Friday, June 18, 2010

எனக்கான உன் கவிதைகள்....2


நாழிகைக் கொருமுறையேனும்
நினைவேறிடும் நிகழ்வில்,

நானுனக்கு தந்திட

யாதுள்ளதென எண்ணுகையில்,

என்னிருப்பில் மிச்சம் தாய் புகட்டிய தமிழொன்றே...

உனைத் தோள் சாய்த்துப் பதிவு செய்த

நிழற்படத்தின் நேரெதிரில்,

கூர் பார்வைஅதில் பதித்து,

இமையோரம் நீர் முட்ட

தமிழ் தந்தேன்...


******************

மார் புசித்த மழலையின் வாசம்,

இதழ் நனைத்த பூக்களின் தேசம்,

குளிர் மிகுந்து வாடையில் வீசும்,

இரவெரிக்கும் இறுக்கம் உன் சுவாசம்....


********************

பால் வெளியும் போதுமில்லை

புன்னகைக்கு...

சூல் கொண்ட பூவனங்கள்

முகிழ்த்தலொத்த

தேவதைக்கு....


*********************

பி. கு: என்னடா... இந்த பொண்ணுக்கு ஒரு கவிதையே ஒழுங்கா எழுத வராதே! எப்படி ஒரே ஸ்ட்ரெட்ச்ல மூணு கவிதையெல்லாம் போஸ்ட் பண்ணுதுன்னு யாரும் சந்தேகப்பட வேண்டாம்! இதெல்லாம் நான் எழுதினதே இல்லை! என்னவர் எனக்காக எழுதினதாக்கும்...(என்ன? 'போதும் ரொம்பத்தான் அலட்டிக்காதே'ன்னு ஏதோ மைன்ட் வாய்ஸ் கேக்குது... சரி சரி எல்லாம் இருக்குறதுதானே... கண்டுக்காதீங்க) இந்த மாதிரி இன்னும் நிறைய ஸ்டாக் இருக்குறதால இனி அடிக்கடி இப்படி போஸ்ட் பண்ணப்படும் என்று அறிவித்துக் கொள்(ல்)கிறேன்....

Monday, June 14, 2010

பல நாள் திருடன் (அல்லது) தோழன்! - பார்ட் 2

பார்ட் ஒண்னு! இங்க இருக்கு! http://kanavugalinmugavarii.blogspot.com/2010/06/blog-post.html

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றவன் தொடர்ந்தான்.
"நீ ஸ்கூல்ல பார்த்த மாதிரியே தான் இருக்கே தெரியுமா? சொல்லப் போனா இன்னும் கொஞ்சம் பளிச்னு அழகா இருக்கே! நீ பேசறது கூட மாறவே இல்லை! இன்னும் அதே குழந்தைத்தனத்தோடு இருக்கு! எனக்கு உன்னை பார்த்ததே ரொம்ப சந்தோஷமா இருக்கு!" என்றான்.(அட நெசமாவே சொன்னான். இப்படியெல்லாம் சந்தேகமா பார்க்க கூடாது.
"ஆனா நீ அப்படி இல்லவே இல்லை, ரொம்பவே மாறிட்டே! வேற யாரோ போல இருந்தது அன்னிக்கு பார்க்கறதுக்கு! ஏதோ அரேபியன் ஷேக் மாதிரி" என்று சட்டென கூறி விட்டேன். பின் சொல்லியிருக்க வேண்டாமோ என தோன்றியது.
"எல்லோரும் அதே தான் சொன்னாங்க" என்றான். "சரி சாப்பிட்டாச்சா" என்றதும், "ம்ம்ம்ம்ம் ஆச்சு" என்று சொன்னேன். "இதுக்கு மட்டும் தான் பலமா பதில் வருது. உருளைகிழங்கு!நான் ஸ்கூல்ல உன்னை இப்படி கூப்பிடுவேன். ஞாபகமிருக்கா?""உருளைக்கிழ‌ங்கு பூச‌ணிக்காய் ஆகி ரொம்ப நாள் ஆச்சு! இந்த ராஜ‌ன் என்னை ரொம்ப‌வே ஓட்டுவாங்க""ஹலோ!ராஜ‌னை விட நான் ந‌ல்லாவே ஓட்டுவேன். என்ன‌? நான் எல்லாம் செக்போஸ்ட்ல‌ கொஞ்ச‌ம் தூங்கிட்ட‌தால அவ‌ர் என்னை ஓவ‌ர்டேக் ப‌ண்ணிட்டாரு! வேற‌ ஒண்ணுமில்லை. ச‌ரி விடு இனி வ‌ருத்த‌ப்ப‌ட்டு என்ன‌ பிர‌யோஜ‌ன‌ம்?" என்றான்
பையன் என்னெனவோ பேசறானே? சரி இல்லையே என்று யோசித்தவள்,
"சரி சொல்லு! நீ இன்வைட் வைக்க போனே இல்லை? மத்த ஃப்ரென்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்க? என்ன சொன்னாங்க?" என்றேன்."நிஷாந்தி கூட அப்படியே தான் இருந்தா! யாமினி கிட்ட நெறைய சேஞ்சஸ். ரம்யாவோட பாப்பா ரொம்ப க்யூட்டா இருந்துச்சு" என்று எல்லோரையும் பற்றி பேசிக் கொண்டிருந்தவனை "பசங்க யாரையும் இன்வைட் பண்ணலியா நீ?" என்று இடைமறித்தேன்."கொஞ்சம் பேரை தான் பார்க்க முடிஞ்சுதுப்பா! இனிமே தான் அவங்களை எல்லாம் பார்க்கணும்" என்றான். "அது சரி" என்று விட்டு விட்டேன். அந்த திருமண நாளன்று எல்லோரும் பேசிக்கொண்ட படி சந்தித்தோம். அவர்களுள் சிலரை ஏழு, எட்டு வருடங்கள் கழித்து பார்த்ததால் அந்த சந்திப்பு மிகவும் சந்தோஷமாகவே இருந்தது.கொஞ்ச நேரத்தில் பெண்கள் மட்டும் தனியே அரட்டை அடிக்க ஆரம்பித்தோம். எல்லோரும் எங்கே இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதையெல்லாம் பேசிய பிறகு ராஜேஷ் இப்படி ஒவ்வொருத்தரையும் மறக்காமல் இன்வைட் பண்ணியதை பற்றி பேச்சு வந்தது.
ரம்யா "ஆனாலும் இந்த ராஜேஷ் ரொம்ப ஜாஸ்தியாவே வாயாடறான்ப்பா! என் ஹஸ்பென்ட் ஸ்கூல் நடத்தறார்னு சொன்னதும் 'அடிப்பாவி ஒரு கிழவனையா கல்யாணம் பண்ணிக்கிட்டே?. ஒரு வார்த்தை சொல்லி இருந்தேன்னா ஓடி வந்து உன்னை காப்பாத்தி கல்யாணம் பன்ணியிருப்பேனே'னு சொல்றான். அவர் ஒண்ணும் கிழவன் இல்லை அவங்கப்பாவோட ஸ்கூலை அவர் பார்த்துக்கறார். அவ்வளவு தான்னு சொன்னேன். 'இருந்தாலும் நான் தான் உன்னை மிஸ் பண்ணிட்டேன்' அப்படின்னு எல்லாம் நூல் விடறான்ப்பா! "ம்க்கும் நீ மிஸ் பண்ணலை! நான் தப்பிச்சுட்டேன்"ன்னு நல்லா பல்ப் கொடுத்தேன்.
நிஷாந்தியும் உடனே, "ஆம்மாமா! கொஞ்சம் ஓவராத்தான் வழிஞ்சுட்டு இருக்கான். எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்குனு சொன்னதும் என்கிட்டயும் இதே பிட்டைத்தான்டி ஓட்டினான். சரி ரொம்ப நாள் கழிச்சு பேசறோம். இன்னொரு பத்து நாள்ல பாவம் கெளம்பிடுவானேனு நான் ஒண்ணும் கண்டுக்கலை" என்றாள்.
"என்கிட்ட இந்த டயலாக் எல்லாம் சொல்லலனாலும், நான் யாரையாவது லவ் பண்றேனா என்னனு கேட்டு நச்சரிச்சுட்டு இருந்தான்டி" என்றாள் யாமினி.
இதை எல்லாம் காதை திறந்து அது வரை கேட்டு கொண்டிருந்த நானும் என்னிடம் இவன் சொன்னதை சொல்ல, எல்லோருமே நற நறவென பல்லை கடிக்க தொடன்கினார்கள். ஒவ்வொருத்தரும் பையன் ஏதோ 'ஆட்டோகிராப்' படமோ, 'அழகி ‍ பார்ட் 2'வோ எடுக்க முயற்சிப்பதாக நினைக்க, கடைசியில பயபுள்ள "நான் அவன் இல்லை பார்ட் 3" எடுக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருந்திருக்கு....
கல்யாண பொண்னை பாக்கலாம்னு நாங்க எல்லாரும் மணப்பெண் அறைக்கு போனோம்; பாதி திற்ந்து இருந்த கதவிடுக்கில் பார்த்தால் சின்னப் பொண்னு ஒன்னு மருதாணி வெச்சு விட குனிந்த வாறு அமர்ந்திருந்த மணப்பெண்ணிடமும் தன் பிட்டை திருப்பி ஓட்டிக் கொண்டிருந்தான் ராஜேஷ்!
“ம்ம்ம் எங்கண்ணா மொதல்ல கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தான் உங்கள எனக்குத்தான் ஃபர்ஸ்ட் கேட்டாங்க!, ஆனா திடீர்னு இப்பிடி ஆயிடுச்சி... நான் உங்கள மிஸ் பண்ணிட்டேன்” அப்ப்டின்னு கதயளந்து கொண்டிருந்த போது என் நண்பி ஒருத்தி உடன் சென்று அவனது அண்ணனை மாப்பிள்ளை கோலத்திலேயே அங்கு இழுத்து வந்து நிறுத்தவும்- வழிய வழிய ராஜேஷ் விழிக்கவும் சரியாக இருந்தது!
தடியடி உற்சவப் பொறுப்பை ராஜேஷின் அண்ணன் வசம் ஒப்படைத்து விட்டு விட்டோம் ஜூட் அங்கிருந்து எல்லோரும்!

Monday, June 7, 2010

பல நாள் திருடன் (அ) தோழன்!

அன்று எனக்கு அலுவலகத்தில் அதிகமாக ஆணி இல்லாமல் ஈ ஓட்டிக் கொண்டிருந்த போது, ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.
"ஹேய் எப்படி இருக்கே?" கொஞ்சம் பரிச்சயமான குரல் தான்.

"நல்லா இருக்கேன். நீங்க யாரு?"...

"கண்டுபிடி பார்ப்போம்"... சட்டென நினைவு வந்தது.

"சதீஷ் தானே?"

"அடிப்பாவி சொல்லவே இல்லை. அது யாரு?"

"என் கூட ஸ்கூல்ல படிச்சியே? சதீஷ்.. பொய் சொல்லாதே! சரி நீ மலேசியா போனே இல்ல? திரும்பி இந்தியா வந்தாச்சா? எப்போ வந்தே?"

"ஹலோ! நான் சதீஷ் இல்லப்பா! ராஜேஷ் கண்ணா! பார்த்தியா! சதீஷை ஞாபகம் வெச்சுருக்கே! என்னை மறந்துட்ட!" என்றதும்,

"ஏ சாரிப்பா அவன் வாய்ஸும் இதே மாதிரி தான் இருக்கும்" என்று சமாளித்து விட்டேன். "ஆமாம் நீ இந்தியா வந்தாச்சா?" என்றேன். "ஆமாம் எங்கண்ணாக்கு கல்யாணம் அதனால இந்தியா வந்திருக்கேன். சரி உன்னை எப்போ பார்க்கலாம்? இன்வைட் கொடுக்கணுமே?" என்றான். "இன்னைக்கு நான் இங்கருந்து கிளம்பவே நேரமாயிடும். நாளைக்கு பார்க்கலாம். ஒகேவா?" என்வும் சரி என்று போனை வைத்தான்.

ராஜேஷ் என்னோடு பதின் நிலை பள்ளியில் மூன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்தவன். பத்தாவது படிக்கும் போது அவனது தந்தை இறந்து விட அப்போது வேறு பள்ளிக்கு போனவந்தான். 8 வருடங்கள் கழித்து மீண்டும் பேசுகிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு இவன் ஜி டாக்கில் திடீரென பிரசன்னமாகி, நாந்தான் உன் கூட படிச்ச ராஜேஷ் இப்போ துபாய்ல எலெக்ட்ரிகல் என்ஜினியரா வேலை பார்க்கறேன் என்று சாட் செய்ய ஆரம்பித்தான். அடுத்து இவன் மூலமாக வேறு பல நண்பர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரிய வ‌ர, எல்லோருக்குமாய் ஒரு கூகிள் குரூப் தொட‌ங்கி அனைவ‌ரும் தொட‌ர்பில் இருந்து வ‌ருகிறார்க‌ள். அடுத்த நாளும் நான் கிள‌ம்ப லேட்டாகி விட்ட‌து மேலும் என் ப‌ழைய மொபைல் கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம் செத்துக் கொண்டிருந்த‌து மொத்த‌மாக உயிரை விடும் த‌ருவாய்க்கு வ‌ந்து அன்று ஒரு புதிய மொபைல் வாங்க உத்தேசித்திருந்தேன். கிளம்பும் நேரத்தில் ராஜேஷின் போன் வந்தது. "சரி நான் மொபைல் வாங்க போலாம்னு இருக்கேன். நீயும் கடைக்கு வர்றியா?" என்று கேட்டு கடையின் பெயரை சொல்லி விட்டு கிளம்பினேன். சொன்னபடி இருவரும் கடைக்கு வந்து விட்டோம்.
பல மொபைல் மாடல்களை அலசி ஆராய்ந்து விட்டு ஒரு வழியாக சாம்சங் கார்பி வாங்கிக் கொண்டு பக்கத்திலிருந்த ஹோட்டலுக்கு போய் ஜூஸ் ஆர்டர் செய்தவுடன், "உனக்கு எப்போ கல்யாணம்?" என்று கேட்டான் ராஜேஷ். "வர்ற டிசம்பர் 2010க்கு முன்னாடி இருக்கும்" என்றதும், "அட இன்னும் ஆறு மாசம் தானே இருக்கு!மாப்பிள்ளை பாத்தாச்சா?"... "ஓ பார்த்தாச்சே!" "எங்கே ஃபோட்டோ காமி" என்றதும் என் மொபைலில் இருந்த ஒரு போட்டோவை காண்பித்தேன். "ம்ம் நல்லாத்தான் இருக்காரு" என்றவன் அவரது இன்ன பிற விவரங்களைப் பற்றி கேட்கவும் சொன்னேன். "என்ன? கோயம்புத்தூர்ல செட்டில் ஆகப் போறியா?" என்று அதிர்ச்சியானவன், பின்பு "நாசமாய் போ" என்பது போல் "சரி நல்லாயிரு" என்று வாழ்த்தினான்.
பின்பு இரு நாட்கள் கழித்து ஒரு அழைப்பு. "சொல்லு ராஜேஷ்" என்றதும் "சும்மா தான் ஃபோன் பண்ணினேன். என்ன பண்றே?" "நான் சும்மா தான் இருக்கேன். அப்புற‌ம்? சொல்லு!நம்ம ஃப்ரென்ட்ஸ் எல்லாருக்கும் இன்வைட் வெச்சுட்டியா? யாரையெல்லாம் பார்த்தே?" என்றேன். "ம்ம் எல்லோருக்கும் வெச்சாச்சு. அப்புறம் உன் கிட்ட ஒண்ணு சொல்லணுமே?" "சொல்லு" என்றேன். கொஞ்சம் திகிலோடுதான்... பயலோட டோனே சரி இல்லையே!


தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......