Wednesday, May 6, 2009

என் இனிய சுஜா... 2

என் இனிய சுஜா... 1




அவரது அலுவலக நண்பர் உதவியுடன் அவரது சவப்பெட்டியை விமானம் வழியே சென்னை அனுப்பி, நானும் சுஜாவும் சென்னை வந்து சேர்ந்தோம் ஆகாய மார்க்கத்தில். என்னை சுற்றி ஏதோ ஒன்று, என்னுள் ஏதோ ஒன்று இறுகி விட்டது போலிருந்தது. என்னால் வாய் விட்டு அழ‌ முடியவில்லை. எப்போதும் என் இறுக்கமான அணைப்பில் சுஜாக்குட்டி இருந்தாள். சேகரின் மீது ஏனோ திடீரென கோபம் வந்தது ஒவ்வொரு சமயங்களில். இப்படி திடீரென தனியே விட்டு விட்டு சென்றால் என்ன செய்வேன் என அவருக்கு எண்ணமே இல்லையோ என்றுக்கூட முட்டாள்தனமாய் யோசித்தேன்."ராதிகா" என்று அழைக்கும் அவர் குரல், கண்களுடன் சேர்ந்து சிரிக்கும் அந்த‌ இதழ்கள் என ஏதேதோ நினைவுக்கு வந்தன. உயிர் பிரியும் போது என்னவெல்லாம் நினைத்திருப்பார் என்றெல்லாம் எண்ணி தன்னிரக்கம் சுரந்தது.



சென்னை வந்து சிறிது நேரத்தில் அவர் உடலை தகனம் செய்தாயிற்று.எனது நாத்தனார், மாமியார், மாமனார்,கொழுந்தனார் என பல உறவுகளும் சூழ்ந்துக் கொண்டு விபத்தை விசாரித்தனர். அதை விட முக்கியமாய் சுஜாக்குட்டியை தத்தெடுப்பதை பற்றி பல கேள்விகள் கேட்டு ஆராய்ந்தனர்.சில பல வருடங்கள் முன்பு எங்களுக்கு குழந்தையில்லை என்பதை பற்றி யாரேனும் பேசினாலே எனக்கு பரிந்துக் கொண்டு வருவார் அவர். இப்போதும் இவர்கள் விசாரிக்கும் போது எங்கிருந்தோ அவர் எனக்காக பரிந்து கொண்டு வருவார் என்று அசட்டுத்தனமாய் தோன்றியது. 'சேகர்? என்னால் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியவில்லை. இங்கே வாங்களேன் ப்ளீஸ்' என்று உள்மனம் அரற்றியது. தாங்காமல் உடைந்து அழ ஆரம்பித்தேன். அணையை யாரோ திறந்து விட்டது போல அழுகை அடங்க மறுத்து வந்துக் கொண்டேயிருந்தது.




அந்த கூட்டத்தில் ஒருவர், "எல்லாம் இந்த குழந்தை வந்த நேரமாத்தான்பா இருக்கும். ஊர், பேர், குலம், கோத்திரம் எதுவும் தெரியாததை பெரியவங்க கிட்டக் கூட அனுமதி கேட்காமல் இவங்களா தத்தெடுக்கிட்டாங்க... வந்து இரண்டு மாசமாகலை. நம்ம புள்ளைய முழுங்கிடுச்சு. சாகற வயசா அவனுக்கு?" என்று மேலும் மேலும் ஏதோ பேசிக் கொண்டே போக, திடுக்கிட்டு தலை நிமிர்ந்தவள், என் சுஜாக்குட்டியை பார்த்தேன். அறிமுகமில்லாத கூட்டத்தில் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தாள் அவள். பாய்ந்து அவளைத்தூக்கி அணைத்து இறுக்கிக் கொண்டேன். அவரது காரியங்கள் முடிந்த கையுடன் அவரது அம்மாவிடம் "அத்தை! நாங்க எங்க ஊருக்கு போறோம்" என்றேன். "எங்க" என்றார் என் முகத்தைப் பார்க்காமலே. "டெஹ்ராடூனுக்கு". "அங்க போய் தனியா என்ன பண்ணப்போறே?". "சுஜாக்குட்டி கூடத்தான் போறேன்". "இங்க பாரு ராதிகா!பைத்தியம் மாதிரி உளறாதே! இங்கயே இரு! இந்த குழந்தையை சென்னையில் தானே தத்தெடுத்தீங்க! அதே இடத்திலேயே திரும்பி ஒப்படைச்சிடலாம். அதுக்கான வழியெல்லாம் பெரியவன் விசாரிச்சுட்டான். உனக்கு இங்க எந்த குறையும் இல்லாம நாங்க பார்த்துக்கறோம். சேகரோட வேலைக்கூட உனக்கு கிடைக்கச் செய்யலாமாம். நீ இங்கேயே இரு" என்றார்.

'என்ன உலகம் இது? நான் குழந்தையில்லாமல் இருந்த போதும் பழித்தார்கள். இப்போது ஒரு குழந்தையோடு இருக்கும் போதுமா பழிக்க வேண்டும்? இதென்ன சேகர்? இப்போதுதான் உங்கள் அருகாமையும் அணைப்பும் எனக்கு அவசியமாய் தேவைப்படுகிறது! i badly need you சேகர்! வந்து விடுங்களேன் ப்ளீஸ்! இந்த சுஜாக்குட்டின்னா உங்களுக்கு உயிராச்சே? இவளைப் பார்த்து எமன் என்று சொல்கிறார்கள் சேகர்' என்று உள்ளே அழுதுக்கொண்டிருந்த எனக்கு திடீரென தோன்றியது. "ஏன் சேகர்? இப்படி ஏதாவது ஆகி, நான் யாருமில்லாமல் தனியா நிற்கக் கூடாதுன்னு தான் என் மனசை மாத்தி சுஜாவை எனக்கு கொடுத்துட்டு போனீங்ககளா? தாங்க் யூ சேகர் தாங்க் யூ". என் மன‌துக்குள் அவரை முத்தமிட்டேன்.பின் என் மாமியாரைப்பார்த்து "இல்லை அத்தை!என்னால சுஜாவை விட்டுட்டு இருக்க முடியாது. அவளை என் கூட இங்க வெச்சுருந்தாலும் உங்க யாராலயும் பொறுத்துக்க முடியாது. அதனால நான் அவளைக் கூட்டிக்கிட்டு போறேன்" என்று விட்டு கிளம்பி விட்டேன் யாருடைய பேச்சையும் காதில் போட்டுக்கொள்ளாமல்... இதோ என் பயணம் ஆரம்பமாகி விட்டது. என் சுஜாவை இறுக்கி அணைத்துக்கொண்டு...

6 comments:

  1. இந்த பாகம் உணர்ச்சிகளை தாங்கி இருந்துச்சு.:)

    அடுத்த பாகம்...?

    ReplyDelete
  2. கதையின் இந்தப் பகுதி முழுதும் உணர்வுக் குவியல்...

    //"ஏன் சேகர்? இப்படி ஏதாவது ஆகி, நான் யாருமில்லாமல் தனியா நிற்கக் கூடாதுன்னு தான் என் மனசை மாத்தி சுஜாவை எனக்கு கொடுத்துட்டு போனீங்ககளா? தாங்க் யூ சேகர் தாங்க் யூ".//

    மிகவும் நெகிழ்வான வரிகள்...

    கதையை தொடருங்கள் ரீனா காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  3. @Thamizhmaangani and புதியவன்...

    கதை முடிஞ்சு போச்சுப்பா... என்ன இது? ரெண்டு பேரும் இப்படி கலாய்ச்சுட்டீங்க:))) முற்றும் என்று ஒரு வார்த்தை போட மறந்துட்டேன் அந்த போஸ்ட்ல!!!

    ReplyDelete
  4. உங்க கமென்ட் என்னை சிந்திக்க வெச்சுடுச்சு(அட நெஜமாத்தான்ப்பா!) ராதிகா சுஜாவுடன் கிளம்புவதோடு அவள் பயணம் ஆரம்பமாகுதே தவிர கதை முடிய வில்லை இல்லயா? என்ன பண்ணட்டும்? எனக்கு இதை எப்படி தொடர்வதுனு தெரியல! தொடர்ந்தாலும் எப்படி முடிக்கறது?


    உங்க ரெண்டு பேர்ல யாராவது இல்ல ரெண்டு பேருமே இந்த கதைக்கு இன்னொரு பாகம் எழுதலாமே!(ஒரு கமென்ட் போட வந்தது தப்பா போச்சுய்யா என நீங்கள் முனகுவது கேக்குது!)

    ReplyDelete
  5. //reena said...
    உங்க கமென்ட் என்னை சிந்திக்க வெச்சுடுச்சு(அட நெஜமாத்தான்ப்பா!) ராதிகா சுஜாவுடன் கிளம்புவதோடு அவள் பயணம் ஆரம்பமாகுதே தவிர கதை முடிய வில்லை இல்லயா? என்ன பண்ணட்டும்? எனக்கு இதை எப்படி தொடர்வதுனு தெரியல! தொடர்ந்தாலும் எப்படி முடிக்கறது?


    உங்க ரெண்டு பேர்ல யாராவது இல்ல ரெண்டு பேருமே இந்த கதைக்கு இன்னொரு பாகம் எழுதலாமே!(ஒரு கமென்ட் போட வந்தது தப்பா போச்சுய்யா என நீங்கள் முனகுவது கேக்குது!)//

    கதை படிக்க மட்டும் தான் எனக்குத் தெரியும் ரீனா...அதனால, இந்த கதையின் தொடர்ச்சியை எழுதும் பொறுப்பை கலக்கல் கதைகள் எழுதி கலக்கும் நம்ம தமிழ் (எ) காயத்ரியிடம் ஒப்படைகிறோம்...

    ReplyDelete
  6. Dear friend.....
    romba nalla irukku athuvum
    //"ஏன் சேகர்? இப்படி ஏதாவது ஆகி, நான் யாருமில்லாமல் தனியா நிற்கக் கூடாதுன்னு தான் என் மனசை மாத்தி சுஜாவை எனக்கு கொடுத்துட்டு போனீங்ககளா? தாங்க் யூ சேகர் தாங்க் யூ".// intha varigalil thaan kathaiyin karuvae ullathu..... miga arumaiyana kathai.... itharku pictures poadanum nu ivlo kasdap pattirukkavaenaam... because nalla story ku picture mukkiyam illa..... thodanrthu ezhuthungal... all the best...

    ReplyDelete