
"அப்பா!இங்க வெச்ச என் மொபைலை காணோமே!" அன்றும் வழக்கம் போல் கல்லூரி கிளம்பும் அவசரத்தில் அனைத்தையும் தேடிக்கொண்டிருந்தாள் ஆராதனா."டி.வி மேல வெச்சிருப்பே பாரு!" என்று அப்பாவின் குரல் கேட்டு மொபைலை எடுத்துக்கொண்டவள் "ஏம்பா சார்ஜ்ஜே இல்ல மொபைல்ல காலைல ஞாபகப்படுத்தலாம்ல?" என்றாள். "நீ காலேஜ் படிக்கிறியா, நான் படிக்கிறேனானு தெரியல" என்று அலுத்துக்கொண்ட ஆராதனாவின் அப்பாவிற்கு 45 வயது.Lic இல் பொறுப்பான பதவியில் இருப்பவர். செல்ல மகளின் படிப்புக்காக தஞ்சையில் இருந்து மாற்றல் வாங்கி சென்னை வந்து தனிவீடெடுத்து அவளுடன் தங்கியிருக்கிறார். ஆராதனாவின் அம்மாவிற்கு மாற்றல் கிடைக்காததால் அவளது தாத்தா,பாட்டி,அம்மா ஆகியோர் தஞ்சையிலேயே இருக்கின்றனர்.
வளர்ந்த பெண்ணானாலும் ஆராதனாவிற்கு எல்லா விஷயங்களிலும் அப்பாவின் உதவி வேண்டும். நிமிடத்திற்கொரு முறை அதுவும் காலை கல்லூரி செல்ல தயாராகும் போது "அப்பா!அப்பா!" என்று அலறிக்கொண்டே இருப்பது அவள் வாடிக்கை. இருவரும் காலையில் சமையலில் இறங்குகிறேன் பேர்வழி என்று செய்யும் ரகளைகள் தான் உச்சபட்ச காமெடி. ஒரு வழியாக அவள் கிளம்பும் போது "குடை எடுத்துக்கிட்டியா?கர்ச்சீஃப் எடுத்துக்கிட்டியா?" என ஒவ்வொன்றாக நினைவுப்படுத்துவார் அப்பா."நேரமாயிடுச்சு! போப்பா" என சிட்டாக பறந்து விடுவாள் ஆராதனா அவளது ஸ்கூட்டியில். "பார்த்து போம்மா" என்ற குரல் காற்றில் அவள் காதுகளை எட்டினால் ஆச்சரியம் தான். அவளுக்கு அப்பாவின் சொற்களோ அவர் செய்யும் உதவிகளோ ஒரு பொருட்டாய் தோன்றியதேயில்லை.
ஆராதனா கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் கடைசி வருடம் மருத்துவம் படிக்கும் பெண்: கடைசி வருடம் 'ஹவுஸ் சர்ஜன்' என்பதால் வெவ்வேறு துறைகளில் சில சில வாரங்கள் பணிபுரிய வேண்டியிருக்கும்.இப்போது ஆராதனா கண்மருத்துவத்துறையில் இருந்தாள். போனதுமே அன்று நிறைய நோயாளிகள் காத்துக்கொண்டிருந்தனர் அவுட்பேஷன்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில். முதல் நோயாளி ஒரு வயதான மூதாட்டி. கண்பார்வை மங்கல் என்று பாட்டி கூற பரிசோதித்ததில் "கண்புரை" என்று தெரிந்தது. கோப்பினில் எழுதி சீனிய்ர் டாக்டரின் அறைக்கு போகச்சொல்லி விட்டு நிமிர்ந்தால் அடுத்த பேஷன்ட் 20 வயதேயான இளம்பெண். "ஏறக்குறைய நம் வயதுதான். சும்மா முழு கண் பரிசோதனைக்காக வந்திருப்பாள்" என்று நினைத்துக்கொண்ட ஆராதனா, "சொல்லுங்க மிஸ். நிர்மலா, என்ன பிரச்சினை கண்ல?" என்று ஆரம்பித்தாள். அந்த பெண் "கண் செக்கப் பண்ணிக்கலாம்னு வந்தேன் மேடம்" என்றாள் மிகுந்த தயக்கத்தோடு. இதற்கென்ன இத்தனை தயக்கம் என்று வியந்த ஆராதனா "ஹெல்த் எல்லாம் நார்மலா உங்களுக்கு?பார்வை எப்படி தெரியுது?" என்று அடுத்தடுத்த கேள்விகளை கேட்கத்தொடங்கினாள். "பார்வை எல்லாம் நல்லாத்தான் தெரியுது டாக்டர். ஆனா..." என்று மீண்டும் தயங்கிய அந்த பெண்ணிடம் "சொல்லுங்க" என்றாள் ஆராதனா. "எனக்கு... syphilis இருக்கிறதா 2 மாசம் முன்னாடி கண்டுப்பிடிச்சாங்க டாக்டர். அதுக்கான ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு இருக்கேன்" என்று ஆராதனாவின் கண்களை பார்க்காமல் தவிர்த்துக்கொண்டே சொன்னவள் ஆராதனாவை ஏறிட்டுப்பார்த்து "அது கண்ணையும் பாதிக்குமாமே!அதான் செக்கப் பண்ணிக்கலாம்னு... என்று கூறிய போது அவளுக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. "syphilis என்பது பால்நோய். இவளோ திருமணமாகாத இளம்பெண். எப்படி?" என்று தனக்குள் யோசித்தவள் தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல், மேற்கொண்டு பரிசோதனைகளை செய்யத்தொடங்கினாள்.
நல்ல வேளையாக அந்த பெண்ணின் கண்களில் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் ஆராதனாவின் மனதில் குழப்பங்களின் பாதிப்பு ஓய்வதாய் இல்லை. அவள் அதற்கு போன மாதம்தான் மகப்பேறு மற்றும் பெண்கள் நலதுறையில் பணியிலிடப்பட்டிருந்தாள். திருமணமாகாத சில இளம்பெண்கள் பொய்யான தாலியுடன் கருக்கலைப்புகள் செய்வதைப்பற்றி அங்கு சில நர்சுகள் பேசிக்கொண்டிருந்தது அவள் நினைவுக்கு வந்தது. அதுவும் அரசாங்க மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளில் இப்படி நடப்பது அதிகரித்து விட்டது என அவர்கள் கூறியதெல்லாம் கோர்வையாய் மனதில் தோன்றி குறுகுறுக்க செய்தது. "இந்த பெண்ணும் அப்படிப்பட்டவள்தானா? ஆமாம், இப்போத்தான் இந்த பாய்ஃப்ரன்ட்ஸ், கேர்ள் ஃப்ரன்ட்ஸ் கூத்தெல்லாம் அதிகமா இருக்கே? என்றெண்ணியவள் ஆர்வம் தாங்க மாட்டாமல் அந்த பெண்ணிடமே நறுக்கென்று கேட்டு விடலாம் என்று துணிந்து "உங்களுக்கு syphilis எப்படி வந்ததுனு சொல்ல முடியுமா மிஸ்.நிர்மலா நீங்க தப்பா நினைச்சுக்கலேன்னா?" என்று கேட்டும் விட்டாள். "எனக்கு மூன்று தங்கைகள் டாக்டர். எங்க அம்மா இறந்து ஆறு மாசமாச்சு" என நிர்மலா ஆரம்பிக்க "ஓ!வறுமையில் தவறான தொழிலில் இறங்கியிருப்பாளோ?" என்று ஆராதனாவின் மனம் அவசரமாய் ஆராய்ச்சியில் இறங்கியது. மனத்தை தலையில் தட்டி அடக்கி விட்டு "சொல்லுங்க" என்றாள்.
"எங்க அம்மா இருந்த வரைக்கும் எங்களை ரொம்ப நல்லா பாத்துப்பாங்க. ஆனா எங்கப்பா எங்கக்கிட்ட பேச கூட மாட்டார். அம்மாவையும் அடிக்கிறது, திட்டறதுனு சண்டை போட்டுக்கிட்டே இருப்பாரு. எங்க யாருக்குமே அவரை அவரை பிடிக்காது. அம்மா இறந்து போனதுமே அப்பா என்கிட்ட,"பாரு!நீ வளர்ந்த பொண்ணு. உன்னால நான் சொல்றதை புரிஞ்சுக்க முடியும்னு நெனைக்கிறேன். எனக்கு நைட்ல ஒருத்தர் துணையில்லாம இருக்க முடியாது.உங்கம்மாவும் இப்போ இல்ல! அதனால நீங்க யாராவதுதான் எனக்கு இனி கம்பெனி கொடுக்கணும்" என்று சொன்ன போது அந்த வார்த்தைகளோட அர்த்தம் கூட எனக்கு லேட்டாத்தான் புரிஞ்சுது. எனக்கு இத யார்க்கிட்ட சொல்றதுனு கூட தெரியல. எங்களுக்கு சொந்தக்காரங்கனு சொல்லிக்கவும் யாருமில்ல. அப்பாவை விட்டுட்டு வந்தா எங்களுக்கு வேற போக்கிடமும் தெரியாது. என்னோட தங்கைகள் எல்லோருமே சின்ன பெண்கள். படிச்சுட்டு இருக்காங்க!அவங்க வாழ்க்கை பாழாயிடக்கூடாதுனு தோணுச்சு! எங்கம்மாவோட ஆசையே நாங்க நல்லா படிச்சு பெரியாளாகணுங்கறது தான்" என்ற அவளது குரல் தழைந்து கொண்டே போக, தொண்டை கமற "அதனால... நானே..." என்ற போது உடைந்து அழ ஆரம்பித்தாள். அவள் தோளில் ஆறுதலாய் கைவைத்து அழுத்திய ஆராதனாவின் கண்களிலும் நீர் துளிர்க்க தொடங்கியது. மனதிலோ அவளது அப்பா பெரும் விருட்சமாய் வேர் விட்டிருந்தார்.