"சரி! நாம் அந்த குழந்தைக்கு நிஜ அப்பா அம்மா இல்லனு தெரிஞ்சா பிற்காலத்தில் அதனால பிரச்சினை எதுவும் வராதா?" "இல்லம்மா!லீகல் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் சரியா செஞ்சுடுவோம். பிற்காலத்தில் அவசியமேற்பட்டா அந்த குழந்தைக்கு உண்மையை சொல்லுவோம். இல்லைனா நாமே அப்பா அம்மாவா கடைசி வரை இருந்துட்டு போவோம். என்ன பிரச்சினை? அந்த குழந்தை வளர்ந்த சொன்னாக்கூட அதுக்கு புரிஞ்சுக்கற மனப்பக்குவம் வந்துடும் ராதிகா! நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை!எத்தனை தமிழ் சினிமாவில் பார்த்திருப்போம்?" என்று சேகர் எத்தனை தான் என்னை சமாதானப்படுத்த முயன்றாலும் ஏனோ எனக்குள் ஒன்று மறுத்துக் கொண்டேயிருந்தது. சில நாட்களில் மறுப்பதற்கு என்ன காரணம் இருக்கிறது என்று நானே யோசிக்க தொடங்கினேன்.

அதிர்ஷ்டவசமாக அப்படி 2 மாதங்களேயான ஒரு பெண் குழந்தை அங்கே இருக்க ஒரு வக்கீலின் உதவியுடன் தத்தெடுப்பிற்கான ஃபார்மலிட்டீஸ் முடிக்கப்பட்டன. சேகர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். "அழகா இருக்கால்ல ராதி குட்டிப்பாப்பா?" என்ற அவர் முகத்தை பார்க்கையில் எனக்குமே சந்தோஷமாய் இருந்தது. குழந்தையின் பிறப்பு விவரங்கள் எதுவுமே அந்த இல்லத்தில் அறிந்திருக்கப்படவில்லை. மெடிக்கல் காரணங்களுக்காக கேட்ட போது, "illegitimate child" என்ற ஒற்றைப்பதில் தான் கிடைத்தது. என் கைகளில் இருந்த அவளை பார்த்தேன். ரோஜாப்பூ குவியலாய் மலர்ந்தது போலிருந்தது. என்ன முத்திரை இது? "illegitimate child??" இவளுக்கு தெரியுமா இது? சிலர் வருடக்கணக்காய் தவமிருக்க, வேண்டாத இடத்தில் பிறந்து புறக்கணிக்கப்பட்டு... நினைக்கவே வலித்தது எனக்கு.
குழந்தையுடன் நாங்கள் டெஹ்ராடூனுக்கு வந்து 2 மாதங்கள் ஓடி விட்டன. எங்கள் ரோஜாப்பூ குவியலுக்கு "சுஜா" என்று பெயரிட்டுள்ளோம். குழந்தை ஒவ்வொரு நாளும் புதிதாய் வளர்வது போலிருந்தது. இப்போது தான் தலை கொஞ்சம் நின்றிருக்கிறது. எங்களுக்கு பொழுதெல்லாம் இவளுடன் தான் போகிறது. நான் என் வேலையையும் ராஜினாமா செய்தாகி விட்டது. சுஜாக்குட்டி நன்றாக விழித்து விழித்து எங்கள் முகங்களை பார்க்கிறாள். நான் வாய் ஓயாமல் ஏதோ பேசிக்கொண்டேயிருக்க அடிக்கடி அவளது பொக்கை வாய் திறந்து சிரிக்கிறாள். அந்த ஒரு சிரிப்பு போதும் அவளுக்கு எல்லாரையும் கவர்ந்திழுக்க...
சேகருக்கு ஆஃபீஸை தவிர மற்ற நேரமெல்லாம் சுஜாதான். அவளை கொஞ்சுவதற்கு எங்கிருந்துதான் வார்த்தைகள் பிறக்கும் என்றே தெரிவதில்லை.நித்தம் ஒரு புதுப்பெயர்தான் அவளுக்கு அர்த்தம் புரியாத அழகு மொழிகளில்.. எல்லாவற்றுக்கும் அவளது பதில் விழிப்பும், சின்ன சிரிப்பும் தான். அவளை இங்குள்ள குழந்தைனல மருத்துவரிடம் காட்டியதில் சில இரத்த பரிசோதனைகள் அவசியம் என்று செய்ய சொன்னார்.hஇவ் இல்லை என்று ஊர்ஜிதப்படுத்த. மேலும் கொஞ்சம் மாறுகண் போல இருக்கிறது என்று கண் பரிசோதனை வேறு குட்டிமாவிற்கு. அங்கே அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று கூறிவிட்ட பின்பு நாங்கள் நிம்மதியாக மூச்சு விட்டோம்.சுஜாக்குட்டி இப்போது நன்கு கொழுக் மொழுக் என்றிருக்கிறாள். குழந்தை கொஞ்சம் ஓவர்வெயிட் என்று டாக்டர் சொல்ல அப்படி ஒரு கோபம் வந்து விட்டது அவருக்கு. "உங்களை ஓவர்வெயிட்டுனு சொன்னால் கூட இவ்ளோ கோபம் வராது போல உங்களுக்கு" என்று அவரை சீண்டிக்கொண்டிருந்தேன் அன்று முழுதும்.
தோளில் சாய்த்துக்கொள்கையில் என் முந்தானையெல்லாம் ஜொள்ளு விட்டு ஈரமாக்குவாள். என்னுள் தாய்மை பெருகச் செய்யும் வித்தைகளை எல்லாம் அவள் தன் சின்ன சின்ன விரல்களிலே வைத்திருப்பதாக சில சமயம் எண்ணுவேன். வாழ்க்கை வெகுவாக மாறி விட்டிருந்தது எனக்கும் அவருக்கும். சுஜாக்குட்டி எங்கள் நெருக்கத்தை பல மடங்கு அதிகரித்து விட்டிருந்தாள். மீண்டும் புதிதாய் வாழத்தொடங்கியது போலிருக்கிறது.











