Friday, December 19, 2008

நேசிக்கிறேன்...




பூவின்
இதழ்களில்வழியும்
பனித்துளியை
நேசிக்கிறேன்...





பனித்துளியில்
மின்னும்
பகலவனை
நேசிக்கிறேன்...






கடலின் அலைகளில்
தெறிக்கும்
நிலவின் ஒளியை
நேசிக்கிறேன்...



மழை நீரில்
மாண்டு போகும்
நீர்க்குமிழிகளை
நேசிக்கிறேன்...



மூச்சை நமக்குத்தந்தே
முதிர்ந்து போன‌
சருகுகளை
நேசிக்கிறேன்...

இந்த இயற்கையை
நமக்குத்தந்த‌
இறைவனை
நேசிக்கிறேன்...




இயற்கையை நேசிக்கும்
எந்த உள்ளத்தையும்
நான்
நேசிக்கிறேன்....

Wednesday, December 17, 2008

மழைக் காலங்களில்...




குடையின்றி மழை துவங்கியது அன்று மாலை...
நடைபாதை வழியில் என்னுடன் நீ...
நாளும் இடைவெளி விட்டு நடந்து செல்லும் நம்மை
அன்று நெருங்கி வரச்செய்திருந்தது மழைச்சாரல்...
அடைமழையில் அதிவேகமாய் கடந்துச்சென்ற பலர்
விரல் கோர்த்து வெகுபொறுமையாய் நடக்கும் நமக்காய்
புருவம் உயர்த்தி ஆச்சர்யம் காட்டினர்...
யாருக்கும் புரியவே இல்லை...
அங்கே சொட்ட சொட்ட நனைந்துக் கொண்டிருந்தது காதல்தான் என்று...
அன்றைய மழை தூறிய அந்த மாலைப் பொழுதை
மனதுக்குள் பொதித்து வைத்தேன் ஒருவரும் அறியாமல்....

Monday, December 15, 2008

காத்திருப்புகள்



நகம் கடித்து கடித்து நகர்கின்றன மணித்துளிகள்...
செய்கின்ற செயலில் செல்லாது சிதறும் என் எண்ணங்கள்...
அலைபேசி மேல் பதிந்து மீளும் பார்வைகள்...
தொணதொணக்கும் தோழிக்கு பதிலாய் அசட்டுச்சிரிப்புகள்...
நீ சொன்ன நேரம் கடந்து எத்தனை நேரம் ஆகி விட்டது என்று
கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே...
அவஸ்தை அவஸ்தையாய் நீள்கின்றன எனது காத்திருப்புகள்...
சீக்கிரம் CALL செய்து விடேன்....
காத்திருக்கின்றன என் காதுகளும் காதலும்....

மாலை மலரும் இந்நோய்....





காதினோர‌ம் உன் குரல் கேட்கையில் செவிமடல்கள் மலர்ந்துப் போகும்…

மெல்லியதாய் விழும் வார்த்தைகளில் என் நிலை மறந்துப்போகும்…

செவி சுமக்கும் முத்த சப்தங்கள் காற்றில் தடங்களற்று கரைந்து போகும்…

நிதர்சனப்பரிமாணம் உணரா கணங்கள் அழகான‌ கற்பனைகளில் கனன்றுப்போகும்...

உன் செல்லப்பெயர் அழைப்புகளில் தொட்டில் குழந்தையாய் மனம் தவழ்ந்துப்போகும்…

மறுதினம் முழுமையும் இதழ்கள் ஒளித்துகொண்ட புன்னகையுடன் மந்தகாசமாய் ஒளிரும்...

காதலின் செங்கோலில் கனவுகள் களமிறங்கி நம்மில் ஆதிக்கம் செலுத்த‌…

என் பொய்யான மறுப்புகளை மறைக்காமல் வெளிப்படுத்தித்தொலைக்கும் இந்த காதலுடனான‌ போராட்டம் தொடர...

கனவுகள் விரிந்து விரிந்து விடியலுக்குப்பின்னும் விழித்தங்கி...

ரகசியங்கள் பேசி பேசி தொலைந்து போகும் பல இரவுகளில்,

சிற்றின்பம் சிற்சில சமயங்களில் செவிவழியும் நுகரப்படுகிறது செல்போன்களில்...

Wednesday, October 29, 2008

இப்படியும்...





"அப்பா!இங்க வெச்ச என் மொபைலை காணோமே!" அன்றும் வழக்கம் போல் கல்லூரி கிளம்பும் அவசரத்தில் அனைத்தையும் தேடிக்கொண்டிருந்தாள் ஆராதனா."டி.வி மேல வெச்சிருப்பே பாரு!" என்று அப்பாவின் குரல் கேட்டு மொபைலை எடுத்துக்கொண்டவள் "ஏம்பா சார்ஜ்ஜே இல்ல மொபைல்ல காலைல ஞாபகப்படுத்தலாம்ல?" என்றாள். "நீ காலேஜ் படிக்கிறியா, நான் படிக்கிறேனானு தெரியல" என்று அலுத்துக்கொண்ட ஆராதனாவின் அப்பாவிற்கு 45 வயது.Lic ‍இல் பொறுப்பான பதவியில் இருப்பவர். செல்ல மகளின் படிப்புக்காக தஞ்சையில் இருந்து மாற்றல் வாங்கி சென்னை வந்து தனிவீடெடுத்து அவளுடன் தங்கியிருக்கிறார். ஆராதனாவின் அம்மாவிற்கு மாற்றல் கிடைக்காத‌தால் அவளது தாத்தா,பாட்டி,அம்மா ஆகியோர் தஞ்சையிலேயே இருக்கின்றனர்.


வளர்ந்த பெண்ணானாலும் ஆராதனாவிற்கு எல்லா விஷயங்களிலும் அப்பாவின் உதவி வேண்டும். நிமிடத்திற்கொரு முறை அதுவும் காலை கல்லூரி செல்ல தயாராகும் போது "அப்பா!அப்பா!" என்று அலறிக்கொண்டே இருப்பது அவள் வாடிக்கை. இருவரும் காலையில் சமையலில் இறங்குகிறேன் பேர்வழி என்று செய்யும் ரகளைகள் தான் உச்சபட்ச காமெடி. ஒரு வழியாக அவள் கிளம்பும் போது "குடை எடுத்துக்கிட்டியா?கர்ச்சீஃப் எடுத்துக்கிட்டியா?" என ஒவ்வொன்றாக நினைவுப்படுத்துவார் அப்பா."நேரமாயிடுச்சு! போப்பா" என சிட்டாக பறந்து விடுவாள் ஆராதனா அவளது ஸ்கூட்டியில். "பார்த்து போம்மா" என்ற குரல் காற்றில் அவள் காதுகளை எட்டினால் ஆச்சரியம் தான். அவளுக்கு அப்பாவின் சொற்களோ அவர் செய்யும் உதவிகளோ ஒரு பொருட்டாய் தோன்றியதேயில்லை.


ஆராதனா கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் கடைசி வருடம் மருத்துவம் படிக்கும் பெண்: கடைசி வருடம் 'ஹவுஸ் சர்ஜன்' என்பதால் வெவ்வேறு துறைகளில் சில சில வாரங்கள் பணிபுரிய வேண்டியிருக்கும்.இப்போது ஆராதனா கண்மருத்துவத்துறையில் இருந்தாள். போனதுமே அன்று நிறைய நோயாளிகள் காத்துக்கொண்டிருந்தனர் அவுட்பேஷன்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில். முதல் நோயாளி ஒரு வயதான மூதாட்டி. கண்பார்வை மங்கல் என்று பாட்டி கூற பரிசோதித்ததில் "கண்புரை" என்று தெரிந்தது. கோப்பினில் எழுதி சீனிய்ர் டாக்டரின் அறைக்கு போகச்சொல்லி விட்டு நிமிர்ந்தால் அடுத்த பேஷன்ட் 20 வயதேயான இளம்பெண். "ஏறக்குறைய நம் வயதுதான். சும்மா முழு கண் பரிசோதனைக்காக வந்திருப்பாள்" என்று நினைத்துக்கொண்ட ஆராதனா, "சொல்லுங்க மிஸ். நிர்மலா, என்ன பிரச்சினை கண்ல?" என்று ஆரம்பித்தாள். அந்த பெண் "கண் செக்கப் பண்ணிக்கலாம்னு வந்தேன் மேடம்" என்றாள் மிகுந்த தயக்கத்தோடு. இதற்கென்ன இத்தனை தயக்கம் என்று வியந்த ஆராதனா "ஹெல்த் எல்லாம் நார்மலா உங்களுக்கு?பார்வை எப்படி தெரியுது?" என்று அடுத்தடுத்த கேள்விகளை கேட்கத்தொடங்கினாள். "பார்வை எல்லாம் நல்லாத்தான் தெரியுது டாக்டர். ஆனா..." என்று மீண்டும் தயங்கிய அந்த பெண்ணிடம் "சொல்லுங்க" என்றாள் ஆராதனா. "எனக்கு... syphilis இருக்கிறதா 2 மாசம் முன்னாடி கண்டுப்பிடிச்சாங்க டாக்டர். அதுக்கான ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு இருக்கேன்" என்று ஆராதனாவின் கண்களை பார்க்காமல் தவிர்த்துக்கொண்டே சொன்னவள் ஆராதனாவை ஏறிட்டுப்பார்த்து "அது கண்ணையும் பாதிக்குமாமே!அதான் செக்கப் பண்ணிக்கலாம்னு... என்று கூறிய போது அவளுக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. "syphilis என்பது பால்நோய். இவளோ திருமணமாகாத இளம்பெண். எப்படி?" என்று தனக்குள் யோசித்தவள் தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல், மேற்கொண்டு பரிசோதனைகளை செய்யத்தொடங்கினாள்.


நல்ல வேளையாக அந்த பெண்ணின் கண்களில் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் ஆராதனாவின் மனதில் குழப்பங்களின் பாதிப்பு ஓய்வதாய் இல்லை. அவள் அதற்கு போன மாதம்தான் மகப்பேறு மற்றும் பெண்கள் நலதுறையில் பணியிலிடப்பட்டிருந்தாள். திருமணமாகாத சில இளம்பெண்கள் பொய்யான தாலியுடன் கருக்கலைப்புகள் செய்வதைப்பற்றி அங்கு சில நர்சுகள் பேசிக்கொண்டிருந்தது அவள் நினைவுக்கு வந்தது. அதுவும் அரசாங்க மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளில் இப்படி நடப்பது அதிகரித்து விட்டது என அவர்கள் கூறியதெல்லாம் கோர்வையாய் மனதில் தோன்றி குறுகுறுக்க செய்தது. "இந்த பெண்ணும் அப்படிப்பட்டவள்தானா? ஆமாம், இப்போத்தான் இந்த பாய்ஃப்ரன்ட்ஸ், கேர்ள் ஃப்ரன்ட்ஸ் கூத்தெல்லாம் அதிகமா இருக்கே? என்றெண்ணியவள் ஆர்வம் தாங்க மாட்டாமல் அந்த பெண்ணிடமே நறுக்கென்று கேட்டு விடலாம் என்று துணிந்து "உங்களுக்கு syphilis எப்படி வந்ததுனு சொல்ல முடியுமா மிஸ்.நிர்மலா நீங்க தப்பா நினைச்சுக்கலேன்னா?" என்று கேட்டும் விட்டாள். "எனக்கு மூன்று தங்கைகள் டாக்டர். எங்க அம்மா இறந்து ஆறு மாசமாச்சு" என நிர்மலா ஆரம்பிக்க "ஓ!வறுமையில் தவறான தொழிலில் இறங்கியிருப்பாளோ?" என்று ஆராதனாவின் மனம் அவசரமாய் ஆராய்ச்சியில் இறங்கியது. மனத்தை தலையில் தட்டி அடக்கி விட்டு "சொல்லுங்க" என்றாள்.


"எங்க அம்மா இருந்த வரைக்கும் எங்களை ரொம்ப நல்லா பாத்துப்பாங்க. ஆனா எங்கப்பா எங்கக்கிட்ட பேச கூட மாட்டார். அம்மாவையும் அடிக்கிறது, திட்டறதுனு சண்டை போட்டுக்கிட்டே இருப்பாரு. எங்க யாருக்குமே அவரை அவரை பிடிக்காது. அம்மா இறந்து போனதுமே அப்பா என்கிட்ட,"பாரு!நீ வளர்ந்த பொண்ணு. உன்னால நான் சொல்றதை புரிஞ்சுக்க முடியும்னு நெனைக்கிறேன். எனக்கு நைட்ல ஒருத்தர் துணையில்லாம இருக்க முடியாது.உங்கம்மாவும் இப்போ இல்ல! அதனால நீங்க யாராவதுதான் எனக்கு இனி கம்பெனி கொடுக்கணும்" என்று சொன்ன போது அந்த வார்த்தைகளோட அர்த்தம் கூட எனக்கு லேட்டாத்தான் புரிஞ்சுது. எனக்கு இத‌ யார்க்கிட்ட சொல்றதுனு கூட தெரியல. எங்களுக்கு சொந்தக்காரங்கனு சொல்லிக்கவும் யாருமில்ல. அப்பாவை விட்டுட்டு வந்தா எங்களுக்கு வேற போக்கிடமும் தெரியாது. என்னோட தங்கைகள் எல்லோருமே சின்ன பெண்கள். படிச்சுட்டு இருக்காங்க!அவங்க வாழ்க்கை பாழாயிடக்கூடாதுனு தோணுச்சு! எங்கம்மாவோட ஆசையே நாங்க நல்லா படிச்சு பெரியாளாகணுங்கறது தான்" என்ற அவளது குரல் தழைந்து கொண்டே போக, தொண்டை கமற "அதனால... நானே..." என்ற போது உடைந்து அழ ஆரம்பித்தாள். அவள் தோளில் ஆறுதலாய் கைவைத்து அழுத்திய ஆராதனாவின் கண்களிலும் நீர் துளிர்க்க தொடங்கியது. மனதிலோ அவளது அப்பா பெரும் விருட்சமாய் வேர் விட்டிருந்தார்.

Thursday, October 23, 2008

காதலின் சிரிப்பலைகள்



கடற்கரையில் உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள்...

அவர்கள்? அவனும் அவளும்...

அமைதியாய் ரசித்துக்கொண்டு...
"எனக்கு இந்த அலைகளைத்தான் மிகவும் பிடிக்கும்" என்றாள் அவள்...

"எனக்கு ஆழக்கடல்தான் விருப்பம்" என்றான் அவன்...

"அலைகளில் கால் நனைகையில் உயிர் வரை நனையும்" என்றாள் அவள்...

"நடுக்கடலின் நீள் அமைதி மனதின் ஆழத்தை பேசும்" எனறான் அவன்...

"அலைகளின் ஆர்ப்பரிப்பு பருவப்பெண்ணின் மனதைப் போல குதூகலமானது" இது அவள்...

"நீலக்கடலின் அமைதி பக்குவப்பட்ட மனதைப்போன்று அருமையானது" இது
அவன்...

காதலர்களின் விவாதம் வலுத்தது...

"அட என் செல்ல முட்டாள்களே! எப்படி சொல்லி உங்களுக்கு புரிய வைப்பேன்?

கடலின்றி கரை அழகில்லை!

கரையின்றி கடல் அழகில்லை!

ஏனெனில் அவையும் காதலர்தான் உங்களைப்போல..." என்று

எள்ளி நகைத்தது காதல் அவர்களைப் பார்த்து....

Tuesday, October 7, 2008

ஆசை மேகங்கள் 2

நீண்ட அந்த 5 நிமிடங்கள் முடிவுக்கு வந்த போது நான் வசமிழந்து விட்டிருந்தேன். அவளும் தான்... அருகாமையில் கடந்தன பல அற்புத நொடிகள்.. நாங்கள் சிலையென நிற்க... என்னிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள் "போயிட்டு வரேன்டா" என்று என் கண்களை தவிர்த்து எங்கெங்கோ பார்த்து சொன்னவள் மின்னலாய் மறைந்தே போனாள். அடுத்த நாள் ஆபீசில் அபி என்னிடம் சரியாகவே பேசவில்லை. நெருக்கம் அதிகமான சமயம் ஏன் விலகி போகிறாள் என்று புதிராக இருந்தது. அருகே சென்று "அபி" என மெதுவாக அழைத்தேன். "ம்" என்று நிமிர்ந்தவள் கண்களில் மெல்லிய நீர்த்திரை."என்னடா" என்று பதறினேன். "பயமாயிருக்குடா இது ஃப்ரென்ட்ஷிப்பா இல்லையானு" என்றாள். விடைத் தெரிந்தே அவள் கேட்ட கேள்விக்கு "ஃப்ரென்ட்ஷிப் தான் அபி.கவலைப்படாதே" என்றேன்.


அடுத்து வந்த நாட்களில் நாங்கள் ஒன்றாய் கழித்த பொழுதுகளில் தீண்டல்கள் அதிகமாக நட்பு கரைந்து கொண்டே வந்தது. இப்படியே பல நாட்கள் செல்ல, எனக்கு இது நட்பு இல்லை என்று அவளிடம் தெளிவுப்படுத்த தோன்றியது. நட்பு போர்வையில் எல்லைமீறல்கள் நட்பை களங்கப்படுத்துவதாய் தோன்ற, அந்த வெள்ளி அன்று மாலை என் வீட்டில் அவளிடம் இதைப்பற்றி பேசத்தொடங்கினேன்."ஏன் அபி, நாம பழகறது வெறும் ஃப்ரன்ட்ஷிப் தான்னு நீ நினைக்கிறியா" என்ற என் கேள்விக்கு "ஆமாம்" என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு... அவள் தாடையை விரல்களால் பிடித்து திருப்பி என் விழிகளைப் பார்த்த அவள் கண்களைப் பார்த்து. "பாருடா! இது ஃப்ரன்ட்ஷிப் இல்ல.. அதுக்கும் மேல.. " என்றேன். "ஏன் அப்படி சொல்ற" என்றவளிடம் "நிஜமா உனக்கு புரியலியா அபி" என்று கேட்டேன். "புரியுது!ஃப்ரன்ட்ஸ் தொட்டுப் பேசவே மாட்டாங்களா ரவி? எந்த சென்சுரில இருக்கே நீ? ப்ராட் மைன்டட்‍ ஆ இருந்தா இப்படிலாம் தோணாது. பையனும் பொண்ணும் பேசினாலே லவ் தானா?" என்றுப் பேசிக்கொண்டே போனவளை கையமர்த்தினேன். "போதும் அபி! உனக்கு நட்பும் தெரியல!காதலும் புரியல" என்றேன். "போடா fool! உனக்குத்தான் பொண்ணுகளை புரிஞ்சுக்கவே முடியல" என்று பதிலளித்து விட்டு விருட்டென்று வெளியேறினாள். 2 மணி நேரம் கழித்து என் கோபம் தெளிந்து கால் செய்தால் தவிர்த்துக் கொண்டே இருந்தவள் பின்பு மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்தே விட்டாள்.சில நாட்களில் தன்னால் பேசுவாள் என்றெண்ணினேன்







சனிக்கிழமை ஆபீஸ் வரவேயில்லை அபி. திஙகளன்று வந்தவள் என்னை கண்டும் காணாதது போல் இருக்க நானே அவளிடம் சென்று "அபி! ஏன் பேச மாட்டேங்கிற?" என்றதும் முறைத்தவள் "இனி உங்களுக்கும் எனக்கும் ஒன்றும் இல்லை மிஸ்டர் ரவி! என் பின்னாடி வராதீங்க ப்ளீஸ்" என்று சத்தமாய் இரைந்த போது ஆபீஸே என்னை திரும்பிப்பார்த்தது.அவமானத்தில் முகம் கன்றிப்போனது.













வீட்டுக்குப்போய் அவள் மொபைலை தொடர்பு கொண்ட போது தான் நம்பரையே மாற்றி விட்டிருப்பது புரிந்தது. இரண்டு நாட்களாக ஆபீஸ் பக்கமே போகாமல் என் மேஜை மேல் இப்போது தலை சாய்த்து ஜன்னலின் வழியே வானத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அவளது அருகாமையும் ஸ்பரிசங்களும் மென்மையான அதரங்களும் பஞ்சு போன்ற உள்ளங்கைகளும் நினைவில் தோன்றி தோன்றி வெகுவாய் இம்சித்துக்கொண்டிருந்தன.

















எதிர்வீட்டின் பால்கனியில் காற்றில் படபடத்துக் கொண்டிருந்த சிகப்பு காட்டன் சேலை, அவள் சேலை அணிந்து அன்றொரு நாள் இதே வீட்டில் என் எதிரில் உட்கார்ந்து என்னிடம் பேசிக் கொண்டிருந்த பொழுதுகளை நினைவுக்கு கொண்டு வந்தன. கறுத்துப் போயிருந்த வானத்தில் இடியும் மின்னலும் தோன்றிய போது அவள் அருகிலிருந்து என்னை கட்டிக்கொள்வதாய் கற்பனை தோன்றியது. சே... என்ன மனசு இது... வேண்டாம் என்பதையே சுற்றி சுற்றி வட்டமிட்டுக்கொண்டு... மனதிற்குள் அசாத்தியமாய் வெறுமை சூழ்ந்தது அவளிருந்த இடத்திலெல்லாம்... வாழ்க்கையே பிடிக்கவில்லை எனக்கு... பக்கத்து வீட்டு அங்கிள் அவருக்காக வாங்கி வரச்சொன்ன தூக்கமாத்திரைகள் நினைவுக்கு வந்தன. ... அவற்றில் பத்தை எடுத்து விழுங்கி விட்டால் என்ன? அதற்கு பின் நான் யாரையும் எண்ணி மறுக வேண்டியதில்லை. எழுந்துப்போய் அந்த மாத்திரைகளை எடுத்து வந்தேன்.




















அப்போது தான் மூன்று நாட்களாய் மொபைலை ஸ்விட்ச் ஆன் செய்யக்கூட இல்லை என்பது நினைவுக்கு வர, ஒரு வேளை அவள் ஏதாவது call/msg செய்திருப்பாளோ என்று ஒரு நப்பாசை உதித்தது. ஓடிப்போய் மொபைலை தேடி எடுத்து ஆன் செய்தேன். ஆன் செய்ததுமே "amma calling" என்ற பச்சை நிற எழுத்துக்கள் ஒளிர்ந்தன. யாரோ தலையில் சம்மட்டியால் அடித்தது போலிருந்தது எனக்கு. எத்தனை நாளாகி விட்டது அம்மாவிடம் பேசி...பொத்தானை அழுத்தி போனை காதில் வைத்தேன். "ரவி... எப்படிடா கண்ணு இருக்கே? ஏண்டா இத்தனை நாளா போனே பண்ணல அம்மாவுக்கு? அங்க ஏதாவது பிரச்சனையா? நாலு வாரமாச்சுப்பா நீ என் கிட்ட பேசி... நைட்ல வீட்டில் தானே இருப்பே, பேசலாம்னு போன் பண்ணா எப்பவுமே லைன் பிசியாவே இருந்துச்சு. 3 நாளா ஸ்விட்ச்டு ஆஃப் வேற! பயந்தே போயிட்டேன் ரவி!உனக்காக 3 ஞாயித்துக்கிழமையும் சமைச்சுட்டு காத்திருந்தேன் டா.என்னடா இவன் கிட்டருந்து கவலையாப்போச்சு! நேத்து தான் உன் பேர்ல கோவில்ல அர்ச்சனை பண்ணினேன். இன்னிக்கு உன் கூட பேசிட்டேன். ஒழுங்கா சாப்பிடறியாப்பா? வேலை வேலைனு உட‌ம்பை கெடுத்துக்காத கண்ணா! எப்போ ஊருக்கு வருவ? கண்ல 'glaucoma' டெஸ்ட்டுக்காக டாக்டர் கிட்ட போகணும்ல? நீ வந்தா போகலாம்னு காத்துக்கிட்டு இருந்தேன். என்னப்பா ஒண்ணுமே பேச மாட்டேங்கிற? ஹலோ ரவி..." ‍ அம்மாவின் குரல் பேசிக் கொண்டே போனது.
கண்களினின்று கண்ணீர் மழையாய் கொட்டிக்கொண்டிருந்தது. ஜன்னல் வழியே வானத்தை ஏறிட்டுப்பார்த்தேன். மழை வராமலேயே மேகங்கள் கலைந்து, வானம் தெள்ளென தெளிந்து விட்டிருந்தது, நீர் திரையிட்ட விழிகளின் வழியே தெரிந்தது. தெளிந்த மனதுடன் "ஹலோ அம்மா" என்றேன்.

Monday, October 6, 2008

ஆசை மேகங்கள் 1



ஜன்னல் கம்பிகளின் வெளியே பார்த்த போது வானம் மேக மூட்டமாய் சாம்பல் நிறத்தில் காட்சி அளித்தது.... இப்படி ஆகாயம் கருக்கும் போதெல்லாம் றெக்கை கட்டி கொண்டு மழைக்கு தயார் ஆகி விடும் மனசு. இன்று உற்சாகம் இன்றி ஊமையாய் படுத்து கிடந்தது. காரணம்... ஒரு மாதத்திற்குள் முன்பு நான் இப்படி இருந்தவன் அல்ல...


அன்று


பெங்களூரின் ஒரு மாநகர பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன். "ஹாய் ரவி" என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தேன். திரும்பி பார்க்கும் முன்பு உங்களுக்கு என்னை பற்றி சொல்லி விடுகிறேன். நான் ரவி... சென்னையில் கடந்த வருடம் பி.ஈ படித்து முடித்து விட்டு, ஒரு உருப்படியான வேலை கிடைத்து விட்டதால் ரெண்டு மாதங்களாக பெங்களூர்-இல் இருக்கிறேன். இந்த ஊரே எனக்கு மிகவும் புதியதாக இருக்கிறது. இங்கு நண்பர்கள் யாருமே இல்லை என்பதால் தனிமை அதிகமாகவே தெரிகிறது. எனவே, வார இறுதிகளில் சென்னை செல்வது தவறாத வழக்கம் ஆகி விட்டது. இன்று, வெள்ளிக்கிழமை.. நாளை ஊருக்கு போக வேண்டியது தான்.. என் அம்மாவுக்கும் என்னை பார்க்காமல் இருக்க முடியாது. அடடா யார் கூப்பிட்டது என்று திரும்பி பார்க்கணும் ல? அட.. அது அபிலாஷினி.. என் ஆபீஸ்-இல் வேலை செய்பவள் தான்... பெங்களூர்-இல் சிறு வயதிலேயே செட்டில் ஆகிய தமிழ் பெண். மிக நாகரிகமானவள்; சகஜமாக பழகுபவள். எல்லாருக்கும் செல்லமாக ‘அபி’





"ஹாய் அபி " என்று கூறும் போதே அவள் அந்த பேருந்தில் ஏறி என்னருகே வந்து விட்டாள். "இங்கே உட்காரட்டுமா"? என்று கேட்டவள் நான் பதில் சொல்லும் முன்பே அங்கே உட்கார்ந்தும் விட்டாள். எத்தனை வேகமான பெண் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அபி மிக அழகானவளும் கூட... படபடக்கும் இமைகள், பாதாம் நிறம், அழகிய உதடுகள், சற்றே மேடேறிய‌ நெற்றி.. எப்போதும் முகத்தில் ஒரு புன்னகை என்று... ரொம்ப ரசித்து விட்டேனோ என்று நான் யோசித்து கொண்டு இருக்கையில் "என்ன ரவி? ? எதுவுமே பேச மாட்டேன்கிறிங்க?" என்று விரல்களை என் முன்னால் அழகாய் ஏன் என்பது போல் அசைத்து கேட்டாள் அபி.. நம்ம கெத்தை விட்டு கொடுக்க முடியுமா? ஏதோ யோசனை? என்று கூறி தப்பித்து விட்டேன். நாங்களிற‌ங்க வேண்டிய நிறுத்தம் வந்ததால் இருவரும் இறங்கினோம். "நீங்களும் இந்திரா நகர் ல தான் இருக்கீங்களா?" என்றாள். "ஆமாம், நீங்க?" என்றேன். " கொஞ்சம் interior ஆ போகணும்" என்றாள். :அப்படியா? என் பிளாட் இங்க பக்கத்துல தான். வாங்களேன் ஒரு கப் காபி சாப்பிட்டு போகலாம் என்றேன். எனக்கே ஆச்சர்யம் தான் என் அழைப்பு . “ஒ sure” என்று அவள் இணங்கியது அதை விட ஆச்சர்யம் .








5 நிமிட நடையில் வீடு வந்து சேர்ந்தோம்."பரவால்ல! bacelor பிளாட் சுத்தம்மா இருக்கு " என்று கண் சிமிட்டி சிரித்தாள் அபி. காபி சாப்பிட்டுக்கொண்டே ரொம்ப நேரம் கதை பேசிவிட்டு கிளம்பினாள். பிரிய மனம் இன்றி விடை கொடுத்தேன். சில நாட்க‌ள் சென்ற‌ன‌. ஒரு நாள் "ஏன் ரவி இனிக்கு movie போலாமா?” என்று அபி கேட்டபோது மறுக்கத் தோன்றவில்லை எனக்கு... அன்று நாங்கள் சினிமா பார்த்து விட்டு திரும்பும் போது இரவு பத்து மணி ஆகி விட்டது. அவளை அவள் வீடு வரை பத்திரமாய் சேர்த்து விட்டு நான் வந்த போது தான் அன்று சனிக்கிழமை என்பதும் நான் சென்னைக்கு செல்ல வில்லை என்பதும் உறைத்தன. மொபைலை எடுத்து பார்த்தால் அம்மாவிடமிருந்து பல missed calls. வீட்டுக்கு போனதும் பேசி சமாதானப்படுத்தி விட வேண்டும் என்று வீடு வந்தேன். வீடு வருவதற்குள்ளேயே "reached home da?" என்று அவளிடமிருந்து sms. அவளுக்கு பதில் அனுப்ப ஆரம்பித்தவன் நள்ளிரவு 2.30 வரை chat செய்து கொண்டிருந்தேன். பின்வந்த நாட்களில் sms கள் அதிகமாயின. இரவுகளில் நெடுநேரம் தொலைபேசி அழைப்புக்கள் வாடிக்கை ஆகி விட்டன. எங்கள் இணக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. அந்த ஒரே வாரத்தில் நாங்கள் பேசாத விஷயங்களே இல்லை எனலாம். குளிப்பது, சாப்பிடுவது என எதையுமே சொல்லாமல் செய்வதில்லை. அடுத்து வந்த நாட்களில் என் ஃப்ளாட்டுக்கு வந்து மாலை நேரங்களில் கதை அடிப்பது வழக்கமாகி விட்டது.அவள் அவளின் அக்காவோடு தனியே வசித்து வந்ததால் கட்டுப்பாடுகள் இன்றி சமாளித்து விடுவாள்.











அன்றொரு நாள் அப்படித்தான் எங்கள் வீட்டு டைனிங் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.மிகவும் அருகாமையில் எங்கள் விழிகள் சந்தித்த போது பேச்சு திடீரென நின்று மௌனம் நிலவியது. நாங்கள் அவ்வளவு நேரம் பேசியதை விட அந்த மௌனம் அதிகமாய் பேசியது. என் கைகளை பிடித்து அழுத்திய அபி "வீட்டுக்கு கிளம்பட்டுமா டா?" என என் கண்களை பார்த்து கேட்ட போது தடுமாறி போனேன். "ம்ம்" என்ற என் பதில் எனக்கே கேட்கவில்லை.



















சட்டென்று என்னை நெருங்கிய அபி என் முகத்தை அருகில் இழுத்து அவள‌ருகே சாய்த்து என் இதழ்களில் இதழ் பதித்தாள். அந்த கணம்... அத்துடன் உலகம் நின்றிருக்கலாம். என் முதல் முத்தம் அது தான்... அம்மா சிறு வயதில் நெற்றியில் பதித்த முத்தங்களுக்கு பிறகு...

Wednesday, September 24, 2008

கனவுப்பதிவுகள்

ஹாய்... நான் ரீனா. எல்லோருக்குமே கனவுகள் உண்டு... கனவுகள் தான் நம் நிகழ்காலத்தின் நிழலாகவும் எதிர்காலத்தின் நம்பிக்கையாகவும் இருப்பவை.எனக்கும் பல கனவுகள் உண்டு. அப்படி ஒரு கனவின் நிதர்சனம் தான் இந்த BLOG...தங்களின் இனிய கனவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே! அது பகல் கனவாயினும் கூட...

கனவு மெய்ப்பட வேண்டும்



மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேன்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்
...ஒண்ணுமில்ல, பாரதியின் கவிதைகளில் எனக்கு ரொம்ப பிடிச்சது இது.. அதான் POST பண்ணிட்டேன்