Saturday, April 24, 2010

உம்மேல ஆசைதான்- பாகம் மூன்று

பாகம் ஒன்று, பாகம் இரண்டு

வேலையை அவசரமாக முடித்து விட்டு சீக்கிரமே வீடு வந்து சேர்ந்தாள் தாரிணி. ஆச்சரியமாக அத்தையும் மாமாவும் வீட்டில் இல்லை. அருணின் அறை உள்ளே தாளிடப்பட்டிருந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டதே நிம்மதியாக இருந்தது. அவளது படபடப்பு கொஞ்சம் அடங்கி விட்டிருந்தது. நைட் ஷிஃப்ட் அவளுக்கு வழக்கமான ஒன்று தான். ஆனாலும் இந்த கனவு தான் அவளை பாடாய் படுத்தி வைக்கிறது. அப்படியே படுத்து தூங்கலாம் போல அசதியாக இருந்தது. 'சாப்பிடாமல் தூங்கி விட்டால் இந்த அத்தை வந்து எழுப்பி தொந்தரவு செய்வார். பாவம் எதற்கு அவருக்கு தொல்லை? இந்த அருணிடம் அத்தை எங்கே போயிருக்கிறார் என்று கேட்டு தெரிந்து கொண்டு, வர நேரமாகுமென்றால் ஏதேனும் சமைத்து வைத்து விட்டு படுத்துக் கொள்ளலாம், அத்தைக்கும் உதவியாக இருக்கும்' என்று நினைத்தவள் எழுந்து அருணின் அறையை நோக்கி நடந்தாள்.

அறைக்கதவை தட்ட முற்பட்டவளுக்கு, உள்ளேயிருந்து 'கீச்சு கீச்சென' என பெண்மையான குரல் ஒன்று கேட்டது. 'இவன் அறையில் என்ன இது பெண் குரல்' என்று யோசித்தவள் கதவை தட்டாமல் சிறிது நிதானித்து, அந்த ஓசையை உற்று கவனித்தாள். வார்த்தைகள் ஒன்றும் புரியாமல் போகவும், சாவி துவாரத்தில் காதை வைத்து கேட்க முயற்சித்தாள். "அங்கிள்! அங்கேயெல்லாம் கை வெச்சா அம்மா திட்டுவாங்களே" என்று பேசிக் கொண்டிருந்தது... 'அடக்கடவுளே!ரேஷ்மாவின் குரலல்லவா இது?'.


சாவித்துவாரத்தின் வழியே அருணின் செய்கைகளை பார்த்தவளுக்கு தூக்கி வாரிப்போட்டது. 'இந்த சண்டாளன் தினமும் இவளுக்கு கம்ப்யூட்டரில் விளையாட்டு காட்டுவதாய் பேர் பண்ணிக்கொண்டு இந்த அக்கிரமம் செய்து கொண்டிருக்கிறானா?' என்று நினைத்துக் கொண்டே சாவித்துவாரத்திலிருந்து எழுந்துக் கொண்டு "ஏய் அருண்! கதவைத்திற" என்றாள் கதவை பலமாக தட்டி. சில வினாடிகள் கழித்து கதவு சிறிதாக‌த் திறந்து தலையை வெளியில் நீட்டிய அருண், "என்ன தாரிணி! அம்மாவும் அப்பாவும் ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க! வர நேரமாகும். சமைச்சு வெச்சுருக்காங்களாம்! நீ வந்தால் சாப்பிட்டுட்டு தூங்க சொன்னாங்க" என்றான். சிறிதாய் திறந்திருந்த இடைவெளியில் அவனது அறையின் நீல டிஸ்டெம்பர் பூச்சும், கட்டிலின் ஓர விளிம்பும் கொஞ்சமாய் பார்வைக்கு கிடைததது. இந்த அறையை முன்பு பார்த்தது போலிருந்தது அவளுக்கு. பார்த்திருக்கிறோமா... இந்த வீட்டுக்கு வந்த புதிதில் ஒரு முறை இந்த அறைக்குள் கணினி பயன்படுத்த வந்ததாக ஞாபகம். மற்றபடி இந்த சனியந்தான் எப்பவும் கதவை மூடி வெச்சுருக்குமே? என்றெல்லாம் யோசித்தவளுக்கு சட்டென பிடிப்பட்டது. இதுதான் கனவில் வந்த அந்த அறை.


அவனை மோசமாக திட்ட வேண்டும் போலிருந்தும் நா எழவில்லை அவளுக்கு. 'சரி' என்று தலையாட்டி விட்டு அவள் அறைக்குள் போக திரும்பியவளுக்கு தலை மறுபடி 'விண் விண்ணென' வலிக்க தொடங்கியது. 'ரேஷ்மா இன்னும் உள்ளே இருக்கிறாள்' என்பதையே மறந்து விட்டோமே என நினைத்த‌வள், புதிய தெம்புடன் அவனை நோக்கி 'ரேஷ்மாவை வெளியில் அனுப்பு' என்றாள். "அவ விளையாடிட்டு இருக்கா. இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டுமே" என்று அருண் சொன்னதும், தாரிணிக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்தது. அருண் கன்னத்தில் பளிச்சென ஒரு அறை விட்டாள். இன்னொரு முறை அடிக்க முயன்றவளின் கையை பிடித்துக்கொண்டவன் "எதுக்கு இப்ப்போ அடிக்கறே?" என்றான். "உன்னையெல்லாம் சாகடிக்கணும். நீ செஞ்ச காரியத்தை நான் பாத்தேன்" என்றதும் "என்ன பார்த்தே நீ? எதுக்கு இப்போ கோவப்படுற?" என்றான் அவன். "இன்னும் ஒரு வார்த்தை பேசினே, செருப்படி படுவே" என்று அறைக்கதவை பெரிதாய் திறந்தவள், "ரேஷ்மா! உங்க வீட்டுக்கு போ" என்றதும் அத்தனை நேரம் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்த குழந்தை வெளியே ஓடி விட்டது.

அருண் அவளை முறைத்துக் கொண்டிருப்பதை பொருட்படுத்தாமல், தன்னறைக்கு வந்து தாளிட்டுக் கொண்டாள் தாரிணி. "நாளைக்கு ஒரு நல்ல ஹாஸ்டல் பார்க்கணும்" என்று நினைத்துக் கொண்டே கட்டிலில் சரிந்தாள். மெதுவாக படபடப்பு அடங்கியது. தலைவலியும் காணாமல் போயிருந்தது. ஏதோ ஒரு பாரம் அகன்றது போல் உணர்வு.சைல்டு அப்யூஸ் பற்றி படித்திருந்த‌தெல்லாம் நினைவுக்கு வந்தது. 'என் அணுகுமுறை எத்தனை சரி என்று தெரியவில்லை. ஆனால் அவனிடம் கோபப்படாமல் எப்படி இருக்க முடியும். முதலில் நாளை ரேஷ்மாவிடம் இப்படிப்பட்ட தொடுகைகள் பற்றி எச்சரிக்க வேண்டும்" அதை அவளுக்கு புரியும் விதத்தில் எப்படி சொல்வது. அவள் அம்மாவிடம் சொல்லலாமா?' என பலவாறு யோசித்துக் கொண்டே தாரிணி உறங்கிப் போனாள். சற்று நேரத்தில் மீண்டும் அந்த கனவு. அதே அறை. நெருங்கி வரும் அவன். ஆனால் இம்முறை தாரிணி ஓட முயற்சிக்கவில்லை. அவளை நெடுநேரம் அடித்து துவைத்தாள். இந்த முறை அவனே கதவை திறந்து ஓடத்தொடங்கி விட்டதைக் கண்டு அவளுக்கு சிரிப்பு வந்தது. தாரிணி தூக்கத்திலேயே மெலிதாய் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.

முற்றும்...

5 comments:

 1. என் பேரு தான் கிடைச்சதா இதுக்கு!

  ReplyDelete
 2. யாருப்பா அது மைனஸ் ஓட்டு போட்டது!?

  ReplyDelete
 3. sorry i couldn't say this story is beautiful, because i am a beliver about "stories and poetries are a way of our expressions about our current feelings and by some insidents which personnaly met us"

  so as on view your story on this platform made me to think some thing else, are you ok reena?

  or are you in trouble? else did you faced any thing related incidents which might initiate your mind on this story?

  what ever it is take care yourself

  ReplyDelete
 4. this is my favourite of all your stories ad poems. Beautifully written Reena :)

  ReplyDelete