Tuesday, March 15, 2011

என் தங்கை கல்யாணி 2




போனில் பேசிய அப்பாவின் குரல் அவனை வெகுவாய் கலவரப்படுத்தி இருந்தது.... “பிரகாஷ் உன்னால இப்போ இந்தியா கிளம்பி வர முடியுமாப்பா?”

“ஏம்ப்பா... அம்மாக்கு ஏதாவது?”

“அம்மாக்கு ஒண்ணுமில்லப்பா.. உன் தங்கச்சிக்குதான்... ஏதோ கட்டி மாதிரி வந்திருக்குன்னு மாப்பிள்ளை ஆஸ்பத்திரி கூட்டிட்டு போனாராம்ப்பா... அங்கே கேன்சர்னு சொல்லிட்டாங்களாம். அவர் இப்ப நம்ம வீட்டுக்கு வந்து சொல்லிட்டு போனாரு” என்பத்ற்கு மேல் அப்பாவின் குரல் மிகவும் குழைந்து போனது.... “எனக்கு ரொம்ப பயமா இருக்கு பிரகாஷ்... என்ன பண்ரதுன்னு தெரியல. அம்மா அழுதுட்டே இருக்கா. தங்கச்சியை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம். லீவு சொல்லிட்டு வாயேன்ப்பா”

இடி விழுந்தது போலிருந்தது அவனுக்கு. ‘என் வாழ்க்கைதான் போச்சு... பரவால்ல கல்யாணியாவது சந்தோஷமா இருப்பாளே’ன்னு ஆசைஆசையாய் கல்யாணம் பண்ணி கொடுத்த பெண். மசக்கையோடு பிறந்த வீடு வரவேண்டியவள், கேன்சரோடுதான் வர வேண்டுமா??? என்று ஒரு மனம் புலம்ப தொடங்க, ‘இங்க இப்போ உடனே லீவு கிடைக்குமான்னு தெரியலயே’ என இன்னொரு பக்கம் சிந்தனை. ‘சரி வரேன்ப்பா...’
‘ என்ன கேன்சர்னு சொன்னாங்க’ என்று கேட்க நினைத்தவனுக்கு, மனதுள் ஏதேதோ தோன்ற அந்த கேள்வியை கேட்கவே முடியவில்லை.

போனை வைத்தவனுக்கு எல்லாமே இருண்டது போல் இருந்தது. தங்கையை மனதுக்குள் நினைத்து பார்க்கவே முடியவில்லை. வேலையில் கவனம் செலுத்துவது சாத்தியமே இல்லத ஒன்று என தோன்ற அரை நாள் லீவு சொல்லி விட்டு தன் இருப்பிடத்துக்கு சென்றான். ‘தங்கையின் கணவருக்கு போன் செய்தால் என்ன? அவர் இத்தனை தடுமாறாமல் பேசுவார்’ என யோசனை வர அவருக்கு போன் செய்தான். அவர் சொன்ன தகவல்கள்... ’இந்த கொடுமையெல்லாம் எதுக்கு உலகத்தில் நடக்கிறது’ என அன்றெல்லாம் அரற்றல்தான். விஷயம் தெரிந்து கொண்ட அறை நண்பர்களுக்கும் கூட அவனை சமாதானப்படுத்த முடியவில்லை.

*********

ஒரு வழியாய் இரண்டு நாட்களில் சென்னை வந்து சேர்ந்தாயிற்று.
பிரகாஷ் அவனது தங்கையை பார்த்த போது அதிர்ந்தே போனான். கல்யாணம் செய்யும் போது பார்த்த பெண்ணா இவள்? எத்தனை போஷாக்காய் இருப்பாள்? ஏன் இப்படி வாடி போயிருக்கிறாள் கல்யாணி நிறம் மிகவும் கம்மி, சுமாரான அழகுதான் என்றாலும் அவளது முழங்கால் வரை நீண்ட தலைமுடி அத்தனைக்கும் ஈடு கட்டி விடும். சின்ன வயதிலிருந்தே அவர்கள் இருவரும் அதிகமாய் பேசி கொள்ள மாட்டார்கள். அவரவர் நட்பு வட்டத்துடன் விலகியே வளர்ந்தார்கள். அவள் ஒரு பொருட்டாக தோன்றியதே இல்லை அவனுக்கு. கடைசி இரண்டு வருடங்கள் மட்டும் தானே ஒரு நெருக்கம் வந்து சேர்ந்து கொண்டது. அது அவள் கல்யாணமாகி வேறு வீடு சென்று விடுவாள் என்பதால் இருக்கும் என்று அவன் நினைத்துக் கொள்வான்.

அதை தவிரவும் வேறு காரணங்களை காலம் தன் வசம் வைத்திருந்தது போலும். அவளை பார்ததும் அவனுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது. பேசவே முடியவில்லை. “எப்படி இருக்கே அண்ணா... உனக்கு தலைமுடியெல்லாம் நிறைய கொட்டி போச்சு அண்ணா. அங்கே வெயில் அதிகமா? லீவு போட்டு உன்னை வர வெச்சு கஷ்டப்படுத்திட்டேனா?” என்று தணிந்த குரலில் பேச ஆரம்பித்தாள் அவள்.

கல்யாணிக்கு வந்திருந்தது மார்பக புற்றுநோய். எத்தனை நாட்களாக இருந்ததோ? பாவிப்பெண் வீட்டில் எதுவுமே சொல்லவில்லை. அவள் கணவராகவே தான் டாக்டரிடம் அழைத்து சென்றிருக்கிறார். சில டெஸ்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது ‘இனி ஏதும் செய்ய இயலாத புரையோடிய பிரெஸ்ட் கேன்சர்’. இவளிடம் இன்னும் இதை சொல்லவில்லை. அவள் ‘ஆப்டோமெட்ரி’ எனப்படும் கண் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்ற்வள். ‘மருந்து சாப்பிட்டால் சரியாகி விடும்’ என்று சொல்லி வைத்தாலும், அவள் அனைத்தையும் உணர்ந்தே இருந்தது அவனுக்கு புரிந்தது.

*********
அவன் சென்னை வந்த பின் அங்கு இருக்க நேர்ந்தது வெறும் 40 நாட்கள் தான். எல்லாம் அதற்குள்ளேயே முடிந்து விட்டது.அந்த 40நாட்களும் அவனும், இரு குடும்பத்தாரும் பட்ட அவஸ்தை... மருந்து கொடுக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே “ரேடியேஷனும்’ தேவைப்படும் என டாக்டர் சொல்லி விட்டதால், அதற்கும் அவளை ஆட்படுத்தினார்கள். நாளுக்கு நாள் கல்யாணியின் தோற்றம் மெலிந்துக்கொண்டே வந்தது. ‘எத்தனை நாள் அவள் குண்டாய் இருக்கிறாள்’ என கேலி செய்திருப்பேன் என்று நினைத்துக்கொண்டான் பிரகாஷ்.

30வது நாளின் போது கேன்சர் அதிகம் முற்றியதால் கண் பார்வையை இழந்தாள் அவள். எத்தனை பேர் கண்களை பரிசோதித்திருப்பாள் என நினைக்கவே மனம் கனத்தது... நீண்ட தலைமுடி வேர்வேராக கொட்டியதில் ஆங்காங்கே தலையில் சொட்டை விழுந்தது. அவளிடம் தலையை மொட்டை அடித்து கொள்ள சொல்ல யாருக்கும் துணிவில்லை. கண்ணாடிகளே வீட்டில் எங்கும் இல்லாதவாறு பார்த்துக்கொண்டனர் அவளது கணவன் வீட்டில். தலையை அடிக்கடி தடவி பார்த்துக் கொண்டவள் கடைசியில் அவளே ‘எனக்கு மொட்டை அடிச்சு விட்டுடறீங்களா அத்தை” என அவளது மாமியாரிடம் கேட்ட போது, எல்லோருக்கும் வாழ்க்கையே பிடிக்காமல் போனது. அவளுக்காக, அவளது கணவனும், மாமியாரும் அவளுடனே மொட்டை அடித்து கொண்டனர்.

அந்த தினத்திற்கு சரியாக மூன்று நாள் கழித்து அவள் மரணித்தாள். வாழ்க்கையின் அத்தனை செயல்களும் அர்த்தமற்று போனது பிரகாஷிற்கு. தங்கையின் கண்வன் நிலை தன்னிலும் பரிதாபம். எங்கிருந்தோ வந்து தன்னுடன் வாழ்க்கையை பிணைத்து கொண்டவள் திடீரென கரைந்து போனதன் தாக்கம் அவனை மொத்தமாய் அசைத்து விட்டிருந்தது.

தங்கைக்காகவே வெளிநாடு வந்து, தன்னை மணக்க நினைத்தவளின் காதலை இழந்து போனதற்கு, இப்போது ஒரு பயனும் இல்லை. இந்தியாவிலேயே அப்பா அம்மாவுடன் இருந்து விட்டாலும் கவலையை தவிர வேறு எதுவும் மிஞ்ச போவதில்லை என்பதால் அவர்களை ‘ஒரே வருடத்தில் வந்து விடுகிறேன்’ என சமாதானப்படுத்தி விட்டு, அடுத்த ஐந்து நாட்களில் கிளம்பி வந்து விட்டான். இனி எங்கு வாழ்ந்தால் தான் என்ன?

இப்போதும் எல்லாம் வழக்கம் போல் தான் நடக்கிறது

ஏதோ நாட்கள் ஓடுகின்றன. உண்டு, உறங்கி, வாடிக்கையாளர்களுடன் மல்லுக்கட்டி, கூட வேலை செய்பவர்களின் பொறாமைக்கு ஆளாகி, எல்லாம் எப்போதும் போல் தான் நடக்கின்றன.

பி.கு : கதையின் கல்யாணி என்னுடன் வேலை பார்த்தவர். அவரது இந்த திடீர் இழப்பு அனைவரையுமே அதிர்ச்சி ஆளாக்கியது. இரு மாதங்களுக்கு முன்னே நிகழ்ந்த அவரது மரணத்தை மறக்க எனக்கே பல நாட்கள் ஆனதெனில் அவரது குடும்பத்தாரின் நிலையை என்னவென்று சொல்ல??
பொதுவாக மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் சமயத்தில், 35-40 வயதில் மட்டுமே, வரும் ஆபத்து அதிகம் என்று கூறப்படும். விதிவிலக்காக சில சமயங்களில் இளம்பெண்களுக்கும் இது வரலாம் என்பது பலருக்கும் புதிய தகவலாகவே இருக்கும். 40 வயதில் ஏதேனும் உடல்நலக்குறைவால் அடிக்கடி மருத்துவரிடம் போவதால், புற்றுநோய் முன்னமே கண்டறியப்படும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் இளம்பெண்களின் நிலை வேறு. அப்போது தான் திருமணமாகியிருந்தாலோ, கருவுற்றிருந்தாலோ அல்லது குழந்தைக்கு பால் புகட்டி கொண்டிருந்தாலோ வரும் ஹார்மோன் மாற்றங்களால், மார்பகங்களில் தென்படும் சிறு மாற்றங்கள் கவனிக்கப்படாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இதனால் இளம் வயதில் வரும் மார்பக புற்றுநோய் முற்றிய நிலையில்தான் சிகிச்சைக்கு வருகிறது. உயிர் பிழைக்கும் விகிதமும் இதனால் குறைந்து போகிறது.

செய்ய வேண்டியது:

பெண்கள் தங்கள் ஒரு பக்க மார்பகத்தில் மட்டும் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்பதை 3மாதங்களுக்கு ஒரு முறையேனும் சுயபறிசோதனை செய்து கொள்ள வேண்டும்

1. வீக்கம் - மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும்.

2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும்

3. முலைக் காம்பிலிருந்த இரத்தமோ வேறு திரவமோ கசியும்.

4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்)

5. சமீப காலமாக முலைக்காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும்.


மேற்கண்ட மாறுதல்களில் ஏதேனும் தென்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை அணுகவும்.

ஆரம்ப நிலையில் கண்டிபிடித்தால் மார்பகத்தை அகற்ற வேண்டிய அவசியமும் கூட இல்லை.

புற்றுநோயை எதிர்ப்போம். மகிழ்வுடன் வாழ்வோம்
(முற்றும்.....)

Monday, March 14, 2011

என் தங்கை கல்யாணி 1


இன்று மெயிலில் வந்திருந்த அவளின் திருமண அழைப்பிதழை மீண்டும் ஒரு தடவை பார்த்தான் பிரகாஷ். ’எப்படி சம்மதிச்சே பிருந்தா? தொடர்ச்சியா ஒரு வாரம் பார்க்க முடியாம போனாலே கஷ்டமா இருக்குன்னு சொல்லுவியே! இனி காலம் முழுக்க நாம பார்த்துக்க முடியாதே. என்னை பார்க்காம ஆறு மாசம் இருந்துட்டதால பிரிவு அத்தனை லேசாயிடுச்சா உனக்கு’ என்றெல்லாம் ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்தான். ஏற்கனவே கசக்க ஆரம்பித்திருந்த வெளிநாட்டு வாழ்க்கை இந்த கணம் முதல் முழுதாய் வெறுத்து போய் விட்டது. மாதம் ஒரு லட்ச ரூபாய் வாங்க இன்னும் எதையெல்லாம் இழக்க வேண்டியிருக்கும்.... என்னால் இனி இன்னொரு பெண்ணை மணந்து மனமொத்து வாழ முடியுமா? இதே காதல் அவளிடம் வருமா?? என ஆயிரம் கேள்விகள் மனதுக்குள்.

பிருந்தாவையும் குறை கூற முடியாது. ’அவன் நிறைய சம்பாதிச்சுட்டு வந்ததும் அவங்க வீட்ல உன்னை கல்யாணம் பண்ண ஒத்துக்குவாங்கன்னு எப்படி நம்பறே!! இவனுக்காக மூணு வருஷம் காத்திருந்த பின்னாடி இவன் கைவிட்டுட்டான்னா உனக்கு வயசு இருபத்தேழு ஆகியிருக்கும். இப்ப வர்ற மாப்பிளையும் கூட அப்போ வர மாட்டான். அப்புறம் ஏதாவது கிழவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்’ என்று அவள் அப்பா சொல்லியதை சொல்லி, “என்னை எதுக்காகவும் விட்டுட மாட்டேல்ல” என்று ஒரு மாதம் முன்பு போனில் அழுதவள், எதை நினைத்து குழம்பி இந்த முடிவி எடுத்தாளோ...

அவர்களது கடைசி சந்திப்பு நடந்த கடற்கரை காட்சி நினைவிற்கு வந்தது...

”நீங்க கண்டிப்பா மொரிஷீயஸ் போய்த்தான் ஆகணுமா பிரகாஷ்?” என்று நூறாவது முறையாக கேட்டவளை நிமிர்ந்து பார்த்தான் பிரகாஷ்.

“எனக்கும் கஷ்டமாத்தான்மா இருக்கு. ஆனா இப்போ இங்கே வாங்கற சம்பளத்தில ஒரு மாசத்தை ஈசியா கடக்கறது மட்டும் தான் முடியுமே தவிர, சேமிப்புல்லாம் சாத்தியமே இல்லை. உனக்கே தெரியும். இப்போதைக்கு எங்க வீட்டில நான் மட்டும் தான் சம்பாதிக்கறவன். என் சேமிப்புகளில் தான் தங்கை கல்யாணம் நடந்தாகணும். அவளுக்கும் 25 வயசாகுது. புது வேலையில மாதம் 1 லட்சம் சம்பளம். 3 வருஷம் அங்க இருந்தாக் கூட போதும். நம்மளோட எதிர்கால வாழ்க்கைக்கும் சேர்த்து சம்பாதிச்சுடுவேன் பிருந்தா. என்னை புரிஞ்சுக்கோ... ”

“புரியுது... ஆனா எங்க வீட்ல அத்தனை நாள் காத்திருக்க மாட்டாங்களே! இப்பவே நம்ம விஷயம் ஓரளவு தெரிஞ்சு குதிகுதின்னு குதிச்சுட்டு இருக்காங்க! எங்க ஜாதில இப்பல்லாம் பொண்ணே கிடைக்கறதில்லையாமாம். அத்னால நல்ல வரன் ஏதும் வந்தா இவங்க டார்ச்சர் தாங்க முடியறதில்லை. நீங்களும் கூட இல்லாட்டி நான் என்ன சொல்லி சமாளிப்பேன்?”

“அடுத்த வருஷ லீவுக்கு இந்தியா வரும் போது நம்ம கல்யாண நியூஸோட தான் வருவேன். ஒகேவா? அதுவுமில்லாம, எந்தங்கச்சி கல்யாணம் நடந்தாத்தானே நம்ம கல்யாணம் நடக்க முடியும்?”

“அதுவும் சரிதான். சரி நான் ஏதாவது படிக்கிறதா சொல்லி காலம் கடத்துறேன். வேறென்ன செய்ய? ஆனா, ஒரு வருஷம் எப்படி உங்களை பார்க்காம இருக்க போறேன்னு தான் தெரியல” என சொல்லும் போதே குரல் உடைந்து தேம்ப ஆரம்பித்தாள் பிருந்தா. எப்போதுமே இருவரும் பிரிந்து அவரவர் வீட்டுக்கு செல்கையில் அழுபவள் தான் அவள். ஒரு சில நாட்கள் பிரிவதற்கே அப்படி என்றால் இப்போது கேட்கவா வேண்டும். அவளை தேற்றி, அந்தி சாய்ந்த இருட்டில், சில எச்சில் முத்தங்கள் கொடுத்து அனுப்பிய காட்சி இன்றும் அவன் மனதில அழுத்தமாய் படிந்து கிடந்தது.

‘என்ன யோசிச்சு இனி என்ன ஆகப்போகுது?இதோ இன்னும் இருபது நாட்களில் ஊருக்கு போக வேண்டும். தங்கை கல்யாணத்துக்காக.. சட்டென்று நிச்சயமாகி விட்டது இத்தனை நாள் இல்லாமல். இரு வருடம் எனக்காக காத்திருந்தவள் இன்னும் ஒரு 25 நாட்கள் காத்திருக்காமல் போய் விட்டாள். தங்கை கல்யாணம் முடிந்த அடுத்த நாள் உன்னை இழுத்துட்டு போயிருப்பேனேடி என் தங்கம்... அத்தனை அதிரடியெல்லாம் உன்னை மாதிரி சீன் பார்ட்டிகளுக்கு சாத்தியமில்லை என்று சொன்ன மனதை புறக்கணித்தான். பேச்சிலர் வாழ்க்கை இன்றுதான் எப்போதையும் விட நரகமாய் உறைத்தது. எந்த சுவையும் இல்லாமல் இன்னும் எத்தனை நாள் நீளுமோ இது என்று புதிதாய் நெஞ்சில் பயம் பூத்தது. இதோடு இந்த வேலைக்கு முழுக்கு போட்டு விட்டு போய் விடலாமா? ஆனால் நான் எழுதிக்கொடுத்த 3 வருட ஒப்பந்தத்தை உடைக்க சில பல லட்சங்கள் அழ வேண்டுமே. அதற்கெங்கே போவது? இனி அங்கு போய்த்தான் என்ன ஆகப்போகிறது’ என்று நினைவுகளை வேரறுக்க முயற்சித்தான்

********

தங்கை கல்யாணத்தை முடித்து மீண்டும் இங்கு வந்து 6 மாதம் ஓடி விட்டது. தங்கை கல்யாணத்துக்கு ஒரு பத்து நாள் தள்ளி தான் பிருந்தாவின் கல்யாணம். அவளை நேரில் பார்த்து பேசி, மனதை மாற்றி, தன்னுடன் வருமாறு செய்யலாமா? என மனதுள் ஒரு நப்பாசை பூத்தது. ஆனால் செய்யவில்லை... இந்த மாதிரி என் தங்கை கல்யாணம் நின்றால் எத்தனை பேருக்கு அவமானம் என்றெல்லாம் எப்போதும் போல யோசித்ததின் பலன், அந்த ஆசைக்கு முழுக்கு போடப்பட்டது. வாழ்க்கை அதன் போக்கில் செல்லட்டும் என்ற இயலாமைதான் மிச்சம்.

ஏதோ நாட்கள் ஓடுகின்றன. உண்டு, உறங்கி, வாடிக்கையாளர்களுடன் மல்லுக்கட்டி, கூட வேலை செய்பவர்களின் பொறாமைக்கு ஆளாகி, எல்லாம் எப்போதும் போல் தான் நடக்கின்றன. ஏதோ அங்கே 3 ஜீவன்களாவது என்னால் சந்தோஷப்படுகிறதே என தன் குடும்பத்தாரை பற்றி நினைத்து கொண்டே வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு அப்பாவிடமிருந்து ஃபோன். பொதுவாக அவன் தான் இரவுகளில் போன் செய்வான். என்ன இன்று விசேஷம் என யோசித்துக்கொண்டே, “சொல்லுங்கப்பா. எப்படி இருக்கீங்க” என்றான்......

(தொடரும்....)

Wednesday, March 2, 2011

தபு சங்கர்கள் ஜாக்கிரதை!!!



நம் காதல் சொல்ல
புதுமொழியாய்
உன் புன்னகையும்,
என் கையெழுத்தும்!!




அபூர்வமாய் சில நாட்கள்
நீ சீக்கிரமே துயில் கொள்வாய்
நான் இரவெல்லாம்
வெயில் கொள்வேன்!



உன் மிரட்டல்களுக்கெல்லாம்
பயந்தவனில்லை;
அதட்டல்தான் கொஞ்சம்
அசைத்து பார்க்கிறது!



வேறெவரும் தங்குவதற்கில்லை;
ஊராரும் பெறுவதற்கில்லை;
எனக்கே எனக்காய்
நீ!!!!





மெல்ல சிரிக்கிறாயா,
சோம்பல் முறிக்கிறாயா,
தெரியவில்லை;
இங்கு புரையேறித் துடிக்கிறது
காதல்!