Tuesday, March 31, 2009

வானரம் ஆயிரம்



நீங்க யாராவது எக்ஸாம்ல பிட் அடிக்கிறது, copy அடிக்கிறது போன்ற சாதனைகளை பண்ணியிருக்கீங்களா? அப்படி பண்ணியிருந்தீங்கன்னா நிஜமாவே அது பெரிய வீரசாகசம் தாங்க... எவ்வளவு தில்லு வேணும் இதெல்லாம் பண்றதுக்குனு நான் புரிஞ்சுக்கிட்டது 7வது படிக்கும் போது...
நான் சின்ன வயசுலருருந்தே நல்லா படிக்கிற பொண்ணு. எப்பவுமே 1st ரேங்க் தான்(அட உண்மையாத்தான்ப்பா...)இப்படி போட்டியே இல்லாம 7வது வகுப்பு வரைக்கும் வந்துட்டோம். அப்போ தான் என் கிளாசுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்தா 'காயத்ரி'னு... வந்தவ ஃபர்ஸ்ட் ரேங்க்கை தட்டி பறிச்சுட எனக்கு ஒரே கடுப்பாயிடுச்சு.
எப்படியும் அடுத்து குவாட்டர்லி எக்ஸாம்ல நாம தான் 1st ரேங்க் எடுக்கணும்னு மும்முரமா களத்தில் இறங்கினேன். நான் அப்போ எங்க ஸ்கூல்லயே ப்ரைவேட்டா கம்ப்யூட்டர் கிளாஸ் போயிட்டிருந்தேன்.(வீட்ல என்னிக்கு நம்மை நிம்மதியா விட்டிருக்காங்க?) அந்த கம்ப்யூட்டர் லேப்லதான் எங்க ஸ்கூல் எக்ஸாமுக்கான கேள்வித்தாள்கள் எல்லாம் தயாராகும் போலிருக்கு.பரீட்சை ஆரம்பிப்பதற்கு முதல் நாள் எப்பவும் போல நானும் என் ஃப்ரெண்டும் கம்ப்யூட்டர் கிளாஸுக்கு போனோம். ரெண்டு பேரும் ஏதோ சின்சியரா பொட்டி தட்டிக்கிட்டு தான் இருக்கும் போது என் ஆருயிர் தோழி சும்மா இருக்காம கீழே இருந்த குப்பைத்தொட்டிய வெறிச்சு பார்த்துட்டு இருந்தவ, "இதென்னடி கார்பன் காபி மாதிரி இருக்கு" என அதிலிருந்து எதையோ எடுத்தாள்.ரெண்டு பேரும் அதென்ன என்கிற ஆராய்ச்சியில் இறங்கினோம்.(நாமதான் அப்பவே சயின்டிஸ்டுல!) அப்போதான் தெரிஞ்சுது அது எங்க எக்ஸாம் கொவஸ்டின் பேப்பர்ஸ் டைப் பண்ண யூஸ் பண்ணின கார்பன் காப்பினு... கைல மாட்டினதும் 7ஆம் கிளாஸ் பேப்பர். அப்படியே ரெண்டு குப்பைத்தொட்டிய கிளற, எல்லா சப்ஜெக்ட் பேப்பர்சும் சிக்கிடுச்சு...



எல்லாத்தையும் எடுத்துக்கிட்ட சந்தோஷத்துல தலைகால் புரியல எங்களுக்கு! குவாட்டர்லி எக்ஸாம்ல நான் 1st ரேங்கும் காயத்ரி 2nd ரேங்கும் வாங்கற அற்புத காட்சி அப்படியே கண் முன்னாடி விரியுது!குதூகலமா ரெண்டு பேரும் ட்யூஷன் வந்து சேர்ந்தோம்.(வீட்ல என்னிக்கு நம்மை நிம்மதியா விட்டிருக்காங்க?... ரிப்பீட்டு)
அங்கயும் போய் இதப்பத்திதான் சீரியஸ் டிஸ்கஷன். "என்ன அங்க பேச்சு" என்று அதட்டிய டீச்சரிடம், "ஒண்ணுமில்ல மிஸ்" என்று சொல்லி படிக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டே டிஸ்கஸ் பண்ணதுல ஒரு மாஸ்டர் பிளான் உருவாயிடுச்சு. நாங்க எவ்ளோ இரகசியமா பேசியும் எங்க கிளாஸ்மேட் ஒருத்தி பக்கத்தில் உட்கார்ந்திருந்தவ இந்த விஷயதை ஒட்டு கேட்டுருக்கா."எனக்கும் கொவஸ்டின் பேப்பர்ஸை காமிக்கணும். இல்லனா மாட்டி விடுவேன் மிஸ்கிட்ட" அப்படினு மிரட்ட ஆரம்பிசுட்டா(என்னா வில்லத்தனம்?) சரின்னு அவளையும் சேர்த்துக்கிட்டோம். ட்யூஷன் முடிஞ்சதும் எங்க வீட்டுக்கு வந்து ஒளிச்சு வெச்சுருந்த பேப்பர்ஸை எடுத்து ஆசையா பார்த்தோம். அப்போதான் கார்பன் பேப்பர்ல இருந்து எப்படி படிக்கிறதுனு டவுட்டு வந்துச்சு எங்களுக்கு."அதை xerox... எடுத்துடலாமா" என்று 3வது கூட்டாளி கேட்க "இது கருப்பா இருக்கே, ஜெராக்ஸ்ல வருமா?" என்று நான் கேட்க, "கடைக்காரனையே கேட்டு பார்ப்போம்?"னு மூணு பேரும் ஜெராக்ஸ் கடைக்கு போனோம்.



அங்க இருந்தவர் கிட்ட ஸ்டைலா தலைவி(நாந்தாங்க:)) கார்பன் பேப்பர்களை நீட்டி "இதெல்லாம் 3,3 காப்பி ஜெராக்ஸ் எடுக்கணும்"னு சொன்னேன். அந்த கடைக்காரர் ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துட்டு, அதுல ஒரு பேப்பர எடுத்து ஒரு வெள்ளை பேப்பர்ல வெச்சு அது கொவஸ்டின் பேப்பர்"னு கண்டுபிடிச்சுட்டார். அதுல வேற தெளிவா ஸ்கூல் பேரு, என்ன கிளாஸுனு போட்டு இருந்தது."எப்படி இது உங்களுக்கு கிடைச்சுது" என அவர் கேட்க "ஜெராக்ஸ் எடுக்க முடியுமா முடியாதா" என்று எகத்தாளமாக தலைவி மீண்டும் கேட்டார். "கொஞ்சம் இருங்க! எடுத்து தர்றேன்" என்றவர் பக்கத்தில் இருந்த டெலிஃபோனை சுழற்றியது எங்க ஸ்கூல் பிரின்ஸிபாலுக்கு. அவர் பேசும் போது தான் எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சுது, அந்த கடையே எங்க பிரின்ஸியோடதுதான்(இவங்கல்லாம் நம்மகிட்ட சொல்லிட்டா சைடு பிஸினஸ் ஆரம்பிக்கிறாங்க)."அங்கிள் ப்ளீஸ் அங்கிள்! போனை வெச்சுடுங்க!நாங்க போயிடறோம்" என ஓடிப்போகாமல் அங்கயே நின்னு தலைவி கெஞ்சிட்டு இருக்கும் போதே என் ஆருயிர் தோழியும், 3வது கூட்டாளியும் ஓடிப்போயிட்டாங்க. பிரின்ஸியும் அங்கு வந்து சேர என்குவைரி செஷன் ஆரம்பமானது. "என் பேர், ஓடிப்போன கயவாளிகள் பேரு, எந்த கிளாஸ்"னு எல்லாத்தையும் மிரட்டலின் பேரில் தலைவி உளறி விட்டு பின் விடுவிக்கப்பட்டாள்





சோகமாய் நடந்து வந்த எனக்கு தெருமுனையில் பாவமான மூஞ்சியோட நின்னுட்டு இருந்த கயவாளிகளை பார்த்ததும் கோபம் கோபமாய் வந்த்து."என்னடி ஆச்சு"னு கேட்டவங்க கிட்ட "நம்ம பேரெல்லாம் எழுதுக்கிட்டாரு பிரின்ஸி"னு புள்ளைக ரொம்பவே பயந்து போயிட்டாங்க. "இப்போ என்ன பண்றது?" என கேட்டவர்களிடம் "பேசாம பிரின்ஸிகிட்ட இனி இப்படி பண்ணலனு மன்னிப்பு கேட்போமா?" என்று யோசனை சொன்னது தலைவிதான். 3பேரும் அங்க போனா கடை பூட்டியிருக்கு."பிரின்ஸி வீடு பக்கத்திலதான். அங்கயே போயிடுவோமா?"‍இப்போது யோசனை 3ஆம் கூட்டாளியிடமிருந்து. அப்பவே இரவு ஒன்பது மணி. சரின்னு மூணு பேரும் அங்க போய் நின்னா, எங்க பிரின்ஸி ஈஸி சேர்ல சாஞ்சுக்கிட்டு விசாரணையை முதல்ல இருந்து தொடங்கிட்டாரு அவங்க வீட்டு வராந்தாலேயே. அந்த பக்கமா எங்கயோ சைக்கிள்ல‌ போன ஆருயிர் தோழியோட தம்பி எங்களை அங்க பார்த்துட்டு போய் அவ வீட்ல சொல்லிட்டான். ஏற்கனவே எங்க மூணு பேரையும் காணோம்னு தேடிட்டு இருந்த எங்க குடும்பம் பிரின்ஸி வீட்ல அசெம்பிள் ஆயிடுச்சு."சார்!நான் எப்பவும் 1st ரேங்க் தான் எடுப்பேன் இனி இப்படில்லாம் பண்ண மாட்டேன்" என தலைவி அழுது கொண்டே சொல்ல, உடனே ஆருயிர் தோழி "நான் எப்பவுமே 2ND ரேங்க் தான் சார்" என்றாள். "நான் எப்பவுமே 3rd ரேங்க் தான் சார்" இது 3ஆம் கூட்டாளி(மேடம் மினிமம் 3 சப்ஜெக்க்ட்டாவது ஃபெயில் ஆவாங்க). இதை கேட்டுட்டு எங்க பிரின்ஸி எங்க யாரையுமே நம்பாம கேவலமே ஒரு லுக்கு விட்டுட்டு விசாரணையை தொடர்ந்தார். நைட் இன்னும் சாப்பிடாத்தால டயர்டாயி நாங்க கெஞ்சறத நிறுத்திட்டோம். 2 மணி நேரம்... கதற கதற எங்க வீட்டில இருக்குறவங்க கெஞ்சி கூத்தாடி "இனி இப்படிலாம் பசங்க பண்ண மாட்டாங்க! விஷயத்தை பெருசு பண்ண வேணாம்"னு சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டு வர நைட் 11 மணி ஆயிடுச்சு.வீட்டுக்கு வந்து தனியா ஒரு விசாரணை கமிஷன். தலைவி இப்போது தேம்பி தேம்பி விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார். " ஏன் அக்கா அழர"னு என் தம்பி கிட்ட வந்து கேட்க, "ஒண்ணுமில்லடா அந்த கார்பன் பேப்பர் எல்லாத்தையும் அவங்களே எடுத்துக்கிட்டாங்கடா" என்றவளை எங்கப்பா முறைச்சாரு பாருங்க! அதுக்கப்புறம் இந்த வீரசாகசம் பக்கமெல்லாம் போறதே இல்ல!....

பி.கு: மூன்று வானரங்கள் சேர்ந்து செய்த சேட்டை என்பதால் இந்த தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. மற்றப்படி இது யார் எதிர்பார்ப்பையும் புண்படுத்துவதற்கல்ல;)))


Saturday, March 21, 2009

மடி சுமந்த மரணம்




என் பத்து மாதக்கனவு பலித்தது...
ரோஜாக்குவியலாய் தொட்டிலில் மலர்ந்தாய்...
உன் அழுகுரல் அமுதமாய் ஒலித்த போது,
என் பிரசவ அலறல்கள் மறந்து போயின...
உன்னை ஸ்பரிசித்து உணர்கையில் மோட்சம் பெற்றன என் கைவிரல்கள்...
நான் கனவுலகில் சஞ்சரிக்க தொடங்கினேன்...
'அம்மா' என்று என்னை எப்பொழுது அழைப்பாய்?
என் விரல் பிடித்து எப்போது நடை பழகுவாய்?
சிற்றாடை இடை உடுத்தி, பூச்சரம் வைத்து,
நெற்றி பொட்டிட்டு வளையல்கள் குலுங்க‌
சிறுமியாய் நீ வளர்ந்திடும் அழகு...
நினைக்கவே நெஞ்சம் இனிக்கின்றது என் கண்ணே!!!
நான் நினைவு திரும்புவ‌தற்குள் உனக்கு நாள் குறித்து விட்டனர்...
மனம் இருப்பின் மட்டுமே மனிதர்கள் என அறியப்படுவர்...
இவர்கள் ‌மனித உருவில் நடமாடும் மிருகங்கள்...
தாய்ப்பால் கள்ளிப்பால் ஆகிறது...
உயிர் கொடுத்த‌வ‌ன் உன‌க்கு எம‌னாய்...
கால‌ன் இப்போதெல்லாம் எருமையில் மட்டுமே வருவதில்லை...
இந்த வெளிச்ச உலகிற்கு நீ வந்திருக்கவே வேண்டாம்... என்
இருட்டான கருவறையே உனக்கு பாதுகாப்பு....

Monday, March 9, 2009

யாரேனும் பார்த்ததுண்டோ?




முந்தியடிக்கும் கூட்டம்...
மூச்சுவிட முடியாத நெரிசல்...
மோசமாய் கிடக்கும் சாலை...
மெதுவாய் நகரும் மனிதர்கள்..
பொதுவாய் அணுகும் சாலையோர வியாபாரிகள்...
அங்கங்கே கேட்கும் கூச்சல்...
பண்டிகை நாட்களின் முந்தைய மாலைகளில்
மும்முரமாய் திநகர் இரங்க‌நாதன் தெருவை கடக்கையில்
இத்த‌னை அவஸ்தையிலும் உள்ள‌ங்கை பிடித்தபிடி விடாமல்
ந‌க‌ரும் காத‌ல‌ர்க‌ளை பார்க்கையில்...
இத‌ழோர‌ம் சிரிப்பு ம‌ல‌ர‌த்தான் செய்கிற‌து:))

பெண் என்றொரு கவிதை



நகரப்பேருந்து ரோமியோக்களின் காதற்பெருக்கினால் ஏற்படும் அவதிகளும்,
பணிபுரியும் இடங்களில் உடனுறையும் ஜொள்ளர்களால் ஏற்படும் சங்கடங்களும்,
பணத்துக்காய் ஆடை துறக்கும் நமீதாக்களும் நயந்தாராக்களும்,
அன்னக்கரண்டியே கைகளாய் மாறிப்போன பல அம்மாக்களும்,
அலுவலகம், வீடு என அயராமல் அல்லல்படும் அணங்குகளும்,
தானே விலை கொடுத்து அடிமையாய் போகும் மணப்பெண்களும்,
இன்னமும் கண‌வனின் சந்தேகத்துக்காய் தீக்குளிக்கும் சீதைகளும் என,
யுகங்கள் கடப்பினும்,
இதிகாசங்கள் மறப்பினும்,
பெண்களின் நிலையில் அவ்வளவாய் மாற்றமில்லை,
எங்கள் இந்தியத்திருநாட்டில்...
எனினும் இங்கு நாங்களும் விமரிசையாய் கொண்டாடி முடித்தோம் மகளிர் தினத்தை...