நினைத்து பார்க்கவே முடியவில்லை. வேலையில் கவனம் செலுத்துவது சாத்தியமே இல்லத ஒன்று என தோன்ற அரை நாள் லீவு சொல்லி விட்டு தன் இருப்பிடத்துக்கு சென்றான். ‘தங்கையின் கணவருக்கு போன் செய்தால் என்ன? அவர் இத்தனை தடுமாறாமல் பேசுவார்’ என யோசனை வர அவருக்கு போன் செய்தான். அவர் சொன்ன தகவல்கள்... ’இந்த கொடுமையெல்லாம் எதுக்கு உலகத்தில் நடக்கிறது’ என அன்றெல்லாம் அரற்றல்தான். விஷயம் தெரிந்து கொண்ட அறை நண்பர்களுக்கும் கூட அவனை சமாதானப்படுத்த முடியவில்லை.

*********

ஒரு வழியாய் இரண்டு நாட்களில் சென்னை வந்து சேர்ந்தாயிற்று.
பிரகாஷ் அவனது தங்கையை பார்த்த போது அதிர்ந்தே போனான். கல்யாணம் செய்யும் போது பார்த்த பெண்ணா இவள்? எத்தனை போஷாக்காய் இருப்பாள்? ஏன் இப்படி வாடி போயிருக்கிறாள் கல்யாணி நிறம் மிகவும் கம்மி, சுமாரான அழகுதான் என்றாலும் அவளது முழங்கால் வரை நீண்ட தலைமுடி அத்தனைக்கும் ஈடு கட்டி விடும். சின்ன வயதிலிருந்தே அவர்கள் இருவரும் அதிகமாய் பேசி கொள்ள மாட்டார்கள். அவரவர் நட்பு வட்டத்துடன் விலகியே வளர்ந்தார்கள். அவள் ஒரு பொருட்டாக தோன்றியதே இல்லை அவனுக்கு. கடைசி இரண்டு வருடங்கள் மட்டும் தானே ஒரு நெருக்கம் வந்து சேர்ந்து கொண்டது. அது அவள் கல்யாணமாகி வேறு வீடு சென்று விடுவாள் என்பதால் இருக்கும் என்று அவன் நினைத்துக் கொள்வான்.

அதை தவிரவும் வேறு காரணங்களை காலம் தன் வசம் வைத்திருந்தது போலும். அவளை பார்ததும் அவனுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது. பேசவே முடியவில்லை. “எப்படி இருக்கே அண்ணா... உனக்கு தலைமுடியெல்லாம் நிறைய கொட்டி போச்சு அண்ணா. அங்கே வெயில் அதிகமா? லீவு போட்டு உன்னை வர வெச்சு கஷ்டப்படுத்திட்டேனா?” என்று தணிந்த குரலில் பேச ஆரம்பித்தாள் அவள்.

கல்யாணிக்கு வந்திருந்தது மார்பக புற்றுநோய். எத்தனை நாட்களாக இருந்ததோ? பாவிப்பெண் வீட்டில் எதுவுமே சொல்லவில்லை. அவள் கணவராகவே தான் டாக்டரிடம் அழைத்து சென்றிருக்கிறார். சில டெஸ்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது ‘இனி ஏதும் செய்ய இயலாத புரையோடிய பிரெஸ்ட் கேன்சர்’. இவளிடம் இன்னும் இதை சொல்லவில்லை. அவள் ‘ஆப்டோமெட்ரி’ எனப்படும் கண் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்ற்வள். ‘மருந்து சாப்பிட்டால் சரியாகி விடும்’ என்று சொல்லி வைத்தாலும், அவள் அனைத்தையும் உணர்ந்தே இருந்தது அவனுக்கு புரிந்தது.

*********
அவன் சென்னை வந்த பின் அங்கு இருக்க நேர்ந்தது வெறும் 40 நாட்கள் தான். எல்லாம் அதற்குள்ளேயே முடிந்து விட்டது.அந்த 40நாட்களும் அவனும், இரு குடும்பத்தாரும் பட்ட அவஸ்தை... மருந்து கொடுக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே “ரேடியேஷனும்’ தேவைப்படும் என டாக்டர் சொல்லி விட்டதால், அதற்கும் அவளை ஆட்படுத்தினார்கள். நாளுக்கு நாள் கல்யாணியின் தோற்றம் மெலிந்துக்கொண்டே வந்தது. ‘எத்தனை நாள் அவள் குண்டாய் இருக்கிறாள்’ என கேலி செய்திருப்பேன் என்று நினைத்துக்கொண்டான் பிரகாஷ்.

30வது நாளின் போது கேன்சர் அதிகம் முற்றியதால் கண் பார்வையை இழந்தாள் அவள். எத்தனை பேர் கண்களை பரிசோதித்திருப்பாள் என நினைக்கவே மனம் கனத்தது... நீண்ட தலைமுடி வேர்வேராக கொட்டியதில் ஆங்காங்கே தலையில் சொட்டை விழுந்தது. அவளிடம் தலையை மொட்டை அடித்து கொள்ள சொல்ல யாருக்கும் துணிவில்லை. கண்ணாடிகளே வீட்டில் எங்கும் இல்லாதவாறு பார்த்துக்கொண்டனர் அவளது கணவன் வீட்டில். தலையை அடிக்கடி தடவி பார்த்துக் கொண்டவள் கடைசியில் அவளே ‘எனக்கு மொட்டை அடிச்சு விட்டுடறீங்களா அத்தை” என அவளது மாமியாரிடம் கேட்ட போது, எல்லோருக்கும் வாழ்க்கையே பிடிக்காமல் போனது. அவளுக்காக, அவளது கணவனும், மாமியாரும் அவளுடனே மொட்டை அடித்து கொண்டனர்.

அந்த தினத்திற்கு சரியாக மூன்று நாள் கழித்து அவள் மரணித்தாள். வாழ்க்கையின் அத்தனை செயல்களும் அர்த்தமற்று போனது பிரகாஷிற்கு. தங்கையின் கண்வன் நிலை தன்னிலும் பரிதாபம். எங்கிருந்தோ வந்து தன்னுடன் வாழ்க்கையை பிணைத்து கொண்டவள் திடீரென கரைந்து போனதன் தாக்கம் அவனை மொத்தமாய் அசைத்து விட்டிருந்தது.

தங்கைக்காகவே வெளிநாடு வந்து, தன்னை மணக்க நினைத்தவளின் காதலை இழந்து போனதற்கு, இப்போது ஒரு பயனும் இல்லை. இந்தியாவிலேயே அப்பா அம்மாவுடன் இருந்து விட்டாலும் கவலையை தவிர வேறு எதுவும் மிஞ்ச போவதில்லை என்பதால் அவர்களை ‘ஒரே வருடத்தில் வந்து விடுகிறேன்’ என சமாதானப்படுத்தி விட்டு, அடுத்த ஐந்து நாட்களில் கிளம்பி வந்து விட்டான். இனி எங்கு வாழ்ந்தால் தான் என்ன?

இப்போதும் எல்லாம் வழக்கம் போல் தான் நடக்கிறது

ஏதோ நாட்கள் ஓடுகின்றன. உண்டு, உறங்கி, வாடிக்கையாளர்களுடன் மல்லுக்கட்டி, கூட வேலை செய்பவர்களின் பொறாமைக்கு ஆளாகி, எல்லாம் எப்போதும் போல் தான் நடக்கின்றன.

பி.கு : கதையின் கல்யாணி என்னுடன் வேலை பார்த்தவர். அவரது இந்த திடீர் இழப்பு அனைவரையுமே அதிர்ச்சி ஆளாக்கியது. இரு மாதங்களுக்கு முன்னே நிகழ்ந்த அவரது மரணத்தை மறக்க எனக்கே பல நாட்கள் ஆனதெனில் அவரது குடும்பத்தாரின் நிலையை என்னவென்று சொல்ல??
பொதுவாக மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் சமயத்தில், 35-40 வயதில் மட்டுமே, வரும் ஆபத்து அதிகம் என்று கூறப்படும். விதிவிலக்காக சில சமயங்களில் இளம்பெண்களுக்கும் இது வரலாம் என்பது பலருக்கும் புதிய தகவலாகவே இருக்கும். 40 வயதில் ஏதேனும் உடல்நலக்குறைவால் அடிக்கடி மருத்துவரிடம் போவதால், புற்றுநோய் முன்னமே கண்டறியப்படும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் இளம்பெண்களின் நிலை வேறு. அப்போது தான் திருமணமாகியிருந்தாலோ, கருவுற்றிருந்தாலோ அல்லது குழந்தைக்கு பால் புகட்டி கொண்டிருந்தாலோ வரும் ஹார்மோன் மாற்றங்களால், மார்பகங்களில் தென்படும் சிறு மாற்றங்கள் கவனிக்கப்படாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இதனால் இளம் வயதில் வரும் மார்பக புற்றுநோய் முற்றிய நிலையில்தான் சிகிச்சைக்கு வருகிறது. உயிர் பிழைக்கும் விகிதமும் இதனால் குறைந்து போகிறது.

செய்ய வேண்டியது:

பெண்கள் தங்கள் ஒரு பக்க மார்பகத்தில் மட்டும் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்பதை 3மாதங்களுக்கு ஒரு முறையேனும் சுயபறிசோதனை செய்து கொள்ள வேண்டும்

1. வீக்கம் - மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும்.

2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும்

3. முலைக் காம்பிலிருந்த இரத்தமோ வேறு திரவமோ கசியும்.

4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்)

5. சமீப காலமாக முலைக்காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும்.


மேற்கண்ட மாறுதல்களில் ஏதேனும் தென்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை அணுகவும்.

ஆரம்ப நிலையில் கண்டிபிடித்தால் மார்பகத்தை அகற்ற வேண்டிய அவசியமும் கூட இல்லை.

புற்றுநோயை எதிர்ப்போம். மகிழ்வுடன் வாழ்வோம்
(முற்றும்.....)

Monday, March 14, 2011

என் தங்கை கல்யாணி 1


இன்று மெயிலில் வந்திருந்த அவளின் திருமண அழைப்பிதழை மீண்டும் ஒரு தடவை பார்த்தான் பிரகாஷ். ’எப்படி சம்மதிச்சே பிருந்தா? தொடர்ச்சியா ஒரு வாரம் பார்க்க முடியாம போனாலே கஷ்டமா இருக்குன்னு சொல்லுவியே! இனி காலம் முழுக்க நாம பார்த்துக்க முடியாதே. என்னை பார்க்காம ஆறு மாசம் இருந்துட்டதால பிரிவு அத்தனை லேசாயிடுச்சா உனக்கு’ என்றெல்லாம் ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்தான். ஏற்கனவே கசக்க ஆரம்பித்திருந்த வெளிநாட்டு வாழ்க்கை இந்த கணம் முதல் முழுதாய் வெறுத்து போய் விட்டது. மாதம் ஒரு லட்ச ரூபாய் வாங்க இன்னும் எதையெல்லாம் இழக்க வேண்டியிருக்கும்.... என்னால் இனி இன்னொரு பெண்ணை மணந்து மனமொத்து வாழ முடியுமா? இதே காதல் அவளிடம் வருமா?? என ஆயிரம் கேள்விகள் மனதுக்குள்.

பிருந்தாவையும் குறை கூற முடியாது. ’அவன் நிறைய சம்பாதிச்சுட்டு வந்ததும் அவங்க வீட்ல உன்னை கல்யாணம் பண்ண ஒத்துக்குவாங்கன்னு எப்படி நம்பறே!! இவனுக்காக மூணு வருஷம் காத்திருந்த பின்னாடி இவன் கைவிட்டுட்டான்னா உனக்கு வயசு இருபத்தேழு ஆகியிருக்கும். இப்ப வர்ற மாப்பிளையும் கூட அப்போ வர மாட்டான். அப்புறம் ஏதாவது கிழவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்’ என்று அவள் அப்பா சொல்லியதை சொல்லி, “என்னை எதுக்காகவும் விட்டுட மாட்டேல்ல” என்று ஒரு மாதம் முன்பு போனில் அழுதவள், எதை நினைத்து குழம்பி இந்த முடிவி எடுத்தாளோ...

அவர்களது கடைசி சந்திப்பு நடந்த கடற்கரை காட்சி நினைவிற்கு வந்தது...

”நீங்க கண்டிப்பா மொரிஷீயஸ் போய்த்தான் ஆகணுமா பிரகாஷ்?” என்று நூறாவது முறையாக கேட்டவளை நிமிர்ந்து பார்த்தான் பிரகாஷ்.

“எனக்கும் கஷ்டமாத்தான்மா இருக்கு. ஆனா இப்போ இங்கே வாங்கற சம்பளத்தில ஒரு மாசத்தை ஈசியா கடக்கறது மட்டும் தான் முடியுமே தவிர, சேமிப்புல்லாம் சாத்தியமே இல்லை. உனக்கே தெரியும். இப்போதைக்கு எங்க வீட்டில நான் மட்டும் தான் சம்பாதிக்கறவன். என் சேமிப்புகளில் தான் தங்கை கல்யாணம் நடந்தாகணும். அவளுக்கும் 25 வயசாகுது. புது வேலையில மாதம் 1 லட்சம் சம்பளம். 3 வருஷம் அங்க இருந்தாக் கூட போதும். நம்மளோட எதிர்கால வாழ்க்கைக்கும் சேர்த்து சம்பாதிச்சுடுவேன் பிருந்தா. என்னை புரிஞ்சுக்கோ... ”

“புரியுது... ஆனா எங்க வீட்ல அத்தனை நாள் காத்திருக்க மாட்டாங்களே! இப்பவே நம்ம விஷயம் ஓரளவு தெரிஞ்சு குதிகுதின்னு குதிச்சுட்டு இருக்காங்க! எங்க ஜாதில இப்பல்லாம் பொண்ணே கிடைக்கறதில்லையாமாம். அத்னால நல்ல வரன் ஏதும் வந்தா இவங்க டார்ச்சர் தாங்க முடியறதில்லை. நீங்களும் கூட இல்லாட்டி நான் என்ன சொல்லி சமாளிப்பேன்?”

“அடுத்த வருஷ லீவுக்கு இந்தியா வரும் போது நம்ம கல்யாண நியூஸோட தான் வருவேன். ஒகேவா? அதுவுமில்லாம, எந்தங்கச்சி கல்யாணம் நடந்தாத்தானே நம்ம கல்யாணம் நடக்க முடியும்?”

“அதுவும் சரிதான். சரி நான் ஏதாவது படிக்கிறதா சொல்லி காலம் கடத்துறேன். வேறென்ன செய்ய? ஆனா, ஒரு வருஷம் எப்படி உங்களை பார்க்காம இருக்க போறேன்னு தான் தெரியல” என சொல்லும் போதே குரல் உடைந்து தேம்ப ஆரம்பித்தாள் பிருந்தா. எப்போதுமே இருவரும் பிரிந்து அவரவர் வீட்டுக்கு செல்கையில் அழுபவள் தான் அவள். ஒரு சில நாட்கள் பிரிவதற்கே அப்படி என்றால் இப்போது கேட்கவா வேண்டும். அவளை தேற்றி, அந்தி சாய்ந்த இருட்டில், சில எச்சில் முத்தங்கள் கொடுத்து அனுப்பிய காட்சி இன்றும் அவன் மனதில அழுத்தமாய் படிந்து கிடந்தது.

‘என்ன யோசிச்சு இனி என்ன ஆகப்போகுது?இதோ இன்னும் இருபது நாட்களில் ஊருக்கு போக வேண்டும். தங்கை கல்யாணத்துக்காக.. சட்டென்று நிச்சயமாகி விட்டது இத்தனை நாள் இல்லாமல். இரு வருடம் எனக்காக காத்திருந்தவள் இன்னும் ஒரு 25 நாட்கள் காத்திருக்காமல் போய் விட்டாள். தங்கை கல்யாணம் முடிந்த அடுத்த நாள் உன்னை இழுத்துட்டு போயிருப்பேனேடி என் தங்கம்... அத்தனை அதிரடியெல்லாம் உன்னை மாதிரி சீன் பார்ட்டிகளுக்கு சாத்தியமில்லை என்று சொன்ன மனதை புறக்கணித்தான். பேச்சிலர் வாழ்க்கை இன்றுதான் எப்போதையும் விட நரகமாய் உறைத்தது. எந்த சுவையும் இல்லாமல் இன்னும் எத்தனை நாள் நீளுமோ இது என்று புதிதாய் நெஞ்சில் பயம் பூத்தது. இதோடு இந்த வேலைக்கு முழுக்கு போட்டு விட்டு போய் விடலாமா? ஆனால் நான் எழுதிக்கொடுத்த 3 வருட ஒப்பந்தத்தை உடைக்க சில பல லட்சங்கள் அழ வேண்டுமே. அதற்கெங்கே போவது? இனி அங்கு போய்த்தான் என்ன ஆகப்போகிறது’ என்று நினைவுகளை வேரறுக்க முயற்சித்தான்

********

தங்கை கல்யாணத்தை முடித்து மீண்டும் இங்கு வந்து 6 மாதம் ஓடி விட்டது. தங்கை கல்யாணத்துக்கு ஒரு பத்து நாள் தள்ளி தான் பிருந்தாவின் கல்யாணம். அவளை நேரில் பார்த்து பேசி, மனதை மாற்றி, தன்னுடன் வருமாறு செய்யலாமா? என மனதுள் ஒரு நப்பாசை பூத்தது. ஆனால் செய்யவில்லை... இந்த மாதிரி என் தங்கை கல்யாணம் நின்றால் எத்தனை பேருக்கு அவமானம் என்றெல்லாம் எப்போதும் போல யோசித்ததின் பலன், அந்த ஆசைக்கு முழுக்கு போடப்பட்டது. வாழ்க்கை அதன் போக்கில் செல்லட்டும் என்ற இயலாமைதான் மிச்சம்.

ஏதோ நாட்கள் ஓடுகின்றன. உண்டு, உறங்கி, வாடிக்கையாளர்களுடன் மல்லுக்கட்டி, கூட வேலை செய்பவர்களின் பொறாமைக்கு ஆளாகி, எல்லாம் எப்போதும் போல் தான் நடக்கின்றன. ஏதோ அங்கே 3 ஜீவன்களாவது என்னால் சந்தோஷப்படுகிறதே என தன் குடும்பத்தாரை பற்றி நினைத்து கொண்டே வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு அப்பாவிடமிருந்து ஃபோன். பொதுவாக அவன் தான் இரவுகளில் போன் செய்வான். என்ன இன்று விசேஷம் என யோசித்துக்கொண்டே, “சொல்லுங்கப்பா. எப்படி இருக்கீங்க” என்றான்......

(தொடரும்....)

Wednesday, March 2, 2011

தபு சங்கர்கள் ஜாக்கிரதை!!!



நம் காதல் சொல்ல
புதுமொழியாய்
உன் புன்னகையும்,
என் கையெழுத்தும்!!




அபூர்வமாய் சில நாட்கள்
நீ சீக்கிரமே துயில் கொள்வாய்
நான் இரவெல்லாம்
வெயில் கொள்வேன்!



உன் மிரட்டல்களுக்கெல்லாம்
பயந்தவனில்லை;
அதட்டல்தான் கொஞ்சம்
அசைத்து பார்க்கிறது!



வேறெவரும் தங்குவதற்கில்லை;
ஊராரும் பெறுவதற்கில்லை;
எனக்கே எனக்காய்
நீ!!!!





மெல்ல சிரிக்கிறாயா,
சோம்பல் முறிக்கிறாயா,
தெரியவில்லை;
இங்கு புரையேறித் துடிக்கிறது
காதல்!

Friday, June 18, 2010

எனக்கான உன் கவிதைகள்....2


நாழிகைக் கொருமுறையேனும்
நினைவேறிடும் நிகழ்வில்,

நானுனக்கு தந்திட

யாதுள்ளதென எண்ணுகையில்,

என்னிருப்பில் மிச்சம் தாய் புகட்டிய தமிழொன்றே...

உனைத் தோள் சாய்த்துப் பதிவு செய்த

நிழற்படத்தின் நேரெதிரில்,

கூர் பார்வைஅதில் பதித்து,

இமையோரம் நீர் முட்ட

தமிழ் தந்தேன்...


******************

மார் புசித்த மழலையின் வாசம்,

இதழ் நனைத்த பூக்களின் தேசம்,

குளிர் மிகுந்து வாடையில் வீசும்,

இரவெரிக்கும் இறுக்கம் உன் சுவாசம்....


********************

பால் வெளியும் போதுமில்லை

புன்னகைக்கு...

சூல் கொண்ட பூவனங்கள்

முகிழ்த்தலொத்த

தேவதைக்கு....


*********************

பி. கு: என்னடா... இந்த பொண்ணுக்கு ஒரு கவிதையே ஒழுங்கா எழுத வராதே! எப்படி ஒரே ஸ்ட்ரெட்ச்ல மூணு கவிதையெல்லாம் போஸ்ட் பண்ணுதுன்னு யாரும் சந்தேகப்பட வேண்டாம்! இதெல்லாம் நான் எழுதினதே இல்லை! என்னவர் எனக்காக எழுதினதாக்கும்...(என்ன? 'போதும் ரொம்பத்தான் அலட்டிக்காதே'ன்னு ஏதோ மைன்ட் வாய்ஸ் கேக்குது... சரி சரி எல்லாம் இருக்குறதுதானே... கண்டுக்காதீங்க) இந்த மாதிரி இன்னும் நிறைய ஸ்டாக் இருக்குறதால இனி அடிக்கடி இப்படி போஸ்ட் பண்ணப்படும் என்று அறிவித்துக் கொள்(ல்)கிறேன்....