Friday, December 12, 2014

அட்சயம்
எத்தனை இட்டாலும் 
நிறையாத பாத்திரமொன்றில் 
உன் அன்பையெல்லாம்
சேமித்துக்கொண்டிருக்கிறேன்... 
பாத்திரத்தில் இட்ட 
நுண்துளையாய் 
நின் கோபதாபங்கள்...
ததும்பி விடாமலிப்பதொரு தவம்...

Saturday, June 21, 2014

The Past or Le passe

சில நாட்களுக்கு முன் ”THE PAST" என்ற ஃப்ரென்ச் திரைப்படம் பார்த்தேன். நுணுக்கமான உணர்வுகளையும், அதிர்வுகளையும் வெளிப்படுத்தியதோடல்லாமல், பார்ப்பவர்களையும் உணரச் செய்யும்படியான காட்சியமைப்பும், திரைக்கதையும், மீண்டும் ஒரு ரெவ்யூ எழுத செய்து விட்டது... நான் சில நாட்களுக்கு முன் என்று சொன்னாலும், படத்தைப் பார்த்து கிட்டத்தட்ட இரு மாதங்களிருக்கும். இன்று மதியம் சாப்பிட்டதே மறந்து போய் விடும் எனக்கு, இத்தனை நாட்களாகியும் ஒவ்வொரு காட்சியும் அவ்வப்போது நினைவுக்கு வந்துக் கொண்டே இருப்பதால் இந்த பதிவை எழுதுகிறேன்.

கதை:
எப்போதோ மனம் ஒத்துப்போகாமல் பிரிந்துப்போன கணவன் மனைவி இருவர், இப்போது மனம் ஒத்து பிரிந்து விட வேண்டிசந்திக்கின்றனர். அதாவது, மனைவி இன்னொரு மணம் செய்து கொள்ள வேண்டி விவாகரத்து பெற்றுக்கொள்ள முன்னாள் கணவரை அழைக்கிறார். வந்த இடத்தில் மனைவியின் தற்போதைய காதலரின் முந்தைய திருமணத்திற்கு பிறந்த மகனும், இவரை மணப்பதற்கு முன் பிறந்த மூத்த மகளும், இவருக்கு பிறந்த மகளும் என மூன்று குழந்தைகளுடன் தன் மனைவியின் ஜீவனத்தை பார்த்து பச்சாதாபமும் வருகிறது. மனைவி தன் மூத்த மகளைப் பற்றியும், சமீப காலமாக ஒழுங்கற்று போன அவளது நடவடிக்கைகளைப் பற்றியும் இவரிடம் கூறி, “அவ உங்க செல்லம்தானே! நீங்கதான் கொஞ்சம் என்னன்னு கேக்கணும்” என்று கேட்டுக்கொள்கிறார். இதே காரணத்திற்காக தங்களோடு அதே வீட்டில் தங்கவும் சொல்கிறார். கணவர் முதலில் அந்த வீட்டிற்கு வர ஒப்புக்கொண்டாலும், மனைவியின் தற்போதைய காதலன் அந்த வீட்டிற்கு தங்க வருவார் என்பது தெரிந்ததும் சங்கடமும், சிறிது கோபமும் கொள்கிறார்.மூத்த மகளின் ஏனோதானோவென்ற நடவடிக்கையை அவரே கண்கூடாக பார்த்த பிறகு, அவளிடம் அன்பாக விசாரிக்கிறார். அவளோ, தன் தாயின் புதிய காதலனையும், இந்த திருமணத்தையும் தனக்கு அறவே பிடிக்கவில்லை எனவும், இரவானால் வீடு திரும்பவே தனக்கு விருப்பமில்லை என்றும் சோகமும், மறுதலிப்பும் நிறைந்த கண்களுடன் தெரிவிக்கிறாள். மேலும், தன் அம்மா அந்த மனிதனை விரும்ப காரணமே இந்த தந்தைதான் எனவும், அவன் இவரை போலவே இருப்பதும், அவனும் இரானியன் எனபதும்தான் என்று குற்றம் சாட்டுகிறாள். இரவு வேலை முடிந்து வீடு திரும்பும் மனைவியிடம் இதை அவர் கூறவும், அவளோ மகளது சொற்களில் நியாயம் இல்லை என்றும், மேலும் தனக்கு தற்போதைக்கு வேறு வழியில்லை எனவும் தான் தற்போது கர்ப்பம் எனவும் சொல்கிறாள். மகளோ ‘கர்ப்பம் பற்றிய செய்தி உண்மையில்லை; மணம் புரிந்துக்கொள்ள தாய் சொல்லும் பொய்யாக இது இருக்கலாம்’ என்றும், அந்த மனிதன் அத்தனை நல்லவனில்லை, 6 வயது மகனின் தந்தையான அவன், தகாத காதலால் தன் மனைவியை தற்கொலைக்கு தூண்டியவன் என்றும் மனம் பொருமிக் கொண்டே சொல்கிறாள். தந்தை அதிர்ந்து போய் விவரம் கேட்க, மகள் அந்த மனிதன் ஒரு சலவைக்கடை வைத்திருப்பவன் என்றும், அவனது கள்ளக்காதலை பற்றித் தெரிந்ததும் மனைவி சலவைத்திரவத்தை குடித்து தற்கொலை செய்ய முயன்று ஆறு மாதமாக கோமாவில் இருப்பதாகவும் கூறுகிறாள்.
தந்தையிடம் இவற்றை சொல்கையில், மகள் மிகவும் மனமுடைந்து அழுகிறாள். பின் தன் தாயும் அவளது காதலனும் பரிமாறிக்கொண்ட கடிதங்களை தான் தான் அந்த காதலனின் மனைவிக்கு கடை எண் மூலம் தொடர்புக்கொண்டு மின்னஞ்சல் முகவரி வாங்கி அவற்றை அனுப்பியதாகவும், அந்த நாளன்றுதான் அவள் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் கூறுகிறாள். அந்த பெண் இப்போது மீளாத கோமாவில் இருப்பதற்கும், அந்த 6 வயது குழந்தை தாயின்றி போனதற்கும் தானே காரணம் என்று அழுகிறாள். எல்லாவற்றையும் கேட்டு அதிர்ச்சியில் உறைகிறார் இந்த கணவர். இந்த நிகழ்வுகளின் சங்கிலித்தொடரில் தானும் ஒரு கண்ணிதானோ என யோசிக்க தோன்றுகிறது அவருக்கு. ஒருவேளை தான் விலகாமல் இருந்திருந்தால் இத்தனையும் நிகழ்ந்திருக்காதோ என்றும் தோன்றுகிறது. முடிந்தவரை இந்த பிரச்சினையை முடித்து வைக்க பார்ப்போம் என எண்ணி மனைவியிடம் மகள் சொன்னவை அனைத்தையும் சொல்கிறார். அவள் உடனே மகளை கண்டபடி திட்டி வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறாள்.
வீட்டை விட்டு கிளம்பும் மகளை சமாதானப்படுத்தி அழைத்து வரும் அவர், இதற்கெல்லாம் அவள் காரணமில்லை என்றும், உண்மைகள் எப்போதுமே தெரிய வேண்டியவைதான் என்றும் சொல்கிறார். மீண்டும் வீட்டிற்கு வரும் மகள் தன் அறைக்கு சென்று உறங்குகிறாள். அவளிடம் சன்னமான குரலில் தாய் உரையாடும் காட்சிகள் அழகு.தன் மகள் செய்ததை காதலனிடம் தெரிவிக்க அவனது வீட்டிற்கு செல்கிறாள் அந்த மனைவி. அவன் அங்கு அவனது மனைவி பயன்படுத்திய வாசனை திரவியங்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறான். கோமாவில் இருந்து அவள் மீள்வாளா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள கடைசி அஸ்திரமாக, அவளது நுகர்வு திறனை மருத்துவர் பரிசோதிக்க போவதாக தெரிவிக்கிறான். கூடவே அவன் பயன்படுத்திய வாசனைத்திரவியம் ஒன்றையும் வைக்கிறான். அது அவளுக்கு விருப்பமான ஒன்று எனவும் சொல்கிறான். ”மனைவியிடம் உனக்கு அவ்வளவு பாசமிருக்கிறதா?” என்று கேட்டு விட்டு, இவள் தன் மகள் செய்ததை முழுவதும் அவனிடம் விவரிக்கிறாள். அவனோ அந்த நாளன்று தன்னிடம் சண்டை போட்ட மனைவி, தங்களது சலவைக்கடைக்கு போகவே இல்லை என்றும்,  கடைத்தொலைப்பேசியில் அவள் பேசியிருக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறுகிறான்.

உடனே அவனது கடைக்கு சென்று, அங்கிருக்கும் பணிப்பெண்ணை அன்று என்ன நடந்தது என்று விசாரிக்கிறான். அவளோ, போனில் தொடர்பு கொண்டவர் மின்னஞ்சல் முகவரி கேட்டதற்கு தானே அதை கொடுத்ததாக கூறுகிறாள். கோபமடைந்து இத்தனைக்கும் நீதான் காரணம் என்று இரையும் இவன், உடனே அவளை வேலையை விட்டு போகுமாறு கூறுகிறான். அவள் தன் பொருட்கள் அனைத்தையும் வேகவேகமாக எடுத்து கொண்டு, அவனிடம் வந்து, “உன் மனைவி நானும் ஒரு ஈரானியள் என்பதால் எப்போதும் என்னையும் உன்னையும் இணைத்து சந்தேகப்பட்டுக்கொண்டு இருந்தாள். நான் இங்கு போதிய சான்றுகள் இல்லாமல் வேலை செய்வதால் எப்படியாவது என்னை வேலையை விட்டு துரத்திவிட துடித்தாள். வாடிக்கையாளருடன் வேண்டுமென்றே ஒரு பிரச்சினையை உருவாக்கி, அதை தீர்த்து வைக்க போலீஸ் வந்தே ஆக வேண்டும் என்று வேண்டுமென்றே பிடிவாதம் பிடித்தாள். வரும் போலீஸ் என் சான்றுகளை பரிசோதிக்கும்; என்னை சிறையில் அடைக்கும் என்ற திட்டத்தோடுதான் அவள் அதை செய்தாள். அவள் அந்த மின்னஞ்சல் மூலம் உண்மைகளை தெரிந்து கொண்டால் குறைந்தபட்சம் என் மேல் உள்ள வன்மத்தையேனும் மாற்றிக்கொள்வாள் என்பதால்தான் அப்படி செய்தேன். நான் அந்த மின்னஞ்சல் முகவரியை கொடுத்தன்னவோ உண்மைதான். ஆனால் அவள் அவற்றை திறந்தும் கூட பார்க்கவில்லை, பார்த்திருந்தால் என் முன்னால் வந்து சலவைத்திரவத்தை குடித்திருக்க மாட்டாள்; உன் காதலி முன்னால் போய் அதை செய்திருப்பாள்” என்றுக் கூறிவிட்டு விடுவிடுவென நடந்து சென்றுவிடுகிறாள். யாரைத்தான் தப்பு சொல்வது என நொந்துக்கொள்ளும் அவன் மருத்துவமனைக்கு கிளம்பி செல்கிறான்.

அவன் கொடுத்த வாசனைத்திரவியங்களை சோதித்து விட்டதாகவும், அவன் மனைவியிடம் ஒரு அசைவும் இல்லை எனவும் தாதி கூறுகிறாள். “எல்லா திரவியங்களை பயன்படுத்தினீர்களா?” என்று இவன் கேட்க “இல்லை; ஒன்றிரண்டுதான் பயன்படுத்தினோம்” என்று கூறி விட்டு நகர்கிறாள் தாதி. மனைவியின் அறைக்குள் செல்லும் அவன், அவளது விருப்பத்திற்குரிய, அவன் பயன்படுத்திய வாசனைத்திரவத்தை மெல்லிய தன் சட்டையில் சற்று தெளித்துக்கொண்டு பின் ஏதோ யோசித்து தன் கழுத்திலும் சிறிதளவு தெளித்துக் கொண்டு, அவள் கட்டிலை விசையால் உயர்த்தி அவளை உட்கார்ந்த நிலையில் வைக்கிறான். பின் அவளது கைகளின் மேல் தன் கையை வைத்து, அவளருகில் ”இந்த மணத்தை நீ கண்டு கொண்டாயானால் என் விரல்களில் மெலிதாகவேனும் ஒருஅழுத்தம் கொடு” என்று கேட்கிறான். அதை மீண்டும் மீண்டும் சொல்கிறான். நீண்ட நாள் கோமாவில் பயங்கரமாக மெலிந்தும், களையிழந்தும் போயிருக்கும் அந்த உருவத்தில் கண்களிலிருந்து கண்ணீர் வழிவது இடப்பக்கத்திலிருக்கும் நமக்கு தெரிகிறது; வலப்பக்கத்திலிருக்கும் கணவன் அதை கவனிக்காமல் எழ முற்படும் போது, அவளது கைகள் மெலிதாய் அசைந்து அவன் கரங்களை பற்றிக்கொள்கிறது. அந்த காட்சி படம் பார்க்கும் எவருக்கும் எப்போதுமே மறக்காது என்றே தோன்றுகிறது. பல சமயங்களில் நம் உடனிருப்பவர்களின் பிரியத்தை நாம் கவனத்தில் கொள்வதேயில்லையோ என ஒரு நிமிடம் நம்மை யோசிக்க வைக்கும் திரைப்படம்.

இந்த வாழ்வு அப்படி ஒன்றும் நிலையானத்தன்மை உடையதல்ல. நம் கூடவே இருப்பவர்கள் எப்போதும் தம் செய்கைகளினால் அவர்களது அன்பை உணர்த்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். பல சமயங்களில் நாம்தான் அதை உணர தவறி விடுகிறோம். பெற்றவர்களின் அன்பு நமக்கு திருமணமாகும்வரை புரிவதேயில்லை. நான் குளிக்கும் நேரத்திற்கேற்ப சரியான இடைவெளியில் ஹீட்டர் போட்டு சுடுநீர் தயாராய் வைத்திருந்த அப்பாவின் அக்கறையும் அன்பும், அவர் இறந்துப்போன சில நாட்களுக்கு பின், கணவருக்கும் குழந்தைக்கும் வேண்டியவற்றை தயார் செய்து விட்டு, எனக்கென்று சுடுதண்ணீர் வைக்கக்கூட நேரமில்லாமல் மார்கழிக்குளிரில் கோவையின் சில்தண்ணீரில் குளிக்கும்போதுதான் புரிந்தது. இன்னும் கூட என் சித்தி பெண்ணோ மாமா பெண்ணோ இந்த சீராடல்களை அனுவைப்பதை பார்க்கும்போது ‘எல்லாம் அம்மா வீட்ல இருக்கறவரைக்கும்தானே! பாவம்’ என்று ஒரு எண்ணமும், நான் சீராடிய நினைவுகளும் மாறி மாறி வருவது தவிர்க்கவே இயலாததாகி விட்டது.

எத்தனை உருகி உருகி கிடைத்த பொருளாய் இருந்தாலும், நமக்கே உரியதாக அந்தப் பொருள் ஆகி விட்ட பின்னர், சில நாட்களில் அது முக்கியத்துவம் அற்றதாகி போய் விடுகிறது. ஃபேஸ்புக்கோ வாட்ஸ்-அப்போ ட்விட்டரோ எப்போதும் இனிப்பாய் இருப்பவர்களுக்கு உடனிருக்கும் மனிதர்கள் மட்டும் உடனுக்குடன் அலுத்துப்போய் விடுவதை என்னவென்று சொல்வது? ஹ்ம்ம்ம்.... இப்படத்தின் ஒரு காட்சியில் நாயகன் சொல்வான், “அவ என்னை இந்தளவுக்கு விரும்பியிருப்பான்னு எனக்கு தெரிஞ்சுருந்தா இதெல்லாம் நடந்தே இருக்காது” என்று. எல்லாம் அர்த்தமற்று போன் பின் அந்த அன்பு புரிந்தால் என்ன, புரியாவிடில்தான் என்ன? இருக்கும்போது கொடுத்தால் தான் எதற்குமே மதிப்பு!!!

நேரம்  கிடைக்கும் போது பார்க்க வேண்டிய படங்களின் வரிசையில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்... :)