Saturday, April 24, 2010

உம்மேல ஆசைதான்- பாகம் மூன்று

பாகம் ஒன்று, பாகம் இரண்டு

வேலையை அவசரமாக முடித்து விட்டு சீக்கிரமே வீடு வந்து சேர்ந்தாள் தாரிணி. ஆச்சரியமாக அத்தையும் மாமாவும் வீட்டில் இல்லை. அருணின் அறை உள்ளே தாளிடப்பட்டிருந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டதே நிம்மதியாக இருந்தது. அவளது படபடப்பு கொஞ்சம் அடங்கி விட்டிருந்தது. நைட் ஷிஃப்ட் அவளுக்கு வழக்கமான ஒன்று தான். ஆனாலும் இந்த கனவு தான் அவளை பாடாய் படுத்தி வைக்கிறது. அப்படியே படுத்து தூங்கலாம் போல அசதியாக இருந்தது. 'சாப்பிடாமல் தூங்கி விட்டால் இந்த அத்தை வந்து எழுப்பி தொந்தரவு செய்வார். பாவம் எதற்கு அவருக்கு தொல்லை? இந்த அருணிடம் அத்தை எங்கே போயிருக்கிறார் என்று கேட்டு தெரிந்து கொண்டு, வர நேரமாகுமென்றால் ஏதேனும் சமைத்து வைத்து விட்டு படுத்துக் கொள்ளலாம், அத்தைக்கும் உதவியாக இருக்கும்' என்று நினைத்தவள் எழுந்து அருணின் அறையை நோக்கி நடந்தாள்.

அறைக்கதவை தட்ட முற்பட்டவளுக்கு, உள்ளேயிருந்து 'கீச்சு கீச்சென' என பெண்மையான குரல் ஒன்று கேட்டது. 'இவன் அறையில் என்ன இது பெண் குரல்' என்று யோசித்தவள் கதவை தட்டாமல் சிறிது நிதானித்து, அந்த ஓசையை உற்று கவனித்தாள். வார்த்தைகள் ஒன்றும் புரியாமல் போகவும், சாவி துவாரத்தில் காதை வைத்து கேட்க முயற்சித்தாள். "அங்கிள்! அங்கேயெல்லாம் கை வெச்சா அம்மா திட்டுவாங்களே" என்று பேசிக் கொண்டிருந்தது... 'அடக்கடவுளே!ரேஷ்மாவின் குரலல்லவா இது?'.


சாவித்துவாரத்தின் வழியே அருணின் செய்கைகளை பார்த்தவளுக்கு தூக்கி வாரிப்போட்டது. 'இந்த சண்டாளன் தினமும் இவளுக்கு கம்ப்யூட்டரில் விளையாட்டு காட்டுவதாய் பேர் பண்ணிக்கொண்டு இந்த அக்கிரமம் செய்து கொண்டிருக்கிறானா?' என்று நினைத்துக் கொண்டே சாவித்துவாரத்திலிருந்து எழுந்துக் கொண்டு "ஏய் அருண்! கதவைத்திற" என்றாள் கதவை பலமாக தட்டி. சில வினாடிகள் கழித்து கதவு சிறிதாக‌த் திறந்து தலையை வெளியில் நீட்டிய அருண், "என்ன தாரிணி! அம்மாவும் அப்பாவும் ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க! வர நேரமாகும். சமைச்சு வெச்சுருக்காங்களாம்! நீ வந்தால் சாப்பிட்டுட்டு தூங்க சொன்னாங்க" என்றான். சிறிதாய் திறந்திருந்த இடைவெளியில் அவனது அறையின் நீல டிஸ்டெம்பர் பூச்சும், கட்டிலின் ஓர விளிம்பும் கொஞ்சமாய் பார்வைக்கு கிடைததது. இந்த அறையை முன்பு பார்த்தது போலிருந்தது அவளுக்கு. பார்த்திருக்கிறோமா... இந்த வீட்டுக்கு வந்த புதிதில் ஒரு முறை இந்த அறைக்குள் கணினி பயன்படுத்த வந்ததாக ஞாபகம். மற்றபடி இந்த சனியந்தான் எப்பவும் கதவை மூடி வெச்சுருக்குமே? என்றெல்லாம் யோசித்தவளுக்கு சட்டென பிடிப்பட்டது. இதுதான் கனவில் வந்த அந்த அறை.


அவனை மோசமாக திட்ட வேண்டும் போலிருந்தும் நா எழவில்லை அவளுக்கு. 'சரி' என்று தலையாட்டி விட்டு அவள் அறைக்குள் போக திரும்பியவளுக்கு தலை மறுபடி 'விண் விண்ணென' வலிக்க தொடங்கியது. 'ரேஷ்மா இன்னும் உள்ளே இருக்கிறாள்' என்பதையே மறந்து விட்டோமே என நினைத்த‌வள், புதிய தெம்புடன் அவனை நோக்கி 'ரேஷ்மாவை வெளியில் அனுப்பு' என்றாள். "அவ விளையாடிட்டு இருக்கா. இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டுமே" என்று அருண் சொன்னதும், தாரிணிக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்தது. அருண் கன்னத்தில் பளிச்சென ஒரு அறை விட்டாள். இன்னொரு முறை அடிக்க முயன்றவளின் கையை பிடித்துக்கொண்டவன் "எதுக்கு இப்ப்போ அடிக்கறே?" என்றான். "உன்னையெல்லாம் சாகடிக்கணும். நீ செஞ்ச காரியத்தை நான் பாத்தேன்" என்றதும் "என்ன பார்த்தே நீ? எதுக்கு இப்போ கோவப்படுற?" என்றான் அவன். "இன்னும் ஒரு வார்த்தை பேசினே, செருப்படி படுவே" என்று அறைக்கதவை பெரிதாய் திறந்தவள், "ரேஷ்மா! உங்க வீட்டுக்கு போ" என்றதும் அத்தனை நேரம் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்த குழந்தை வெளியே ஓடி விட்டது.

அருண் அவளை முறைத்துக் கொண்டிருப்பதை பொருட்படுத்தாமல், தன்னறைக்கு வந்து தாளிட்டுக் கொண்டாள் தாரிணி. "நாளைக்கு ஒரு நல்ல ஹாஸ்டல் பார்க்கணும்" என்று நினைத்துக் கொண்டே கட்டிலில் சரிந்தாள். மெதுவாக படபடப்பு அடங்கியது. தலைவலியும் காணாமல் போயிருந்தது. ஏதோ ஒரு பாரம் அகன்றது போல் உணர்வு.சைல்டு அப்யூஸ் பற்றி படித்திருந்த‌தெல்லாம் நினைவுக்கு வந்தது. 'என் அணுகுமுறை எத்தனை சரி என்று தெரியவில்லை. ஆனால் அவனிடம் கோபப்படாமல் எப்படி இருக்க முடியும். முதலில் நாளை ரேஷ்மாவிடம் இப்படிப்பட்ட தொடுகைகள் பற்றி எச்சரிக்க வேண்டும்" அதை அவளுக்கு புரியும் விதத்தில் எப்படி சொல்வது. அவள் அம்மாவிடம் சொல்லலாமா?' என பலவாறு யோசித்துக் கொண்டே தாரிணி உறங்கிப் போனாள். சற்று நேரத்தில் மீண்டும் அந்த கனவு. அதே அறை. நெருங்கி வரும் அவன். ஆனால் இம்முறை தாரிணி ஓட முயற்சிக்கவில்லை. அவளை நெடுநேரம் அடித்து துவைத்தாள். இந்த முறை அவனே கதவை திறந்து ஓடத்தொடங்கி விட்டதைக் கண்டு அவளுக்கு சிரிப்பு வந்தது. தாரிணி தூக்கத்திலேயே மெலிதாய் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.

முற்றும்...

Friday, April 23, 2010

ஒரு கணம்...

நீங்கும் நிமிடத்தில் உயிர் உறுத்தும் விரலசைவில்

பிரிவனைத்தும் அணிவகுக்கும்...

நீ நிறைந்த நேரங்கள் நிலாக் கிண்ணம் நிறைத்து நிமிடத்தில் உருகும்...

பார்வை மறையுமுன் முகம் நிழற்படமாய் நினைவேறும்...

விரல் சேர்த்து நடக்காத பாதை நிலம் கடந்தும் நீளும்...

இதழ் சேர்க்க மறந்திட்ட முத்தங்கள் விண்ணெங்கும் மின்மினியாய் கண்சிமிட்டும்...

Thursday, April 22, 2010

உம்மேல ஆச தான் பார்ட் 2 திக்.. திக்... திக்....

முதல் பகுதியப் படிக்க கிளிக்குங்கள்

பார்ட் 2

"ச்சீ" என்று அலறியவாறே எழுந்து உட்கார்ந்தாள் தாரிணி. அறை மெல்லிய நீல இரவு விளக்கின் வெளிச்சத்துடன் அமைதியாய் இருந்தது. 'அடச்சே! என்ன கனவு இது?" என்று எண்ணியவாறே நெற்றியில் கை வைக்க லேசாய் வியர்த்திருந்தது. மீண்டும் படுத்து தூங்க முயற்சித்தும் தூங்கவே முடியவில்லை. வெகுநேரம் விழித்திருந்தவள் விடியற்காலை மெல்ல மெல்ல உறங்கிப்போனாள். எப்போதும் 6 மணிக்கு தானாக‌வே விழித்து விடுபவள் அன்று அவளது அத்தை பல தடவை எழுப்பிய பிறகே எழுந்தாள். "ஏன் தாரிணி, உடம்பு ஏதும் சரியில்லையா?" என்றபடியே "ஏண்டி என்னமோ போல இருக்கே? முகமெல்லாம் வீங்கினாப்போல இருக்கு? நைட் சரியா தூங்கலியா?" என்று பதறினார். "அதெல்லாம் ஒண்ணுமில்ல அத்தை! டயர்டா இருக்கு அவ்ளோதான்" என்றவாறு நகர முற்பட்ட போது தலை விண் விண்ணென்று வலிக்கத் தொடங்கியிருந்தது. ஒரு கப் காபி குடித்தால் தேவலையாயிருக்கும் என்று தோன்றவே, சமையலறைக்குள் நுழைந்த தாரிணியிடம் தயாராய் காபியை நீட்டினார் அத்தை. 'தேங்க்ஸ் அத்தே!" என்று அதை வாங்கிக் குடிக்கத் தொடங்கினாள். மனம் அந்த கனவையே சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது. இந்த கனவு ஏற்கனவே சில முறை வந்தது போலொரு உணர்வு.
தாரிணி த‌ஞ்சையில் பிற‌ன்து வ‌ள‌ர்ந்த‌வ‌ள். இன்ஜினிய‌ரிங்க் முடித்த‌துமே அதிர்ஷ்ட‌வ‌ச‌மாய் சென்னையின் முண்ண‌னி ஐ.டி நிறுவ‌ன‌மொன்றில் வேலை கிடைத்து விட சென்னை வ‌ந்து சேர்ந்தாள். இந்த அத்தை அப்பாவின் ஒன்று விட்ட ச‌கோத‌ரி. அப்பாவின் உட‌ன் பிறந்த‌வ‌ர் யாரும் சென்னையில் இல்லாத‌தாலும், இந்த அத்தை ந‌ல்ல‌வ‌ர் என்று அவ‌ருக்கு தோன்றிய‌தாலும், அவ‌ளை ஹாஸ்ட‌லில் த‌ங்க வைக்காது இங்கே த‌ங்க வைத்தார். 'பேயிங் கெஸ்ட்' என்றாலும் அத்தை மிக ந‌ன்றாக‌வே பார்த்துக் கொள்கிறார்.

வீட்டில் அத்தை, மாமா ம‌ற்றும் அவ‌ர்க‌ளின் ம‌க‌ன் அருண் என்று மூவ‌ர்தான். அருணும் ந‌ல்ல வேலையில் கை நிறைய ச‌ம்பாதித்துக் கொண்டிருக்கிறான். ஆண் பிள்ளை இருக்கும் வீட்டில் அவ‌ளை த‌ங்க வைக்க அவ‌ள‌து அப்பா முத‌லில் ரொம்ப‌வும் யோசித்தாலும், அவ‌ன‌து ந‌ட‌வ‌டிக்கைக‌ளும் ப‌ழ‌கும் வித‌மும் அவ‌ரை வெகுவாய் க‌வ‌ர்ந்து விட்ட பின் அவ‌ர் அதிக‌மாய் அல‌ட்டிக்கொள்ள‌ வில்லை. அவ‌னும் அத‌ற்கேற்ற‌ப‌டி தான் இதுவ‌ரை ந‌ட‌ந்து வ‌ந்தான். அவ‌ன‌து அறையிலேயே எப்போதும் அடைந்துக் கொண்டு க‌ணினியை குடைந்துக் கொண்டிருப்பான். எப்போதேனும் ஒரு 'ஹாய், ஹ‌லோ', அவ‌ள‌து வேலை‌யை ப‌ற்றிய விசாரிப்புக‌ள், இவை த‌விர அவ‌ளிட‌ம் பேசுவ‌தில்லை. இத்த‌னைக்கும் தாரிணி அழ‌காக‌வே இருப்பாள்.

அருண் கொஞ்ச‌ம் ந‌ன்றாக சிரித்து பேசி அவ‌ள் பார்த்தது, அவ‌ர்க‌ள‌து ப‌க்க‌த்து ஃப்ளாட் சிறுமி ரேஷ்மா அங்கு விளையாட வ‌ரும் போது தான். அவ‌ளை ம‌டியில் இருத்திக்கொண்டு க‌ணினியில் ஏதெனும் விளையாட்டு காட்டிக் கொண்டிருப்பான். மாலைக‌ளில் ரேஷ்மா அங்கு வ‌ந்துதான் விளையாடிக்கொண்டிருப்பாள்.


"ஆஃபீஸுக்கு போக‌லையா தாரிணி?" என்ற அத்தையின் குர‌ல் அவ‌ளை யோச‌னையிலிருந்து மீட்ட‌து. "இதோ கிள‌ம்பிட்டேன் அத்தே!" என்ற‌வ‌ள் சோப்பும் ட‌வ‌லுமாய் ப‌ர‌ப‌ர‌க்கத் தொட‌ங்கினாள். அரைம‌ணியில் த‌யாராகி ஆஃபீஸுக்கும் வ‌ந்து அவ‌ள‌‌து கேபினில் போய் உட்கார்ந்த பிற‌கும் கூட அந்த க‌ன‌வைப் ப‌ற்றிய சிந்த‌னையே மூளையை ஆக்ர‌மித்திருந்த‌து. "யாரேனும் என்னிட‌ம் த‌ப்பாக‌ ந‌ட‌ந்துக் கொண்டு விடுவார்க‌ளோ? அத‌ற்கான ஒரு முன்னெச்ச‌ரிக்கை தான் இந்த‌ க‌ன‌வோ? இந்த க‌ன‌வுக‌ளை 'இ.எஸ்.பி' என்று ஏதோ பேர் சொல்லி அழைப்பார்க‌ளே' என்று என்னெ‌ன்ன‌வோ யோசித்துக்கொண்டே த‌ன் வேலையில் மூழ்க தொட‌ங்கினாள்.

சிறிது நேரத்தில் அவளது டீம் லீடர் வசந்த் அவளது கேபினுக்கு வந்து "தாரிணி இந்த வீக் ஒரு முக்கியமான ப்ரொஜெக்ட் கம்ப்ளீட் செஞ்சாகணும். இன்னிக்கு நைட் ஷிஃப்ட்டா எக்ஸ்டென்ட் பண்ணிக்கோங்க!" என்றான்.. "நைட் ஷிஃப்ட்டா? யார் யாரெல்லாம் வொர்க் பண்ணாப்போறோம்?" என்றாள் கலக்கத்துடன். "நான், நீ, மகேஷ் மட்டும் தான் இன்னிக்கு இருப்போம். நாளைக்கு இன்னும் மூணு பேர் இருப்பாங்க" என்றான். தாரிணியின் மூளயில் சின்னதாய் ஒரு சிகப்பு எச்ச‌ரிக்கை குறி அணைந்து அணைந்து எரிந்தது. உடனே "இல்லை இன்னிக்கு எனக்கு நைட் ஷிஃப்ட் வேண்டாம்" என்றாள் உறுதியான குரலில். "இப்படி சொன்னா என்ன பண்ண முடியும்? மத்தவங்க எல்லாரும் இன்னிக்கு இருக்க முடியாதுங்கறதுக்கு ரொம்ப வேலிட் ரீஸன்ஸ் சொல்லியிருக்காங்க தாரிணி. உனக்கு அப்படி எதுவும் இருக்காதுன்னு நெனைக்கறேன். இருந்தா சொல்லு பாப்போம்" என்றான் வசந்த் சரளமான ஆங்கிலத்தில். 'என்ன சொல்வது இவனிடம்? என் கனவு என்னை பயமுறுத்துகிறது என்றா?' என்று யோசித்தவளைப் பார்த்து "i dont think you have any valid reason. please cooperate with us. or else give me an explanation letter" என்று சொல்லி விட்டு நகர்ந்து போனான் அவன். 'என் கனவு இன்றே பலிக்க போகிறதா என்ன? ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன் நான் என தெரியவில்லையே' என்று மனதில் கவலையுடன் உட்கார்ந்து விட்டாள் தாரிணி. இன்று ஏதோ நிகழப் போகிறது என்று அவளது உள்ளுணர்வு அழுத்தமாய் கூறியதுதொடரும்

Wednesday, April 21, 2010

உம்மேல ஆசதான்! பார்ட் 1

யார் இவன்? ஏன் என்னை இப்படி பார்க்கிறான்! அய்யோ! நான் மட்டும் எப்படி இவனுடன் இந்த அறையில் தனியாய் மாட்டிக் கொண்டேன்? என்று பல கேள்விகளுடன் அவனை விழித்து விழித்து பார்த்துக் கொண்டிருந்த தாரிணி, சுற்றும் முற்றும் அந்த அறையை சில கணங்கள் நோட்டமிட்டாள். எப்போதோ முன்பே பார்த்தது போல் தோன்றியது. வெளிர் நீல டிஸ்டெம்பர் பூச்சு சில வருடங்கள் பழையதாகி போயிருக்க, அங்கங்கே பெயர்ந்து உள் சுவரை காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது. நேர் மேலே ஒரு ட்யூப் லைட் போதுமான வெளிச்சம் சிந்தியபடி இருக்க, பெரியதொரு மரக்கட்டில் அறையில் பாதி இடத்தை ஆக்ரமித்திருந்தது. அதை தவிர அருகே ஒரு சிறிய மேஜையில் கணிணியும் ஒரு நாற்காலியும் இருந்தன. அந்த அறையை முன் எப்போதோ பார்தத‌து போல் ஒரு நினைவு. கட்டிலின் பக்கவாட்டில் இரு கைகளையும் ஊன்றியபடி சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான் அவன். நல்ல சுருள் தலைமுடியுடன், சற்றே மாநிறத்தை காட்டிலும் சிகப்பாக, உயரமாக... முன்பே பார்த்தது போன்ற முகம். தாரிணியை பார்த்துக் கொண்டேயிருந்த அவன், சட்டென அவளை நோக்கி நகரவும் அவளுக்கு 'பகீர்' என்றது. அறையின் கதவு எங்கே என கண்களால் துழாவினாள். அவளுக்கு நேர் பின்னே கதவு இருப்பது புலப்பட்டதும் அதை நோக்கி பாய்ந்து அதன் கைப்பிடியை முழுப்பலம் கொண்டு திருகினாள். அது அசைந்து கொடுக்க மறுததும் தான், கதவு வெளியே தாளிடப்படிருக்கிறது என்பது புரிந்தது. அதற்குள் அவன் சிறியதொரு புன்னகையுடன் மேலும் ஓர் அடி அவளை நெருங்கியிருந்தான். தாரிணி கத்த முயற்ச்சித்தாள். 'அய்யோ இதென்ன குரலே எழும்ப மாட்டேங்குது? நான் இப்ப என்ன செய்யறது? இவன் வேறு கிட்ட கிட்ட வர்றான்... தடி எருமை!' என்று மனதுக்குள் திட்டியவாறே அவள் பின்னே நகர யத்தனிக்கவும், அவன் அவளை எட்டி பிடிக்கவும் சரியாக இருந்தது...தொடரும்........