Thursday, May 14, 2009

என் இனிய சுஜா...

"என்னடா ராதி? இப்படி யோசிக்கறே? ஏதாவது பதில் சொல்லு!" என்று என் கனனத்தை நிமிண்டிய கணவரை நிமிர்ந்து பார்த்தேன். "உடனே பதில் சொல்லுனு கேட்டா என்னங்க சொல்ல முடியும்? இது எந்த அளவு சரியா வரும்னு எனக்கு தெரியலை! ஒரு குழந்தையை தத்தெடுக்கிறது அப்படிங்கறது அத்தனை சாதாரணமான விஷயமில்லைங்க!" என்றவளை, "உண்மைதான் ராதிகா! ஆனா நமக்கு குழந்தை பிறக்குமானு உறுதியா தெரியல. உனக்கு குழந்தைன்னா எவ்ளோ பிடிக்கும்னு எனக்கு தெரியும்! நமக்கு வயசும் முப்பத்தைந்தை தாண்டியாச்சு! இப்போ தத்தெடுத்தா அதை வளர்த்து ஆளாக்க வயசு சரியா இருக்கும்!ஒரு குழந்தை இல்லாம வாழ்க்கை முழுமையடையும்னு எனக்கு தோணலை ராதி! நம்க்கு குழந்தை பிறக்கலைங்கற காரணாத்துக்காக வாழ்க்கையோட இனிய சுவாரசியங்களை நாம ஏன் இழக்கணும்? அதை விட, ஒரு குழந்தையை தத்தெடுக்கிறோம்னா அதுக்கும் ஒரு புது வாழ்க்கை கிடைக்கணும்ல?" என்றார் சேகர்.
"சரி! நாம் அந்த குழந்தைக்கு நிஜ அப்பா அம்மா இல்லனு தெரிஞ்சா பிற்காலத்தில் அதனால பிரச்சினை எதுவும் வராதா?" "இல்லம்மா!லீகல் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் சரியா செஞ்சுடுவோம். பிற்காலத்தில் அவசியமேற்பட்டா அந்த குழந்தைக்கு உண்மையை சொல்லுவோம். இல்லைனா நாமே அப்பா அம்மாவா கடைசி வரை இருந்துட்டு போவோம். என்ன பிரச்சினை? அந்த குழந்தை வள‌ர்ந்த சொன்னாக்கூட அதுக்கு புரிஞ்சுக்கற மனப்பக்குவம் வந்துடும் ராதிகா! நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை!எத்தனை தமிழ் சினிமாவில் பார்த்திருப்போம்?" என்று சேகர் எத்தனை தான் என்னை சமாதானப்படுத்த முயன்றாலும் ஏனோ எனக்குள் ஒன்று மறுத்துக் கொண்டேயிருந்தது. சில நாட்களில் மறுப்பதற்கு என்ன கார‌ணம் இருக்கிறது என்று நானே யோசிக்க தொடங்கினேன்.
நாங்கள் டெஹ்ராடூனில் வசித்துக்கொண்டிருக்கிறோம். இருவருமே மத்திய அரசுத்துறை அதிகாரிகள். எங்களுக்கு திருமணமாகி 12 வருடங்களாகி விட்டன. முதல் இரண்டு மூன்று வருடங்கள் குழந்தையில்லை என்பது குறையாக எங்களுக்கு தோன்றவில்லை. ஆனால் உறவுகள் தொணதொணக்க தொடங்கின. அப்போது எங்களுக்கும் இது குறையென தோன்றத் தொடங்கியது.மருத்துவர்களை பொறுத்தவரை எங்கள் இருவரிடமும் ஒரு குறையும் இல்லை. ஆனால் காலம் என்னவோ கடந்து கொண்டேயிருந்தது ஒரு மாற்றமுமின்றி...
உறவுகளின் நச்சரிப்பால் பல சமயம் தனிமையில் அழுகை என் வழக்கமாயிற்று. எங்கே அவர்கள் மத்தியில் நான் உருக்குலைந்து விடுவேனோ என்று சேகருக்கு பயமாகி விட மிகுந்த முயற்சியின் பேரில் டெஹ்ராடூனுக்கு மாற்றலாகி வந்தோம் இருவரும். புதிய இடம்... புதிய சூழல்... தெரியாத மனிதர்கள்... வாழ்க்கை மீண்டும் சுவாரசியமாக ஆரம்பித்தது எங்களுக்கு... சேகரின் அன்பும் அரவணைப்பும் காலம் மறக்க செய்தன. குளிர் பிரதேசத்தில் நெருக்கம் மேலும் இயல்பாய் மலர்ந்தது. குறைகள் மறந்து வாழ்க்கை வெகு இயல்பாய் மாறிப்போனது. அவரை நான் எப்போதும் விட அதிகமாய் நேசித்தேன். ஆனாலும் வருடங்கள் கடக்க, சில நேரங்களில் ஏதும் இட்டு நிரப்ப முடியாத வெறுமையொன்று எங்களது அழகான வீட்டிலும், ஏன், உறவிலும் கூட நிலவுவதாய் தோன்றும். அதை குழந்தை இல்லாதவர்களால் மட்டுமே உணர முடியும்
நாளடைவில் சில நேர வெறுமைகள் நீள ஆரம்பித்தன. அத்தகைய ஒரு பொழுதில்தான் சேகர் குழந்தையை தத்தெடுப்பதை பற்றி என்னிடம் பேசத்தொடங்கினார்.ஒரு நாள் எனக்கும் இந்த யோசனையில் சம்மதம் தோன்ற, இருவருமே சென்னைக்கு கிளம்பினோம். அங்கே உள்ள ஒரு குறிப்பிட்ட அமைப்பில்தான் தத்தெடுக்க அவருக்கு விருப்பம். அந்த அமைப்பை பற்றி சேகருடைய நண்பர் ஒருவர் சர்ட்டிஃபிகேட் கொடுத்திருந்தார் குறிப்பாக அமைப்பின் நிறுவனரைப்பற்றி. அவரைப் பார்த்து பேசியதுமே, சர்ட்டிஃபிகேட் எத்தனை உண்மை என்று புரிந்தது. நாங்கள் சில மாதங்கள்/நாட்கள் வயதேயான குழந்தையையே தத்தெடுக்க விரும்பினோம். அப்போதுதான் குழந்தைக்கு எங்கள் மீதான பிடிப்பு இயல்பாக வரும் என நினைத்தோம். அதிர்ஷ்டவசமாக அப்படி 2 மாதங்களேயான ஒரு பெண் குழந்தை அங்கே இருக்க ஒரு வக்கீலின் உதவியுடன் தத்தெடுப்பிற்கான ஃபார்மலிட்டீஸ் முடிக்கப்பட்டன. சேகர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். "அழகா இருக்கால்ல ராதி குட்டிப்பாப்பா?" என்ற அவர் முகத்தை பார்க்கையில் எனக்குமே சந்தோஷமாய் இருந்தது. குழந்தையின் பிறப்பு விவரங்கள் எதுவுமே அந்த இல்லத்தில் அறிந்திருக்கப்படவில்லை. மெடிக்கல் காரணங்களுக்காக கேட்ட போது, "illegitimate child" என்ற ஒற்றைப்பதில் தான் கிடைத்தது. என் கைகளில் இருந்த அவளை பார்த்தேன். ரோஜாப்பூ குவியலாய் மலர்ந்தது போலிருந்தது. என்ன முத்திரை இது? "illegitimate child??" இவளுக்கு தெரியுமா இது? சிலர் வருடக்கணக்காய் தவமிருக்க, வேண்டாத இடத்தில் பிறந்து புறக்கணிக்கப்பட்டு... நினைக்கவே வலித்தது எனக்கு.
குழந்தையுடன் நாங்கள் டெஹ்ராடூனுக்கு வந்து 2 மாதங்கள் ஓடி விட்டன. எங்கள் ரோஜாப்பூ குவியலுக்கு "சுஜா" என்று பெயரிட்டுள்ளோம். குழந்தை ஒவ்வொரு நாளும் புதிதாய் வளர்வது போலிருந்தது. இப்போது தான் தலை கொஞ்சம் நின்றிருக்கிறது. எங்களுக்கு பொழுதெல்லாம் இவளுடன் தான் போகிறது. நான் என் வேலையையும் ராஜினாமா செய்தாகி விட்டது. சுஜாக்குட்டி நன்றாக விழித்து விழித்து எங்கள் முகங்களை பார்க்கிறாள். நான் வாய் ஓயாமல் ஏதோ பேசிக்கொண்டேயிருக்க அடிக்கடி அவளது பொக்கை வாய் திறந்து சிரிக்கிறாள். அந்த ஒரு சிரிப்பு போதும் அவளுக்கு எல்லாரையும் கவர்ந்திழுக்க...
சேகருக்கு ஆஃபீஸை தவிர மற்ற நேரமெல்லாம் சுஜாதான். அவளை கொஞ்சுவதற்கு எங்கிருந்துதான் வார்த்தைகள் பிறக்கும் என்றே தெரிவதில்லை.நித்தம் ஒரு புதுப்பெயர்தான் அவளுக்கு அர்த்தம் புரியாத அழகு மொழிகளில்.. எல்லாவற்றுக்கும் அவளது பதில் விழிப்பும், சின்ன சிரிப்பும் தான். அவளை இங்குள்ள குழந்தைனல மருத்துவரிடம் காட்டியதில் சில இரத்த பரிசோதனைகள் அவசியம் என்று செய்ய சொன்னார்.hஇவ் இல்லை என்று ஊர்ஜிதப்படுத்த. மேலும் கொஞ்சம் மாறுகண் போல இருக்கிறது என்று கண் பரிசோதனை வேறு குட்டிமாவிற்கு. அங்கே அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று கூறிவிட்ட பின்பு நாங்கள் நிம்மதியாக மூச்சு விட்டோம். சுஜாக்குட்டி இப்போது நன்கு கொழுக் மொழுக் என்றிருக்கிறாள். குழந்தை கொஞ்சம் ஓவர்வெயிட் என்று டாக்டர் சொல்ல அப்படி ஒரு கோபம் வந்து விட்டது அவருக்கு. "உங்களை ஓவர்வெயிட்டுனு சொன்னால் கூட இவ்ளோ கோபம் வராது போல உங்களுக்கு" என்று அவரை சீண்டிக்கொண்டிருந்தேன் அன்று முழுதும்.
மருத்துவர் அறிவரைப்படி அவளுக்கான "artificial milk formulations" எல்லாம் கரைத்து புகட்ட கற்றுக்கொண்டேன்.அவளுக்கு புட்டிப்பால் புகட்ட அவள் சின்ன அதரங்கள் திறந்து "சப் சப்" என்று சப்தமிட்டு அதை குடித்துக்கொண்டே என்னைப் பார்த்து விழிக்கையில் எல்லாம் என்னுள் சிறு சிறு நெகிழ்வுகள் தோன்றும். "என்னால் இவளுக்கு பால் புகட்ட முடியவில்லையே" என்று வருந்துவதுமுண்டு. தத்தெடுத்த குழந்தையிடம் என்னால் முழுமையாக அன்பு செலுத்த முடியுமா என்ற என் பழைய சந்தேகங்களையெல்லாம் தன் பிஞ்சுக் கால்களால் உதைத்துக்கொண்டிருக்கிறாள் என் சுஜாக்குட்டி. தோளில் சாய்த்துக்கொள்கையில் என் முந்தானையெல்லாம் ஜொள்ளு விட்டு ஈரமாக்குவாள். என்னுள் தாய்மை பெருகச் செய்யும் வித்தைகளை எல்லாம் அவள் தன் சின்ன சின்ன விரல்களிலே வைத்திருப்பதாக சில சமயம் எண்ணுவேன். வாழ்க்கை வெகுவாக மாறி விட்டிருந்தது எனக்கும் அவருக்கும். சுஜாக்குட்டி எங்கள் நெருக்கத்தை பல மடங்கு அதிகரித்து விட்டிருந்தாள். மீண்டும் புதிதாய் வாழத்தொடங்கியது போலிருக்கிறது.
அன்று... அவர் ஆஃபீஸ் கிளம்பி விட்டார். என் வேலைகள் எல்லாம் முடிந்து சுஜாக்குட்டிக்கு பால் புகட்டிக்கொண்டிருந்தேன். திடீரென டெலிஃபோன் அலற, சுஜாக்குட்டியை பத்திரமாக தொட்டிலில் கிடத்தி விட்டு, எழுந்து சென்று ரிஸீவரை எடுத்து "ஹலோ" என்றேன் சுஜாவின் மீது ஒரு கண் வைத்தப்படியே. "மிஸஸ் ராதிகா சேகர்?" என்றது மறுமுனை. "எஸ்" என்றேன். "வீ ஆர் ஸாரி டூ சே திஸ். உங்கள் கணவருக்கு அலுவலகம் வரும் வழியில் ஒரு மோசமான சாலை விபத்து நேர்ந்து விட்டது.கார் லாரியில் மோதி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.இப்போது அவர் உடல் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வந்தீர்களானால்..." போனில் ஆங்கில வாக்கியங்கள் தொடர்ந்து கொண்டே போக, என் மனதில் அவற்றுக்கான தமிழாக்கங்கள் எப்போதோ நின்றுப்போயிருந்தன.
ரிஸீவரை பிடித்திருந்த என் கை மரத்துபோனது போல நின்றிருந்தேன். இன்னும் சுஜாவின் மீது ஒரு கண் இருந்தது. மேலே எங்கோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் அவள். "ஹலோ ஹலோ... மிஸஸ் ராதிகா! ஆர் யூ ஆல்ரைட்?" என்ற மறுமுனைகுரலில் சுதாரித்துக் கொண்டவள் கண்களில் மல்கிய நீரை சிரமப்பட்டு உள்ளே அனுப்பினாள். "எஸ் ஐ வில் கம் தேர்" என்று விவரங்களை கேட்டறிந்து கொண்டு என் சுஜாக்குட்டியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன்.
சேகர் இறந்திருப்பார் என்று நம்பவே முடியவில்லை. காலையில் கூட இந்த சுஜாக்குட்டியின் இரு கன்னங்களையும் முத்தமிட்டு விட்டு, அப்படியே என் கன்னத்திலும்... சுஜாவின் கன்னங்களை என்னையறியாமல் கை வருடியது. நான் எங்கே அழுது விட போகிறேனோ என்று பயமாய் இருந்தது. சுஜாக்குட்டியை இன்னும் இறுக்கமாய் அணைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தேன். அங்கே சேகரைப்பார்க்க போகிறேன் என்று காத்திருக்க, நான் பார்த்தது வெறும் துணி சுற்றிய ஒரு உருவத்தை... "இது சேகர் இல்லை" என்று நான் நம்ப மறுக்கும் முன்னமே அவரது அடையாளங்கள் என்னிடம் காண்பிக்கப்பட்டு உறுதிச் செய்யப்பட்டன. அவரது உறவுகளுக்கு தகவல் தெரிவிக்க உடனே என்னை சென்னை வரச்சொல்லி பதைபதைத்தனர்.
அவரது அலுவலக நண்பர் உதவியுடன் அவரது சவப்பெட்டியை விமானம் வழியே சென்னை அனுப்பி, நானும் சுஜாவும் சென்னை வந்து சேர்ந்தோம் ஆகாய மார்க்கத்தில். என்னை சுற்றி ஏதோ ஒன்று, என்னுள் ஏதோ ஒன்று இறுகி விட்டது போலிருந்தது. என்னால் வாய் விட்டு அழ‌ முடியவில்லை. எப்போதும் என் இறுக்கமான அணைப்பில் சுஜாக்குட்டி இருந்தாள். சேகரின் மீது ஏனோ திடீரென கோபம் வந்தது ஒவ்வொரு சமயங்களில். இப்படி திடீரென தனியே விட்டு விட்டு சென்றால் என்ன செய்வேன் என அவருக்கு எண்ணமே இல்லையோ என்றுக்கூட முட்டாள்தனமாய் யோசித்தேன்."ராதிகா" என்று அழைக்கும் அவர் குரல், கண்களுடன் சேர்ந்து சிரிக்கும் அந்த‌ இதழ்கள் என ஏதேதோ நினைவுக்கு வந்தன. உயிர் பிரியும் போது என்னவெல்லாம் நினைத்திருப்பார் என்றெல்லாம் எண்ணி தன்னிரக்கம் சுரந்தது.
சென்னை வந்து சிறிது நேரத்தில் அவர் உடலை தகனம் செய்தாயிற்று.எனது நாத்தனார், மாமியார், மாமனார்,கொழுந்தனார் என பல உறவுகளும் சூழ்ந்துக் கொண்டு விபத்தை விசாரித்தனர். அதை விட முக்கியமாய் சுஜாக்குட்டியை தத்தெடுப்பதை பற்றி பல கேள்விகள் கேட்டு ஆராய்ந்தனர்.சில பல வருடங்கள் முன்பு எங்களுக்கு குழந்தையில்லை என்பதை பற்றி யாரேனும் பேசினாலே எனக்கு பரிந்துக் கொண்டு வருவார் அவர். இப்போதும் இவர்கள் விசாரிக்கும் போது எங்கிருந்தோ அவர் எனக்காக பரிந்து கொண்டு வருவார் என்று அசட்டுத்தனமாய் தோன்றியது. 'சேகர்? என்னால் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியவில்லை. இங்கே வாங்களேன் ப்ளீஸ்' என்று உள்மனம் அரற்றியது. தாங்காமல் உடைந்து அழ ஆரம்பித்தேன். அணையை யாரோ திறந்து விட்டது போல அழுகை அடங்க மறுத்து வந்துக் கொண்டேயிருந்தது.
அந்த கூட்டத்தில் ஒருவர், "எல்லாம் இந்த குழந்தை வந்த நேரமாத்தான்பா இருக்கும். ஊர், பேர், குலம், கோத்திரம் எதுவும் தெரியாததை பெரியவங்க கிட்டக் கூட அனுமதி கேட்காமல் இவங்களா தத்தெடுக்கிட்டாங்க... வந்து இரண்டு மாசமாகலை. நம்ம புள்ளைய முழுங்கிடுச்சு. சாகற வயசா அவனுக்கு?" என்று மேலும் மேலும் ஏதோ பேசிக் கொண்டே போக, திடுக்கிட்டு தலை நிமிர்ந்தவள், என் சுஜாக்குட்டியை பார்த்தேன். அறிமுகமில்லாத கூட்டத்தில் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தாள் அவள். பாய்ந்து அவளைத்தூக்கி அணைத்து இறுக்கிக் கொண்டேன். அவரது காரியங்கள் முடிந்த கையுடன் அவரது அம்மாவிடம் "அத்தை! நாங்க எங்க ஊருக்கு போறோம்" என்றேன். "எங்க" என்றார் என் முகத்தைப் பார்க்காமலே. "டெஹ்ராடூனுக்கு". "அங்க போய் தனியா என்ன பண்ணப்போறே?". "சுஜாக்குட்டி கூடத்தான் போறேன்". "இங்க பாரு ராதிகா!பைத்தியம் மாதிரி உளறாதே! இங்கயே இரு! இந்த குழந்தையை சென்னையில் தானே தத்தெடுத்தீங்க! அதே இடத்திலேயே திரும்பி ஒப்படைச்சிடலாம். அதுக்கான வழியெல்லாம் பெரியவன் விசாரிச்சுட்டான். உனக்கு இங்க எந்த குறையும் இல்லாம நாங்க பார்த்துக்கறோம். சேகரோட வேலைக்கூட உனக்கு கிடைக்கச் செய்யலாமாம். நீ இங்கேயே இரு" என்றார். 'என்ன உலகம் இது? நான் குழந்தையில்லாமல் இருந்த போதும் பழித்தார்கள். இப்போது ஒரு குழந்தையோடு இருக்கும் போதுமா பழிக்க வேண்டும்? இதென்ன சேகர்? இப்போதுதான் உங்கள் அருகாமையும் அணைப்பும் எனக்கு அவசியமாய் தேவைப்படுகிறது! i badly need you சேகர்! வந்து விடுங்களேன் ப்ளீஸ்! இந்த சுஜாக்குட்டின்னா உங்களுக்கு உயிராச்சே? இவளைப் பார்த்து எமன் என்று சொல்கிறார்கள் சேகர்' என்று உள்ளே அழுதுக்கொண்டிருந்த எனக்கு திடீரென தோன்றியது. "ஏன் சேகர்? இப்படி ஏதாவது ஆகி, நான் யாருமில்லாமல் தனியா நிற்கக் கூடாதுன்னு தான் என் மனசை மாத்தி சுஜாவை எனக்கு கொடுத்துட்டு போனீங்களா? தாங்க் யூ சேகர் தாங்க் யூ". என் மன‌துக்குள் அவரை முத்தமிட்டேன்.பின் என் மாமியாரைப்பார்த்து "இல்லை அத்தை!என்னால சுஜாவை விட்டுட்டு இருக்க முடியாது. அவளை என் கூட இங்க வெச்சுருந்தாலும் உங்க யாராலயும் பொறுத்துக்க முடியாது. அதனால நான் அவளைக் கூட்டிக்கிட்டு போறேன்" என்று விட்டு கிளம்பி விட்டேன் யாருடைய பேச்சையும் காதில் போட்டுக்கொள்ளாமல்... இதோ என் பயணம் ஆரம்பமாகி விட்டது. என் சுஜாவை இறுக்கி அணைத்துக்கொண்டு...

பி.கு: இது தாங்க "என் இனிய சுஜா"வின் முழுக்கதை. இதைப் படங்களுடன் போட ஆசைப்பட்டு படங்களை கடைசிப்பட்தியில் ஆரம்பித்து இணைத்த‌தில் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் மாற்றி அரேஞ்ஜ் ஆகி விட்டன(உருப்படியா ஒரு கதை எழுதியிருக்கேன்னு நெனச்சா அதிலேயும் இத்தனை சொதப்பல்). முற்றும்னு போட மறந்ததால அடுத்த பகுதி எங்கேனு எல்லாம் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க! அடுத்த பாகத்தை தொடர என் தோழி வேறு பயங்கரமாக ஐடியா கொடுத்தாள்! "சேகர் சாகாமல் அடுத்த பகுதியில் வந்து விடலாம்" என்றெல்லாம்.... (என்னைப் பார்த்தா என்ன மெகா சீரியலுக்கு எழுதற மாதிரியா இருக்கு:(()இதிலெல்லாம் டெரர் ஆகி ஒழுங்கான முழுக்கதையையும் பதிவிட்டு விட்டேன்.

9 comments:

  1. கதையின் இறுதிப்பகுதி ரிபீட் ஆகதேன்னு பார்த்தா, குறிப்பைக் கொடுத்து பால் வார்த்தீங்க.

    கதை நல்லா இருக்குங்க. எந்த பிசிறுமில்லாமல். உங்களுக்குள் இருக்கும் கதை சொல்லியை நன்கு உலவவிடுங்கள். நிறைய கதை படைக்கட்டும்!!!

    ReplyDelete
  2. சில நிமிடங்கள் மறந்து பயணித்தேன், நல்ல எழுத்தோட்டம்

    \\ஆங்கில வாக்கியங்கள் தொடர்ந்து கொண்டே போக, என் மனதில் அவற்றுக்கான தமிழாக்கங்கள் எப்போதோ நின்றுப்போயிருந்தன.\\

    நான் மிகவும் இரசித்த இடம்.

    ReplyDelete
  3. நன்றி ஆதவா... :))))

    ReplyDelete
  4. நன்றி ஜமால்... ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க இந்த வலைப்பக்கம்...

    ReplyDelete
  5. என் வலைப்பூ பக்கம் வந்தது அறிந்தேன்.
    மிக்க மகிழ்ச்சி ரீனா...

    நல்லா கதை எழுதுரீங்க..
    வாழ்த்துகள்..

    இனி அடிக்கடி வருவோம்ல..
    :-)

    ReplyDelete
  6. முழுக்கதையையும் படித்து விட்டேன் கதையின் முடிவை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது ரீனா...

    ReplyDelete
  7. //(என்னைப் பார்த்தா என்ன மெகா சீரியலுக்கு எழுதற மாதிரியா இருக்கு:(()//

    அதற்குக் கூட முயற்சி செய்யலாம் நீங்கள்...

    ReplyDelete
  8. நன்றி வேத்தியன்... கண்டிப்பா வாங்க...

    ReplyDelete
  9. புதியவன் said...
    முழுக்கதையையும் படித்து விட்டேன் கதையின் முடிவை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது ரீனா...

    REENA SAID,...
    //நன்றி புதியவன்...//

    புதியவன் said...
    என்னைப் பார்த்தா என்ன மெகா சீரியலுக்கு எழுதற மாதிரியா இருக்கு:(()அதற்குக் கூட முயற்சி செய்யலாம் நீங்கள்...

    REENA SAID...
    //என்ன இப்படி சொல்லிட்டீங்க?//

    ReplyDelete